என் முன்னைய பதிவொன்றில் க.சச்சிதானந்தன் அவர்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் எழுத்தாளர் க.சச்சிதானந்தன் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றிய முகநூல் நண்பர் கு.சரவணன் அவர்கள் " சச்சிதானந்தனை தாங்கள் எழுத்தாளர் என்று சுட்டுவது பொருத்தமற்று உள்ளது. பண்டிதர் அல்லது மதுரைபண்டிதர் என்று சுட்டுவதே சிறப்பாக அமைகின்றது" என்று கூறியிருந்தார்.

உண்மையில் எழுத்தாளர் என்றழைக்காமல் அவரைப் பண்டிதர் என்றழைப்பது அவரைப் பண்டிதர் என்னும் குறுகிய வட்டத்தில் இருத்தி விடும் அபாயமுண்டு. பண்டிதர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள் அல்லர். பெரும்பாலும் அசிரியர்கள். பண்டிதர் என்பது ஒரு கல்வித்தகைமை. ஆனால் க.சச்சிதானந்தன் அவர்கள் கவிதை, கட்டுரை, நாவல் , அறிவியலென்று பன்முகத்திறமை கொண்ட எழுத்தாளராகத் தன்னை அடையாளம் காட்டியவர். ஆனந்தம், பண்டிதர் போன்ற புனைபெயர்களில் எழுதியவர். எழுத்தாளர் என்று அவரை அழைப்பது அவரைப்பெருமைப்படுத்தும் ஒன்று.

யார் கூறியது எழுத்தாளரை விடப் பண்டிதர் என்றழைப்பது பெருமைப்படுத்துமொன்றென்று. எழுத்தாளர் அதுவும் பன்முகத்திறமை மிக்க எழுத்தாளர் என்பது அவரைக் கெளரவப்படுத்தும். மேலும் யாரும் பண்டிதர் ஆக முடியும். ஆனால் பண்டிதர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாக முடியாது. பண்டிதர் என்பது ஒரு கல்வித்தகைமை. அவர் பண்டிதர் மட்டுமல்லர். கலைப்பட்டதாரி. கலாநிதி. வானியல் அறிஞர். விரிவுரையாளர். இவ்விதம் பன்முகத்திறமை மிக்கவர் அவர். விக்கிபீடியா அவரை இவ்விதம் விபரிக்கின்றது: "கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் (அக்டோபர் 10, 1921 – மார்ச் 21, 2008) ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். சச்சிதானந்தன் என்ற பெயரிலும், ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்."

மேலும் புகழ்பெற்ற கவிஞர் வேந்தனாரை நாம் பண்டிதர் வேந்தனார் என்றழைப்பதில்லை. கவிஞர் வேந்தனார் என்றே அழைப்போம். சுஜாதாவை எழுத்தாளர் சுஜாதா என்றே அழைப்போம். இலத்திரனியற் பொறியியலாளர் சுஜாதா என்றழைப்பதில்லை. எழுத்தாளர் சொக்கன் (சொக்கலிங்கம்) தமிழ் வித்துவான். கலாநிதி. அவரை நாம் எழுத்தாளர் சொக்கன் என்றே அழைக்கின்றோம் அவரது படைப்புகள் வாயிலாக. குறிஞ்சி மலர், பொன் விலங்கு, மணி பல்லவம் படைத்த நா.பார்த்தசாரதியை நாம் அனைவரும் அறிவோம். அவர் மதுரைச்சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்றவர். இளங்கலை, முதுகலைப் பட்டதாரி. முனைவர் பட்ட ஆய்வேடினை எழுதி முடித்த பின், பட்டம் பெறுவதற்கு முன்னர் மறைந்து விட்டார். அவரை யாரும் பண்டிதர் பார்த்தசாரதி என்றழைப்பதில்லை. எழுத்தாளர் நா.பார்த்தசாரதி என்றே அழைக்கின்றோம். எழுத்து அவர் கலை. பண்டிதர் என்பது அவர் கல்வித்தகைமை. தொழிலுக்காக அதனைப் பயன்படுத்தினார். எழுத்தாளர் என்பது பெருமைப்படத்தக்க விடயம்.

