இலங்கைப் போர்ச்சூழலில் தமிழர் பகுதியிலிருந்த அறிவுச் செல்வங்கள் அழிந்ததை அறிந்திருக்கின்றோம். யாழ் பொது நூலகம் ஜூன் 1, 1981 இரவு எரிக்கப்பட்டதை அறிந்திருக்கின்றோம். அன்றிரவே ஈழநாடு பத்திரிகை நிறுவனமும் எரிக்கப்பட்டு, ஊழியர்கள் படுகாயமடைந்ததையும் அறிந்திருக்கின்றோம். ஈழநாடு பத்திரிகை மீண்டும் இந்திய அமைதிப்படையினரின் காலத்தில் எரிக்கப்பட்டுள்ளதையும் அறிந்திருக்கின்றோம்.

ஆனால், இன்னுமொரு தமிழர் அறிவுச் செல்வமும் அழிக்கப்பட்ட விடயத்தை இந்தக் காணொளி  மூலம்தான்  அறிந்துகொண்டேன். இது  பற்றி அதிகமாகப் பத்திரிகைகளில் நான் வாசிக்காததால் அறிய முடியாமால் போயிற்று.

இவ்வழிவு இந்திய அமைதி காக்கும் படையினரால் ஏற்படுத்தப்பட்ட அழிவு. நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானதும், இலங்கைத் தமிழ் கலை, இலக்கிய வரலாற்றில் முக்கியமானதொரு கலை, இலக்கிய மற்றும் நகைச்சுவைச் சஞ்சிகையான 'சிரித்திரன்' சஞ்சிகைதான் இவ்விதம் அழிக்கப்பட்டது. இவ்விதம் இக்காணொளியில் தற்போது இலண்டனில் வாழும் ,'சிரித்திரன்' ஆசிரியர் அமரர் சிவஞானசுந்தரத்தின்  மகள்,  திருமதி வாணி சுந்தர் நினைவுகூர்கின்றார்.

இந்திய அமைதி காக்கும் படையினர் சிரித்திரன் ஆசிரியரின் கே.கே.எஸ் வீதியிலிருந்த சிரித்திரன் அச்சுக்கூட உபகரணங்களை, அலுவலகத்தை,  சிரித்திரன் இதழ்களின் அதுவரை காலம் வெளிவந்த முழுமையான சேகரிப்பினை, ஆசிரியரின் நூலகத்தினை எல்லாம் எரித்து அழித்ததாகவும், அதன் பின் அவர்களது இல்லத்தைத் தமது முகாமாக்கியிருந்ததாகவும் அவர் சம்பவங்களை விபரிக்கையில் நினைவு  கூர்கின்றார்.

இவ்விதம் சிரித்திரன் சஞ்சிகையின் மேல் புரியப்பட்ட தாக்குதல் பற்றியும், அழிவுகள் பற்றியும் ஏன் இதுவரை அதிகமாக நினைவு கூரப்படுவதில்லை? எனக்கே இன்றுதான் இவ்விடயம் தெரிய வந்தது? இதுபோல் பலருக்கும் இவ்விடயம் தெரியாமலிருப்பதுதான் காரணமாகவிருக்கக் கூடும்.

இவ்விதம் சிரித்திரன் சஞ்சிகை எரிக்கப்பட்ட தினம், ஆண்டு ஆகிய விபரங்களையும் திருமதி வாணி சுந்தர் அறியத்தந்தால் இச்சம்பவம் பற்றி ஆவணப்படுத்த அது உதவக் கூடும். மேலும் இச்சம்பவம் பற்றி மேலதிகத் தகவல்களை அறிந்தவர்கள் இங்கு பகிர்ந்துகொள்ளவும். அவை  ஆவணப்படுத்தப்பட வேண்டியவை.

சிரித்திரன் சஞ்சிகையின் அனைத்துப் பிரதிகளும் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்திலிருக்குமென எதிர்பார்ப்போம். யாரிடமாவதிருந்தால் அவற்றை எண்ணிம நூலகமான 'நூலகம்' அறக்கட்டளைக்கு வழங்கி அவற்றைப் பேணுங்கள்.

மீண்டும் சிரித்திரன் இதழ் வெளிவர ஆரம்பித்திருப்பதையடுத்து அண்மையில் இலண்டலில் நடைபெற்ற இணையவெளிக் கருத்தரங்குக் காணொளி: https://www.youtube.com/watch?v=aJhSAdFFjow

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.