ம்மாத இறுதிக்குள் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள எனது சிறுகதைத் தொகுப்பான 'கட்டக்கா(கூ)ட்டு முயல்கள்' தொகுப்புக்காக நான் எழுதிய என்னுரையினைக் கீழே தருகின்றேன்.

"இத்தொகுப்பிலுள்ள சிறகதைகளில் இறுதியிலமைந்துள்ள சுமணதாஸ் பாஸ் குறுநாவலைத் தவிர ஏனையவை கனடாவிலுள்ள 'டொராண்டோ' மாநகரில் வாழும் இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் பல்வேறு வகையான புகலிட அனுபவங்களை மையமாகக் கொண்டவை.  உண்மையில் சுமணதாஸ் பாஸ் குறுநாவல் கூடப் புகலிடத் தமிழ் அகதி ஒருவனின் நனவிடை தோய்தலாகத்தானமைந்துள்ளது. அவ்வகையில் அது கூடப் புகலிட அனுபவத்தின் வெளிப்பாடு என்றும் ஒருவகையில்  கூறலாம். ஏனென்றால் இழந்த மண்ணில் கழித்த நினைவுகளின்  நனவிடை தோய்தல் கூட புகலிடத் தமிழ் அகதி ஒருவரின் அனுபவங்களில் உள்ளடங்கிய ஒன்றுதான். மேற்கு நாடுகளை நோக்கிப் புகலிடம் நாடிச் சென்ற இலங்கைத்தமிழ் அகதிகளின் முதலாவது தலைமுறையினரின் அனுபவங்கள் அடுத்தடுத்து வரும் தலைமுறைகளின் அனுபவங்களிலிருந்து நிச்சயம் வேறானவை.   ஏனெனில் சொந்த மண்ணையிழந்து, உறவுகளை இழந்து, நண்பர்களை இழந்து, தம்மையே , தம் உழைப்பையே நம்பிப் புகலிடம் நாடி, புதிய நாடொன்றில் காலூன்ற முயற்சி செய்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்பல. அப்பொழுது ஏற்படும் அனுபவங்களும் அடுத்தடுத்து வரும் தலைமுறையினரின் அனுபவங்களிலிருந்து வேறுபட்டவை. தனித்துவம் மிக்கவை. அவ்வகையில் அவை பதிவு செய்யப்பட வேண்டியவை. அதனைத்தான் இத்தொகுப்புக் கதைகள் செய்கின்றன.

இங்குள்ள  கதைகள் அனைத்துமே என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில், அல்லது நான் நேரில் பார்த்தறிந்த அனுபவங்களின் அடிப்படையில் உருவானவை. உண்மையில் கதைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், வாசித்தால் இலங்கைத் தமிழ் அகதியொருவனின் வாழ்க்கையை விபரிக்கும் அனுபவங்களை உள்ளடக்கிய நாவலொன்றினை வாசித்த உணர்வினை நீங்கள் அடைவீர்கள் என்பது மட்டும் நிச்சயம்.

எழுத்தாளர் ஒருவரின் படைப்பு உருவாகுவதற்குப் பல அடிப்படைக்காரணங்களுள்ளன. அப்படைப்பானது அதனைப் படைத்தவரின் கற்பனையாகவிருக்கலாம். அல்லது நடைபெற்ற சம்பவங்கள் ஏதாவது ஏற்படுத்திய பாதிப்புகளின் விளைவாக இருக்கலாம். அல்லது பத்திரிகை , சஞ்சிகைகளில் வெளிவந்த செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவாகவிருக்கலாம். இவ்விதம் பல்வேறு காரணங்களிருக்கலாம். புகழ்பெற்ற எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் மிகவும் புகழ்பெற்ற படைப்பான 'கிழவனும், கடலும்' நாவல் தோன்றியது ஒரு பத்திரிகைச்செய்தியின் விளைவாகவென்று ஹெமிங்வேயே ஒருமுறை கூறியிருக்கின்றார். பத்திரிகையொன்றில் வெளியான 'புளூ மார்லின்' மீனொன்றால் கடலில் பல நூறு மைல்கள் இழுத்துச் செல்லப்பட்ட போர்த்துக்கேய மீனவன் ஒருவன் பற்றி வெளியான செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவே அவரது 'கிழவனும், கடலும்' நாவலின் அடிப்படை.

உதாரணத்துக்கு எனது 'ஒரு மா(ந)ட்டுப்பிரச்சினை' சிறுகதை எவ்விதம் உருவானதென்பதை இங்கு கூறுவது பொருத்தமானதே.  கனடாவுக்கு வந்த காலகட்டத்தில் என் வேலை காரணமாக டொராண்டோவின் மேற்குப் புறத்திலிருக்கும் 'கீல்' வீதியும், 'சென்ட் கிளயர் மேற்கு' வீதியும் சந்திக்கும் சந்தியை ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் சந்தர்ப்பமேற்பட்டது. இன்று மிகவும் அபிவிருத்தி அடைந்துள்ள பகுதியாக விளங்கும் அப்பகுதியில் அன்று கனடா பக்கர்ஸ் நிறுவனத்தின் கசாப்புக் கூடம் மிகப்பெரிய அளவில் அமைந்திருந்தது. ஒவ்வொரு முறை அக்கசாப்புக் கூடத்தைக் கடக்கும்போதும் மூக்கைத்துளைக்கும் மணமும், அங்கு வெட்டுவதற்காக அடைப்பட்டுக் கிடக்கும் மாடுகளின் நிலையையும் மனதில் பல்வேறு சிந்தனைகளை உருவாக்கும்.  மனம் அக்காலகட்டத்தில் இலங்கைச் சிறைக்கூடங்களில் அடைப்பட்டுக்கிடக்கும் தமிழர்களின் நிலையுடன் அக்கசாப்புக்கூடத்தில் அடைபட்டுக்கிடக்கும் மாடுகளின் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்.

