நேற்றிரவு தலைவி திரைப்படத்தை அமேசன் பிரைம் வீடியோவில் பார்த்தேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பிரதானமாகக் கொண்ட கதை. இதற்கு முன்னர் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி ஆகியோருக்கிடையில் நிலவிய உறவினை மையமாகக்கொண்டு இயக்குநர் மணிரத்தினத்தின் 'இருவர்' வெளிவந்திருந்தது. ஆனால் 'தலைவி'திரைப்படத்தின் வெற்றியாக நான் கருதுவது பாத்திரங்களுக்கான நடிகர்களின் தேர்வும் , நடிப்பும்.

'இருவர்' திரைப்படத்தில் மோகன்லாலை, பிரகாஷ்ராஜைத்தான் நாம் நினைவு கூர்வோம். அவர்கள்நடித்த பாத்திரங்களை அல்ல. ஐஸ்வர்யா பச்சன் மட்டும் சிறப்பாக ஜெயலலிதா பாத்திரத்தில் நடித்திருந்ததாக உணர்ந்தேன். ஆனால் 'தலைவி' திரைப்படத்தில் கங்கனா ரணாவத்தும், அரவிந்தசாமியும் முறையே ஜெயலலிதாவாகவும், எம்ஜிஆராகவும் முற்றாகவே தங்களை மாற்றிக்கொண்டு விட்டார்கள். கலைஞராக நடித்த நாசரும் ஓரளவுக்குத் தன்னை மாற்றுவதில் வெற்றிகொண்டிருக்கின்றார் என்றே கூறலாம். ஆனால் முதலிருவரும் முற்றாகவே தம்மை அப்பாத்திரங்களாகவே மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். படம் முழுவதும் எம்ஜிஆர் , ஜெயலலிதாவாகவே அவர்கள் தென்பட்டார்கள். கங்கனா ரணாவத்தாக, அரவிந்தசாமியாகத் தென்படவேயில்லை. அவ்வளவுக்கு இருவருமே அவ்வாளுமைகளின் இயல்புகளை உள்வாங்கி நடித்திருக்கின்றார்கள். மிகவும் சிரமமான பணியினைச் சிறப்பாக, எப்பொழுதும் மனத்தில் நிலைத்திருக்கும் வகையில் செய்திருக்கின்றார்கள். அதற்காக இயக்குநர் விஜய் அவர்களைப் பாராட்டலாம். இத்திரைப்படத்தின் மூலம் கங்கனா ரணாவத்துக்குச் சிறந்த நடிகைக்கான மத்திய அரசின் விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆணாதிக்கம் நிறைந்த தமிழ்த்திரையுலகில், அரசியலில் குறிப்பாகத் தமிழக அரசியலில் ஜெயலலிதா அடைந்த அவமானங்கள், அவற்றை அவர் எதிர்கொண்டு வெற்றிகொண்டு தன்னை நிலை நிறுத்திய வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். அதனைச் சிறப்பாகவே இத்திரைப்படத்தில் இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

