தொண்ணூறுகளில் ஒரு முறை தேடக நண்பர் குமரனின் இருப்பிடத்துக்குச் சென்றபோது (அப்பொழுது அவர் பார்ளிமன்ற் & வெலஸ்லி சந்திக்கண்மையிலிருந்த தொடர்மாடிக் கட்டடமொன்றில் வசித்து வந்த காலம்) அங்கிருந்த ஒரு காட்சி என் கவனத்தைக் கவர்ந்தது. அங்கு அவர் கூட்டில் வைத்திருந்த இரு ஆண் முயல்களின் காட்சிதானது. உணவகமொன்றில் கறியாவதற்கிருந்த அவற்றைக் காப்பாற்றி தன்னிடத்தில் வைத்திருந்ததாகக் கூறினார். ஆனால் துயரம் என்னவென்றால் , பின்னர் அவை கூட்டைவிட்டுத் திறந்து விடப்பட்டபோது மாடியிலிருந்து குதித்து மாண்டுவிட்டன என்பதுதான்.
அங்கிருந்தபோது நான் அவதானித்த அக்கூட்டு முயல்களின் நடத்தை, அவற்றுக்கேற்பட்ட முடிவு எல்லாம் என் மனத்தைப் பாதித்திருந்தன. அம்முயல்களை வைத்து 'கட்டடக்காட்டு முயல்கள்' என்றொரு கதையினைத் தேடகம் கனடா இதழுக்காக எழுதினேன். அது 'கட்டிடக்கூட்டு முயல்கள்' என்னும் தலைப்பில் தேடல் சஞ்சிகையின் மே 97 இதழில் (அதன் பதினைந்தாவது இதழ்) வெளியாகியிருந்தது. தட்டச்சு செய்தவரின் தவறு.
 
இன்னுமொரு சிறுகதையினைப் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்'என்னும் தலைப்பில்  எழுதினேன்.அதனைக் கனடாவிலிருந்து வெளியாகும் ஈழநாடு பத்திரிகை தனது  ஜூலை 2, 2002 பதிப்பில் மீள் பிரசுரம் செய்திருந்தது.
 
மேற்படி சிறுகதையை மேலும் சிறிது சுருக்கி அண்மையில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளியான எனது சிறுகதைத்தொகுப்பான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' என்னும் நூலில் இணைத்திருந்தேன். முயல்கள் என்னைப்பாதித்ததன் விளைவு இச்சிறுகதைகள் என்றால் ஒரு முறை பல்லிகளும் என்னை பாதித்திருந்தன. அவற்றின் விளைவாகவும் இது போல் ஒரே கருவை மையமாக வைத்து 'பல்லி' (தாயகம் , கனடா), 'பல்லி தந்த பாடம்' (ஈழநாடு, யாழ்ப்பாணம், 1980) மற்றும் 'பல்லிக்கூடம்' (ஆனந்த விகடன்) மூன்று சிறுகதைகள் எழுதியிருக்கின்றேன்.
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.