ஜனவரி 19  எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் பிறந்தநாள். அவருக்கு எனது தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவரைப்பற்றி விகடனின் பேசலாம் யு டியூப் சானலில் எழுத்தாளர் ஜெயமோகனின் 'சங்கச் சித்திரங்கள் எப்படி எழுதினேன்?' என்னும் பெயரில் வெளியான நேர்காணற் காணொளி கண்டேன். அதில் ஜெயமோகன் அ.முத்துலிங்கம் பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தார்:

"தமிழ் உருவாக்கிய முக்கியமான பத்து எழுத்தாளர்களில் அவர் ஒருவர். இலங்கை உருவாக்கிய மகத்தான எழுத்தாளர்."

ஜெயமோகனின் விமர்சனப் பார்வையில் இவ்விதமான முக்கியமானதோர் இடத்தைப்பிடித்துள்ள எழுத்தாளர் அவர். ஆனால் ஜெயமோகனின் மேற்படி கூற்றில் எனக்குப் பெரிதும் உடன்பாடில்லை. 'தமிழ் உருவாக்கிய முக்கியமான எழுத்தாளர்களில் அவர் ஒருவர். இலங்கை உருவாக்கிய சிறந்த எழுத்தாளர்களில் அவர் ஒருவர்.' என்று ஜெயமோகன் கூறியிருந்தால் அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்குச் சிரமமில்லை.

ஜெயமோகன் அதிகமாக வாசிப்பவர். அதிகமாக எழுதுபவர். அவரது வாசிப்பும், எழுத்து வேகமும் பிரமிக்க வைப்பவை. அவர் இப்படிக் கூறியிருப்பதை அவ்வளவு இலேசாக ஒதுக்கிப் போய்விட முடியாது.  ஜெயமோகனின் தனிப்பட்ட கருத்தாக மட்டுமே என்னால் இதனை எடுத்துக்கொள்ள முடியும். அவரது சுய வாசிப்பு, சுய சிந்தனைக்கேற்ப அவர் வந்தடைந்த கருத்தாக மட்டுமே என்னால் கருத முடியும். அதற்கு மேல் ஜெயமோகனின் கூற்றை ஒட்டுமொத்தமாக இலக்கியப்பங்களிப்பில் அ.மு.வின் பங்களிப்பை வெளிப்படுத்தும் கூற்றாக என்னால் கருத முடியவில்லை.

மேலும் எழுத்தாளர் ஒருவரின் பங்களிப்பை நோக்குகையில் தனியே புனைகதை என்பதை மட்டும் அடிப்படையாக வைத்து நோக்கமுடியாது. அவரது புனைவு, அபுனைவு, மொழிபெயர்ப்பு, கவிதை எனப்பரந்து பட்ட பங்களிப்பின் அடிப்படையிலேயே நோக்க வேண்டும். இந்நிலையில் ஜெயமோகன் எழுத்தாளர் என்னும் சொற்பதத்துக்குப் பதிலாகச் சிறுகதையாசிரியர் என்ற பதத்தைப் பாவித்திருக்கலாம்.

என் வாசிப்பின் அடிப்படையில் என் நினைவுக்கு வரும் எழுத்தாளர்களில் சிலரைப் பட்டியலிட்டால் அப்பட்டிலில் நிச்சயமாக அ.முத்துலிங்கம் தவிர்ந்த பத்துக்கும் அதிகான பெயர்கள் நி9ச்சயமிருக்கும். இவ்விதம் தமிழ் இலக்கியம், விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று இலக்கியத்தின் ஒவ்வொரு பிரிவிலும் முக்கியமான பங்களிப்பு செய்த பலர் நினைவுக்கு வருவார்கள். அவர்களையெல்லாம் கடந்துதான் என்னால் அவர்களின் தொடர்ச்சியாக எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தைக் கருத முடியுமே தவிர முதல் பத்துக்குள் என்னால் கருதவே முடியாது. இந்நிலையில் ஜெயமோகன் அவர்கள் அ.மு முதல் பத்து சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்னும்போது அவர் அந்தப் பத்து எழுத்தாளர்களின் பெயர்களையும் பட்டியலிட வேண்டும். அவ்விதம் பட்டியலிட்டால் அப்பட்டியலில் இல்லாத ஏனையவர்களை விட அ.மு. எவ்வைகையில் முக்கியத்துவம் பெறுகின்றார் என்பதை விளக்க வேண்டும்.