படத்தின் இன்னுமோர் முக்கிய அம்சமாக நான் கருதுவது எம்ஜிஆர் , ஜெயலலிதாவுக்கிடையில் நிலவிய மானுட உறவு. அதனை வெளிப்படுத்துவதில் கத்தி மேல் நடப்பதுபோல் நடந்திருக்கின்றார் இயக்குநர். எம்ஜிஆர் என்னும் ஆளுமை எவ்வளவு தூரம் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஆட்டிப்படைத்திருக்கின்றது என்பதைப் பொதுவாகவே ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். குறிப்பாக எழுத்தாளர் வாஸந்தி அவரது நூலான 'மனமும் மாயையும்' நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். எம்ஜிஆரைத் திருமணம் செய்து பகிரங்கமாகவே அவரது இன்னுமோர் துணையாக அறியப்படவே ஜெயலலிதா முயற்சி செய்தார் என்பதையும் அறிந்திருக்கின்றோம். அது அவர்களிருவரும் நேபாளத்துக்கு விஜயம் செய்தபோது இரகசியமாக நடைபெற்றதா என்பதில் பலருக்கு இன்னும் சந்தேகமுண்டு என்பது அவருடன் நெருங்கிப்பழகியவர்களுக்கு இன்னும் இருக்கின்றது என்பதையும் அவரைப்பற்றிய வாஸந்தியின் வாழ்க்கை வரலாறு வெளிப்படுத்துகின்றது. அதே சமயம் வலம்புரி ஜான் அவரது கட்டுரைகளில் ஜெயலலிதா எம்ஜிஆரால் புறக்கணிப்புக்குள்ளாகிய காலகட்டத்தில் அவரைச் சீண்டி, தன் காலடியில் கொண்டு வருவதற்காக எடுத்த ஆயுதமே அவரது சோபன் பாபுவுடனான தொடர்பும், அது பற்றிய குமுதத்தில் வெளியான தொடர்கட்டுரையும் என்பார். உண்மையில் அது ஜெயலலிதாவைப்பொறுத்தவரையில் நன்றாகவே பயனளித்தது என்பதை வரலாறு காட்டி நிற்கின்றது. உடனடியாகவே முதல்வராகவிருந்த எம்ஜிஆர் தலையிட்டு அத்தொடரை நிறுத்தியதுடன் பின்னர் எம்ஜிஆர் ஜெயலலிதாவைப் பகிரங்கமாகவே அரசியலுக்குள் கொண்டு வந்தார். எனவே இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ,. ஜெயலலிதாவுக்கிடையிலான உறவு பற்றிக் காட்டியுள்ளது பெரிதாக ஆச்சரியத்தைத் தரவில்லை. ஆனால் இருவருக்கிடையிலான தனி மனித உணர்வுகளை இத்திரைப்படம் முதன் முதலாக வெளிப்படுத்தி நிற்கிறது. அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் எம்ஜிஆர் மீதான தனது காதலை அவர் தன் நெருங்கிய தோழிக்கு சோபன்பாபுவுடனான தொடர்புக்குப் பின்னரும் கூறியிருப்பதை எழுத்தாளர் வாஸந்தியின் ஜெயலலிதா பற்றிய நூல் பதிவு செய்திருக்கின்றது. 'எம்ஜிஆரைத் தான் காதலிப்பதாகவும் அவர் ஒருத்தரே தன் வாழ்வில் இருக்கக்கூடிய ஆண் என்றும் ஜெயலலிதா சொன்னதாகவும் சாந்தினி சொன்னார் ' என்று மேற்படி நூல் கூறுகின்றது.

இத்திரைப்படத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள என்னுமொரு முக்கிய விடயம் ஆர்.எம்.வீரப்பனின் நடத்தை. ஆர்.எம்.வி முடிந்தவரை ஜெயலலிதாவை எம்ஜிஆரிடமிருந்து திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி கடுமையாக முயற்சி செய்திருக்கின்றார். திரையுலகில் அவரால் ஓரளவு வெற்றியடைய முடிந்தாலும் . அரசியலில் அதனை அவரால் சாதிக்க முடியவில்லையென்பதையும் வரலாறு காட்டி நிற்கின்றது. உண்மையில் ஆர்.எம்.வீ இவ்விதமே செயற்பட்டார் என்பதை அவரே தன் வாயால் வாக்குமூலம் அளித்திருக்கின்றார். எழுத்தாளர் வாஸந்தியின் 'ஜெயலலிதா மனமும் மாயையும்''நூல் அதற்குச் சாட்சியாக விளங்குகின்றது. எனவே இத்திரைப்படம் ஆர்.எம்.வீரப்பனைச் சரியாகவே வெளிப்படுத்தியுள்ளதாகவே நான் கருதுவேன். சமுத்திரக்கனியும் சிறப்பாகவே வீரப்பன் பாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

மொத்தத்தில் ஜெயலலிதா நடிகையாகவிருந்து , தமிழக முதல்வராகும் காலம் வரையிலான அவரது வரலாற்றைத் 'தலைவி' பேசுகின்றது. அதில் வெற்றியும் அடைந்திருக்கின்றது. தற்போதுள்ள கோவிட் - 19 சூழலில் ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது திரையரங்க வசூலில் மட்டும் தங்கியதொன்றல்ல. ஆடியோ, வீடியோ, தொலைக்காட்சி, ஓடிடி போன்ற டிஜிட்டல் உரிமைகளையும் உள்ளடக்கியதொன்று. அவ்வகையில் 'தலைவி' வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படமே என்பதையே செய்திகள் தெரிவிக்கின்றன.

'தலைவி' திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்: https://www.youtube.com/watch?v=CnMG1BbxJg4