பத்திரிகைகளோ அல்லது சஞ்சிகைகளோ சிறுவர்களுக்கான பகுதிகளுக்கும் இடம் கொடுப்பது மிகவும் அவசியமானதொன்று. சினிமா நடிகைகளின் உடலழகைக் காட்டும் கவர்ச்சிப்படங்களை வெளியிடுவதில் காட்டும் ஆர்வத்தை விட அதிக ஆர்வத்தைக் குழந்தைகளுக்கான (அல்லது சிறுவர்களுக்கான) பகுதிகளை நடத்துவதில் காட்ட வேண்டும்.
 
இச்சிறுவர் பகுதிகளே எதிர்கால எழுத்தாளர்கள் பலரை உருவாக்கும் ஆற்றல் மிக்கவை. கண்ணன்(தமிழகம்), வெற்றிமணி (இலங்கை) போன்ற சிறுவர் சஞ்சிகைகளின் பழைய இதழ்களைப் பார்த்தால், ஈழநாடு (மாணவர் மலர்), சுதந்திரன் (வளர்மதி) போன்ற பத்திரிகைகளின் சிறுவர் பகுதிகளைப் பார்த்தால் தெரியும் இவற்றில் எழுதியவர்களில் எத்தனைபேர் பிற்காலத்தில் நாடறிந்த முக்கியமான எழுத்தாளர்களாக உருவாகினார்கள் என்பதை.
 
என்னைப்பொறுத்தவரையில் ஈழநாடு, வெற்றிமணி , கண்மணி ஆகியவற்றின் சிறுவர் பகுதிகளே எனக்கு ஆரம்பத்தில் எழுதுவதற்குக் களம் அமைத்துக்கொடுத்தவை.
 
'வெற்றிமணி' என்றதும் நினைவுக்கு வருமொரு விடயம்..: நான் எட்டாம் வகுப்பில் , யாழ் இந்துக்கல்லூரியில் படிப்பைத்தொடர்வதற்காகச் சென்றிருந்தேன். அவ்வருடத்தின் ஏப்ரில் மாத வெற்றிமணியின் 'இன்பப்பொங்கல்' என்னும் எனது கவிதையொன்று வெளியாகியுள்ளது. ஆனால் அக்கவிதை வெளியான விபரத்தை அண்மையிலேயே அறிந்துகொண்டேன். ஆச்சரியமும் , மகிழ்ச்சியும் அடைந்தேன். பொங்கலுக்கு அனுப்பிய கவிதை ஏப்ரிலில் வெளியானதால் என் கவனத்தை ஈர்க்காமல் போயிருக்க வேண்டும். அத்துடன் அவ்வருடத்தின் ஈஸ்டர் காலத்தையொட்டிய காலகட்டத்தில்தான் நாட்டில் சேகுவேராப் புரட்சி ஏற்பட்டது. அதன் காரணமாக நானும் நீண்ட காலம் எனது மேற்படி கவிதை வெளியான விபரத்தை அறியாமலே இருந்துவிட்டேன்.
 
அண்மையில் நூலகம் இணையத்தளத்தில் வெற்றிமணி சஞ்சிகையின் பழைய இதழ்களைப் புரட்டிக்கொண்டிருக்கையில் ஏப்ரில் 1971 இதழ் என் கவனத்தை உடனைடியாகவே ஈர்த்தது. மேலும் பக்கங்களைப் புரட்டுகையில் கவிதைகளுக்கான பகுதியில் எனது 'இன்பப்பொங்கல்' என்னும் கவிதை வெளியாகியிருந்தது ஓர் இன்ப அதிர்ச்சி.
 
அச்சில் வெளியான  எனது முதல் ஐந்து படைப்புகள்:
 
1. பொங்கலோ பொங்கல் (கவிதை) - சுதந்திரன் (14.1.1970). அப்பொழுது நான் வவுனியா மகா வித்தியாலய ஏழாம் வகுப்பு மாணவன்.
2. சித்திரைத்திருநாள் (கவிதை, 14.4.1970, அப்பாவின் பெயரில், ந.நவரத்தினம், எழுதிய கவிதை). அப்பொழுது நான் வவுனியா மகா வித்தியாலய ஏழாம் வகுப்பு மாணவன்.
3. மரங்கொத்தியும் , மரப்புழுவும் (உருவகக் கதை, வெற்றிமணி 15.11.1970). அப்பொழுது நான் வவுனியா மகா வித்தியாலய ஏழாம் வகுப்பு மாணவன்.
4. தமிழர் திருநாள் (கட்டுரை, வெற்றிமணி 15.1.1971). அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரி, எட்டாம் வகுப்பு மாணவன்.
5. இன்பப்பொங்கல் (கவிதை, வெற்றிமணி 15.4.1971). அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரி, எட்டாம் வகுப்பு மாணவன்.
 
- 15.4.1971 வெற்றிமணியில் வெளியான எனது சிறுவர் கவிதை. -
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.