இதுபோல் இலங்கையின் சிறந்த எழுத்தாளர்கள் என்னும்போதும் பத்துக்கும் அதிகமான பலர் நினைவுக்கு வருவார்கள். அவர்கள் எல்லோரும் மண் வாசனை மிக்க எழுத்துகளின் சொந்தக்காரர்கள். அ.முத்துலிங்கத்தின் புகழ்பெற்ற அவரது ஓய்வுக்குப் பின்னான எழுத்துகள் தமிழக வாசகர்களை மனத்திலிருந்தி எழுதப்பட்டவை. இலங்கை எழுத்தாளர்களின் எழுத்துகளில் காணப்படும் மண்வாசனையை அவ்வெழுத்துகளில் காண முடியாது. பரந்துப்பட்ட தமிழக வாசகர்களுக்காக அவர் கையாண்ட நடை காரணமாக அவ்வெழுத்துகளில் மண் வாசனையைக் காண முடியாது. இந்நிலையில் அ.மு மகத்தான இலங்கைத் தமிழ் எழுத்தாளர் என்னும் ஜெயமோகனின் கூற்று ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

ஜெயமோகனின் மேற்படி கூற்றுகள் அவரது விமர்சனச் சிறப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.


முகநூலில் இப்பதிவுக்கு வந்த எதிர்வினைகள்:

T N Anpearasu JP
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Bee Palan
85 வயதை தொடும் முத்து மாமா கொக்குவில் தந்த சொத்துகளில் ஒருவர். எனது பெரிய தாய்மாமாவின் கல்லூரி பல்கலைகழ தோழர். நீண்ட காலமாக கொழும்பு தமிழ் சங்கம் மட்டுமல்ல நல்லை ஆதீனத்தில் ஆன்மீக சொற்பொழிவுகளை சிறுவனாக கேட்டவர்களில் நானும் ஒருவன். வாழ்க வளமுடன்

Suniljoghee Gopal
வணங்கி மகிழ்கிறோம் ஐயா....

P A Jayakaran Arullingam
அவரை உலகில் தலையாய சிறுகதையாளராய் சேர்த்துக் கொள்வோம்.

Gnane Buwan Gnanendran
ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Suntharalingam Sathasivam
happy, birthday to you

Ganesalingam Selvanayagam
வாழ்த்துக்கள் Congratulations'

S. Krishna Veni
வணங்குகிறேன் வாழ்த்துகளோடு

SK Rajen
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்?

Dharani Akil
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Bala Yazhkovan
Happy birthday

அகரன் பூமிநேசன்
ஒருவர் தன் வாசிப்பு வெளியில் கிடைத்த எழுத்தாளரைப்பற்றி சொல்லும்போது இப்படிச்சொல்வது இயல்பானது. அக்கூற்றில் இருந்து அ. மு எழுத்தின் வலிமையையே புரிந்துகொள்ளவேண்டுமே தவிர மற்ற எழுத்தாளர்களை அவர் குறைத்து மதிப்பிட்டதாக என் புரிதல் இல்லை. ஆனால் தாங்கள் அவரை ஒரு சிறுகதை எழுத்தாளராக குறைந்த வட்டத்தில் பார்த்ததே கவலை அளிக்கிறது. அ. மு பற்றிய என் வாசிப்பில் சிறுகதையையும் தாண்டிய அவரின் கட்டுரை இலக்கியம் அலாதியானது. தமிழுக்கு அது அருமையான வடிவம். அதைத்தாண்டி தமிழ் எல்லை தாண்டிய அவரின் பேட்டிகளை இதுவரை யாராவது செய்ததாக தெரியவில்லை. உதாரணமாக நோபல் பரிசுபெற்ற ஆங்கில எழுத்தாளரை பேட்டி கண்டு தமிழில் எழுதியது. நீங்களே கூறியதுபோல் படிப்பும், படைப்பும் நிறைந்த திரு ஜெயமோகன் கூறியதில் எந்த தவறிப்பதாக தெரியவில்லை.
சரி, நம் மூத்த எழுத்தாளர் தன் ஓய்வுகாலத்தை தமிழ் எழுத்துக்காக செலவிடுகிறார். அவர் மகிழ்வோடு வாழட்டும். சிறக்க அவர் நாட்கள்.

