அண்மையில் தமிழில் பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக வெளிவந்து விருதுகளைப்பெற்ற நாவல் எழுத்தாளர் கத்யானா அமரசிங்கவின் 'தரணி'நாவல். இதனைத் தமிழுக்குக் கொண்டு வந்திருப்பவர் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப்.
கத்யானா அமரசிங்க அவர்கள் 'அண்ணாவுக்கு நன்றியுடன் ' என்று தமிழில் எழுதிக் கையொப்பமிட்டு நூலை அனுப்பி வைத்திருந்தார். நேற்று கிடைத்தது. உடன்பிறவாச் சகோதரிக்கு என் நன்றியும் வாழ்த்துகளும்.
 
நூலின் அட்டை , முகப்புப் பக்கம், நூலாசிரியர், எழுத்தாளர் பற்றிய குறிப்புப்பக்கங்கள், நூலில் வெளியான எனது முன்னுரையின் முதற்பக்கம் ஆகியவற்றை இங்கு ஒரு பதிவுக்காக இணைத்துள்ளேன். நல்லதொரு நாவல். இந்நாவலை இலங்கையில் பூபாலசிங்கம் புத்தகசாலையில் வாங்கிப்படிக்கலாம்.
 
நூலாசிரியர் தனது 'கதாசிரியர் குறிப்பு' பக்கத்தில் பின்வருமாறு தனது எண்ணங்களைப் பதிவு செய்திருக்கின்றார்:
 
"நான் பிறந்த நாட்டையே தாய் மண்ணாகக் கொண்ட தமிழ் சகோதர சகோதரிகளுக்கு கடந்த கால கட்டம் முழுவதும் இழைக்கப்பட்ட அநீதிகளை நேரில் கண்டவளாக இக்குறிப்பை மிகுந்த வேதனையோடு எழுதுகிறேன். 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'சிங்கள மொழி மாத்திரம்' எனும் அரச மொழிச்சட்டத்தின் காரணத்தால் உங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி குறித்து மிகவும் கவலையுறுகிறேன். இன்று உங்களுடன் என்னால் தமிழில் உரையாட கலந்துரையாட முடியாதிருப்பது அதன் பிரதிபலன்களில் ஒன்றாகும். ... நான் வளர்ந்ததெல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு, கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழின சகோதர சகோதரிகளுக்கும் , மலையகத் தோட்டத் தொழிலாளர்களான தமிழின சகோதர சகோதரிகளுக்கும் சிங்கள பெளத்த அரசும், இனவாதக் குழுக்களும் நிகழ்த்திய மிக மோசமான அநீதிகளைக் கண்டவாறுதான். அண்மையில் அதன் தொடர்ச்சியாக இம்மண்ணில் பல நூற்றாண்டுகளாக வாழும் முஸ்லிம் இனத்தவர்கள் மீதும் அந்த இனவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இவை அனைத்தையும் குறித்து, பிறப்பிலேயே சிங்களவரும் பெளத்தருமான நான் ஆழமான வெட்கத்தை உணர்கிறேன்."
 
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.