நண்பரின் மேற்படி எதிர்வினையைக் கேட்டபோது என் நினைவுக்கு வந்த விடயமொன்று: பொதுவாக எழுத்தாளர்களென்றால் அவர்களுக்குப் பெண் எடுப்பது சிரமமானது என்று கூறுவார்கள். எழுத்தாளர்கள் எழுத்தை ஆள்பவர்கள். இருந்தும் சமுதாயத்தில் எழுத்தாளரின் நிலை துயரகரமானதுதான். ?


முகநூல் எதிர்வினைகள்:

கு. சரவணன்
"பண்டிதர் என்பது குறுகிய வட்டம் யாரும் பண்டிதர் ஆகலாம் பண்டிதர் என்பது ஒரு கல்வித்தகமை " ஏற்றுக்கொள்ளமுடியாத வாதங்கள்.

Giritharan Navaratnam
கு. சரவணன் அது உங்கள் கருத்து. ஆனால் என் கருத்து அதுவல்ல. எந்தவொரு கல்வித்தகைமையையும் யாரும் விரும்பினால், வாய்ப்புகள் செய்து கொடுத்தால் அடையலாம். உங்கள் கருத்தை நான் மாற்றும்படி கூறவில்லை. அது உங்கள் உரிமை. நீங்கள் தாராளமாகப் பண்டிதர் க.சச்சிதானந்தன் என்றே அழைத்துக்கொள்ளலாம். அதனை யாரும் எதிர்க்கப்போவதில்லை.

Thavabalachandran Kasipillai
பண்டிதராக வித்துவான் ஆக அல்லது பட்டதாரியாக இருப்பவர்கள் இலக்கியத்துறையிலும் பிரகாசித்தால் அது சிறப்பான விடயம். தற்போதைய விவாதம் என்னவென்றால் பண்டிதர் இலக்கியவாதியாகவும் இருப்பின் அவரை பண்டிதர் என்று அழைப்பதா அல்லது எழுத்தாளர் என்று அழைப்பதா பொருத்தமுடையது என்பதேயாகும். டாக்டருக்குப் படித்தவரை டாக்டர் என்று அழைப்பதே பொருத்தம். அதுபோல பண்டிதர் பட்டம் பெற்றவரை பண்டிதர் என்று அழைப்பதில் தவறில்லை. பண்டிதர் என்பது குறுகிய வட்டம் அல்ல என்பது எனது எண்ணமாகும்

Giritharan Navaratnam
Thavabalachandran Kasipillai எழுத்தாளராக அறியப்பட்ட ஒருவரை அவ்விதம் அழைப்பதே எனக்குச் சரியென்று தோன்றுகின்றது. சச்சிதானந்தன் அவர்களே தனது பெயரிலேயே நூல்களை வெளியிட்டுள்ளார். எங்கும் தன்னைப் பண்டிதர் க.சச்சிதானந்தன் என்று அழைத்து நூல் வெளியிட்டுள்ளதாகத் தெரியவில்லை. அவர் பண்டிதர் என்பது மட்டுமல்ல, கலாநிதி, இளங்கலை, தத்துவமுதுகலைப் பட்டதாரியும் கூட. அவருக்குப் பின்னால் அவரது கல்வித்தகைமைகளைப் போடுவது பொருத்தமானது. இருந்தாலும் நீங்கள் அவரைப்பண்டிதர் என்றே அழைக்க விரும்பினால் அது உங்கள் உரிமை. ஆனால் எழுத்தாளர் என்று நான் அழைப்பது பொருத்தமற்றது என்று நான் எண்ணவில்லை.

Indran Rajendran
அட சோகமே

Sivananthan Muthulingam
பண்டிதர், வித்துவான்,பால பண்டிதர் போன்ற கல்வித தகைமைகளை யாழ்ப்பாணம் 'ஆரிய பாஷா அபிவிருத்திச்சங்கம்" பரீட்சசைகள் வைத்து வழங்கியது. இப்போது அந்த சங்கம் இல்லை என்றே தோன்றுகிறது. தமிழ் ஈழ வியாதியினால் பல விஷயங்கள் காணாமல் போயின. யாழ்ப்பாணம் மலையாள புகையிலை சங்கம் என்பதும் ஒன்று.