R Rahavan
நியாயமான கருத்து. முக்கிய பத்து எழுத்தாளர்களுள் ஒருவர் என்பது அதிமிகைக்கூற்று. ஜெயமோகனின் இந்த கருத்து அவரையே குறைத்து மதிப்பிட வைக்கும்.

Shankar Nallathamby
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

Safnas Hasim
அ.மு எந்த இடத்தில் வேறுபடுகிறார் என்று எனது வாசிப்பினடிப்படையில் சொல்ல முடியும். ஒரு எழுத்தாளனாக ஒரு அரசியல் அல்லது ஒரு கொள்கையொன்றின் பிரச்சாரகராக அவர் கதைகளை எழுதியதில்லை. அதையும் தாண்டிய ஒட்டுமொத்தமான பார்வை அவருக்கு இருக்கிறது. ஒரு புனைவை அதன் இயற்கையோடு அதன் பூகோளத்தன்மையோடு சொல்வதென்பது அ.முவுக்கு வாய்த்திருக்கிறது. அதனாலேயே masters ஐ விடவும் அமுவை ஷோபாவை தமிழகத்தில் அதிகம் வாசித்திருக்கிறார்கள் என்று ஜெமோ சொல்லியிருந்தார். அ.முவிடமிருக்கும் பரிபூரணத்துவமென்பது தான் இங்கு விசயம். வாழ்த்துக்கள் அவருக்கு ?

Parathan Navaratnam
Safnas Hasim ஒழுங்கா எல்லாம் வாசிக்கவில்லை போலிருக்கு.?

Safnas Hasim
Parathan Navaratnam கதைகளில் வெளிப்படுவது வேறு. பிரச்சாரத்தொனி என்பது வேறு. அமுவிற்கு அந்த முழுமை இருக்கிறதென்பது எனது கருத்து. வம்ச விருத்தி (12), வடக்கு வீதி(12), திகடசக்கரம் ( 8) , இன்னும் பல கதைகள் வாசித்திருக்கிறேன்.

Saroja Moorthy
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Sreeno Sri

அ.மு. நான் (Founding Secretary) K.T. சண்முகராசாவுடனும் (Inaugural President) பிறருடனும் 1993 June 19 இல், அங்குரார்ப்பணம் செய்து Torinto இல் ஆரம்பித்த-
"கனடா தமிழ் எழுத்தாளர் இணைய" காலத்தில் Pakistan இலிருந்து தனது "திகட சக்கரம்" சிறுகதைத்தொகுப்பின் 10 பிரதிகளை அனுப்பி promote பண்ணுமாறு தனிப்பட்ட கடிதம் எழுதியிருந்தார்.
ஒரு பிரதியை நான் வைத்துக்கொண்டு, மீதி ஒன்பதையும் அக்கறையுள்ளோர்க்கு கொடுத்தேன். * அப்போ, அ. முத்துலிங்கம் அறியப்படாதவர். இதற்கு முன் "அக்கா" என்ற சிறுகதைத்தொகுதி ஒன்றை மட்டுமே வெளியிட்டிருந்தார் என, நினைக்கிறேன்.

ஜெயமோகன் முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியே பிரயாணப்பட்ட நாடு,-கனடா. அப்பயணத்தை தன் செலவில் பாலித்தவர், அ.மு. Montréal இல் மைக்கல் (ஜெயரரூபன்) வீட்டில் தங்கியிருந்தார்.
அவரை நானும் மைக்கலும்,-Montréal- Museum of Fine Arts (அப்போ, Crafts of Aluminium என்ற exposition உம் அங்கு நடந்தது) Olympic Park, Botanical Garden, Bio-Dome என்று, கொண்டு திரிந்தோம்.முழுச்செலவையும் பார்த்தது நானே.