இதன் பின் சில ஆண்டுகள் கடந்து விட்டன. ஒரு நாள் 'டொராண்டோ சன்' பத்திரிகையின் முதற் பக்கத்தில் வெளியாகியிருந்த புகைப்படமொன்று என் கவனத்தைக் கவர்ந்தது. '400 கடுகதிப்' பாதை வழியாக, 'மூஸ்' என்னும் மானின மிருகங்களை ஏற்றிச் சென்ற 'ட்ரக்டர் டிரெயில'ரிலிருந்து , இடைவழியில் , கதவு திறந்த நிலையில், அம்மிருகங்கள் அனைத்தும் தப்பி வெளியேறின. சில '400 கடுகதி'ப் பாதையின் நடுவில் ஓடித்திரிந்து வாகனப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச்செய்தன. இதன் விளைவாக அங்கு சென்ற காவற்துறையினர் கடுகதிப் பாதையில் நின்ற அம்மிருகங்களைப் பிடிப்பதற்காக நின்ற காட்சிக்கான புகைப்படமே அப்புகைப்படம்.

அந்தப் புகைப்படமும் , ட்ரக்டர் ட்ரெயிலரிலிருந்து தப்பிய 'மூஸ்' மிருகங்களும் என் சிந்தையில் பல வருடங்களுக்கு முன்னர் கனடா பக்கர்ஸ் கசாப்புக் கூடத்தைக் கடக்கும் போது அங்கு வெட்டப்படுவதற்காக நிற்கும் மாடுகள் பற்றியெழுந்த நினைவுகளை மீண்டும் அசை போட வைத்தன. வெட்டப்படுவதற்காகக் காத்திருக்கும் மாடுகள் அக்கசாப்புக் கூடத்திலிருந்து தப்பி, வாகனப் போக்குவரத்தை நிறுத்தி, தம் போராட்டத்தினை ஆரம்பித்தால் எப்படியிருக்குமென்று என் மனதில் சிந்தனையோடியது. அச்சிந்தனையின் விளைவாக உருவானதுதான் 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை'. கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகையில் வெளியான சிறுகதை (அப்பொழுது தாயகம் பத்திரிகை வடிவில் வெளியாகிக்கொண்டிருந்தது.) இது போல் இங்குள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் பல கதைகள், அனுபவங்களுள்ளன.

இக்கதைகள் இலங்கைத் தமிழ் அகதியொருவனின்  புகலிட வாழ்பனுபவங்களைக் கூறுகின்றன. அதே சமயம் சொந்த மண்ணிலிருந்து அங்கு நிலவிய அரசியல் மற்றும் யுத்தச் சூழல் காரணமாகத் தூக்கியெறியப்பட்ட ஒருவன் , அவன் வந்து விழுந்த புகலிட மண்ணில் காலூன்ற முற்படுகையில் அவனால் அவனது பிறந்த மண் மீதான உணர்வுகளிலிருந்து ஒருபோதுமே விடுபட  முடியாது. அதனால்தான் புகலிட மண்ணிலான அவனது அனுபவங்களைப்பேசும் அதே சமயம் இழந்த மண் மீதான அவனது உணர்வுகளையும் இத்தொகுப்புக் கதைகள் அவ்வப்போது பேசுகின்றன.

ஏற்கனவே வெளியான எனது நாவல்களான 'அமெரிக்கா' மற்றும் 'குடிவரவாளன்' ஆகியவை முறையே நியூயோர்க் மாநகரத்திலுள்ள புரூக்லீன் நகரிலுள்ள தடுப்பு முகாம் அனுபவங்களையும், நியோர்க் மாநகரத்தில் அகதியாக அலைந்து திரிந்த அனுபவத்தையும் கூறினால் இச்சிறுகதைத் தொகுப்போ இலங்கைத் தமிழ் அகதியொருவனின் கனடாவின் 'டொரோண்டோ' மாநகரத்து  அனுபவங்களை வெளிப்படுத்துகின்றன.

இக்கதைகள் பற்றிய  உங்கள் கருத்துகளை அறிய ஆவலாகவுள்ளேன். உங்கள் எண்ணங்களை எனது மின்னஞ்சல் முகவரியான இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அதற்காக இப்பொழுதே என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.  கூடவே இத்தொகுப்பினைச் சிறப்பாகக் கொண்டு வந்துள்ள ஜீவநதிப் பதிப்பகத்துக்கும், அதன் உரிமையாளர் க.பரணீதரன் அவர்களுக்கும்  என் நன்றியினையும் தெரிவித்துக்க்கொள்கின்றேன்.