Thambirajah Elangovan
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர் க. சச்சிதானந்தன். 1940 -களில் 'தண்ணீர்த் தாகம்' என்ற சிறந்த கதையைப் படைத்துள்ளார். சுமார் பன்னிரண்டு கதைகள்வரை எழுதியுள்ளார் எனத் தெரிகிறது.

Velthas Vimala
பண்டிதர் என்பது ஆழ்ந்து அகன்ற நுண்மாண்நுழைபுலம் மிக்க இலக்கிய இலக்கணப் புலமை நிறைந்த புலமை. இன்னும் அவருக்கு அதுவே சிறப்பு.பண்டிதர் சச்சி தமிழ் உலகம் முழுவதும் அறிந்த பெயர். வித்துவான் சொக்கன் என்பது எவ்விதத்திலும் குறைந்த ஆளுமை அல்லவே. நவீன இலக்கிய உலகிலும் கால் பதித்த அறிஞர். எழுத்தாளர் பரந்து விரிந்த சொல். மரபிலக்கிய ஆளுமையும் இணைந்து மிளர்வது

Giritharan Navaratnam
Velthas Vimala //வித்துவான் சொக்கன் என்பது எவ்விதத்திலும் குறைந்த ஆளுமை அல்லவே.// அப்படி எங்கும் கூறவில்லையே. ஆனால் எழுத்தாளர் என்று கூறுவதும் குறைவானதொன்றல்லவே. தனது கவிதைகள், காப்பியம், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் மூலம் ஓர் எழுத்தாளராக அறிமுகமானவர்தான் மாவிட்டபுரம் க.சச்சிதானந்தன் அவர்கள். பண்டிதர் என்பது கல்வித்தகைமை. நா.பார்த்தசாரதி தனது குறிஞ்சி மலர், பொன்விலங்கு, மணிபல்லவம் போன்ற நாவல்கள் மூலம், சிறகதைகள், கவிதைகள் மூலம் புகழ்பெற்ற சிறந்த எழுத்தாளர். ஆனால் அவர் மதுரைத்தமிழ்ச்சங்கப் பண்டிதர். முதுகலைப்பட்டதாரி. முனைவர் பட்ட ஆய்வினை முடித்திருந்த சமயம் இறந்து போனார். ஆனால் அவரை எழுத்தாளர் என்றுதான் நாம் அழைக்கின்றோம். அவரது கல்வித்தகைமைகள் கொண்டல்ல. ஆனால் அப்படி அழைப்பது தவறல்ல. அதுபோல் க.சச்சிதானந்தனும் இளங்கலை, முதுகலைப் பட்டதாரி. கலாநிதி கூட. அத்துடன் பண்டிதரும் கூட. எழுத்தாளர் என்று கூறுவது பெருமைப்படத்தக்க விடயம். எல்லாரும் எழுதி விட முடியாது. எழுத்தாளர்களிலும் தரத்தைப்பொறுத்துப் பலர் உள்ளனர். அதுபோல்தான் பண்டிதர்களிலும் தரத்தைப்பொறுத்தவரையில் பலர் உள்ளனர். இலக்கணச் சூத்திரங்களை நெட்டுருப்போட்டு, ஓரிரு காப்பியங்களின் சில பகுதிகளைப்படித்துக் கல்வித்தகைமைக்காகப் பண்டிதரானவர்கள் பலர் இருக்கின்றார்கள். அதே சமயம் சுய முயற்சியால் இலக்கணம், காப்பியங்கள் எனப் பலவற்றைக் கற்று சிறந்த எழுத்தாளர்களாக விளங்கியவர்கள், விளங்குபவர்கள் பலர் இருக்கின்றார்கள். எழுத்தாளர் க.சச்சிதானந்தன் என்று கூறுவது பெருமைப்படத்தக்க விடயம் என்பதே இத்தர்க்கத்தின் முக்கிய அம்சம். அதே சமயம் அவரைப் பண்டிதர் க.சச்சிதானந்தன் என்றோ , கலாநிதி க.சச்சிதானந்தன் என்றோ அழைக்கவேண்டாமென்று எங்கும் கூறவில்லை. எழுத்தாளர் என்று அழைப்பது பொருத்தமற்றது என்று கூறியதற்கான தர்க்கமிது. அதுவே மிகவும் பொருத்தமானது என்று நான் கூறுவேன்.