இவரை, AMIR- Lebanese Restaurant இற்கு அழைத்துச்சென்றபோது, "அட...இப்படியெல்லாம் சாப்பாடு இருக்கிறதா? நான் இட்லியும் சாம்பாருமல்லவா சாப்பாடு? என்று நினைத்திருந்தேன்," என்று குறிப்பிட்டார்.
தவிரவும், ஆச்சர்யகரமாக, Montréal இல் தெருவில் பிச்சையெடுக்கும் pan-handlersஐப்பார்த்து, ஆச்சரியப்பட்டு, "பணக்கார நாடுகளில் பிச்சைக்காரர்கள் இல்லை, என்றல்லவா நினைத்தேன்," என்றார்.
பின்னர், நானும் மைக்கலும் இவரை Toronto அழைத்துப்போனோம். நான் செய்த உதவிக்காக, 2001 இல் சென்னையில் வெளியிடப்பட்ட என் சிறுகதைத்தொகுப்பான- "சிறீசுவின் சில சிறுகதைகள்" வெளியீட்டுவிழாவில் சிறப்பு பேச்சாளராக, நாகர் கோவிலிலிருந்து bus இல் சென்னை வந்து பங்குபற்றியிருந்தார். அ.மு. வை ஜெமோ புளுகக்காரணம் 111% நன்றிக்கடன்.....!!!!! முத்துலிங்கம் தனது பணவசதி மூலமும், அது சார் செல்வாக்கு மூலமுமே தன் புகழை பின்னடிக்கு ஏற்றியவர்; தன் எழுத்து வன்மையால் அல்ல...!! தமிழ் எழுத்தாளர், பிரதானமாய் தமிழக எழுத்தாளரிடம் கேவல போலிமை ஒன்றுண்டு. காசுசார் நன்றிக்காக, கஞ்சல்களையே "ஆனையடா, குதிரையெடா," என்று பொய்ப்பம்மாத்துடன் புளுகுவர். ஜோயமோகனென்ன விதிவிலக்கா.....?????!!!! ● ஜெமோ நவீன தமிழின் 10 முக்கிய எழுத்தாளரில் ஒருவர் என்பேன். அ.முத்துலிங்கம்.....???!! Haaa...Haaaa...HAA.... Haaaaaaa......!!!!!!!!!!!!!!! Don't get me started....!

Parathan Navaratnam
Sreeno Sri Sreesu அப்படி போடு அரிவாளை ?

ஏ. பகலவன்
பெரியவர் அ. முத்துலிங்கம் அவர்களின் எழுத்து நடை என்பது அபாரமானது. அதற்கு அவரது விரிந்த அனுபவமும் இடை விடா இலக்கித் தேடல்களுமே காரண்மாக இருக்கலாம்.
கதை நடுவே அவரின் நகைச்சுவைகள் அருமை.

Sivanreaselvan Arumugam
Many happy returns of the day

Rahulan Nadarajah
ஜெயமோகனின் முதல் பத்து தெரிவும் உங்களது முதல பத்து தெரிவும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லையே!!!!

Giritharan Navaratnam
Rahulan Nadarajah அதனால்தான் " அவர் இப்படிக் கூறியிருப்பதை அவ்வளவு இலேசாக ஒதுக்கிப் போய்விட முடியாது. ஜெயமோகனின் தனிப்பட்ட கருத்தாக மட்டுமே என்னால் இதனை எடுத்துக்கொள்ள முடியும். அவரது சுய வாசிப்பு, சுய சிந்தனைக்கேற்ப அவர் வந்தடைந்த கருத்தாக மட்டுமே என்னால் கருத முடியும். அதற்கு மேல் ஜெயமோகனின் கூற்றை ஒட்டுமொத்தமாக இலக்கியப்பங்களிப்பில் அ.மு.வின் பங்களிப்பை வெளிப்படுத்தும் கூற்றாக என்னால் கருத முடியவில்லை." என்று கூறியிருக்கின்றேன்.