அண்மையில் செங்கை ஆழியான் தொகுத்திருந்த ஈழகேசரிச் சிறுகதைத்தொகுப்பில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலச் சிறுகதையொன்றினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதன் தலைப்பு 'குருட்டு வாழ்க்கை' இதனைப்பற்றி முன்பும் அறிந்திருக்கின்றேன். ஆனால் வாசித்திருக்கவில்லை. இப்பொழுதுதான் முழுமையாக வாசிக்கக் கிடைத்தது. இது வெளிவந்தது ஈழகேசரியின் 17.05.1942 பதிப்பில். அ.ந.க பிறந்தது ஆகஸ்ட் 8, 1924. அதன் படி இச்சிறுகதை வெளியானபோது அ.ந.க.வுக்கு வயது பதினெட்டு. தொகுப்பிலுள்ள அ.ந.க பற்றிய குறிப்பில் அ.ந.க.வின் முதலாவது சிறுகதை அவரது பதினேழாவது வயதில் ஈழகேசரியில் வெளியானதென்றும் , சிப்பி என்னும் புனை பெயரில் எழுதிய பகல் வெள்ளி என்னும் சிறுகதை 1941இல் பிரசுரமானதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி சிறுகதை வெளியானபோது அ.ந.க.வின் வயது 17 என்பதால் அதுவே அவரது பிரசுரமான முதலாவது சிறுகதையாகவுமிருக்கக் கூடும். (அ.ந.க ஈழகேசரியின் மாணவர் பகுதியில் நிறைய எழுதியுள்ளார். அவைதாம் அவரது பிரசுரமான எழுத்துகள். அப்பகுதியிலும் அவரது சிறுகதையொன்று வெளியாகியுள்ளது. அது அவர் மாணவராக இருந்த சமயம் எழுதிய சிறுகதை).

இச்சிறுகதையின் கதைச்சுருக்கம் வருமாறு: கதைசொல்லியான ராமலிங்கம் நண்பன் சேகரனைப் பலவருடங்களுக்குப் பின்னர் சந்திக்கின்றான். அப்பொழுது அவன் குருடாகவிருக்கின்றான். அவன் தன் வாழ்வின் கதையைக் கூறுகின்றான். அப்பொழுது அவன் தான் இரு தடவைகள் குருடானதாகக் குறிப்பிடுகின்றான். அவன் செல்வந்தர் வீட்டுப்பிள்ளை. அவனது பாடசாலைக்கண்மையிலிருந்த பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த அட்வகேட் ஒருவரின் மகளான ராஜம்மாவை அவன் காதலிக்கின்றான். இதனை அவன் நண்பனான ராமலிங்கத்திடம் கூடக் கூறவில்லை. பின்னர் படிப்பு முடிந்து கிராமத்துக்குத் திரும்பியதும் பெற்றோரிடம் இது பற்றிக் கூறுகின்றான். அச்சமயம் ஊரில் பரவிய அம்மை சேகரனுக்கும் தொற்றி விடுகின்றது. அதனால் அவன் கண்பார்வை போய்விடுகின்றது. கண் பார்வை போய்விட்ட சேகரனுக்கு ராஜம்மாவைப் பெண் கொடுக்க அவளது பெற்றோர் மறுத்துவிடுகின்றனர். இதனைக் கேள்விப்பட்ட சேகரன் மனமொடிந்து விடுகின்றான். அவனது பெற்றோரோ அவனுக்கு இன்னுமொரு பெண்ண மணம் முடிக்க முயற்சி செய்கின்றனர். சேகரனோ அதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் ராஜம்மாவின் பெற்றோர் சம்மதித்து விட்டதாகப் பொய் கூறி இன்னுமொரு பெண்ணை அவனுக்கு மணம் செய்து வைக்கின்றனர். அந்தப்பெண்ணும் அவனது மனக்கண்ணாக விளங்கி அவனுடன் அன்பாக வாழ்ந்து வருகின்றாள்.

இவ்விதம் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கையில் சேகரனின் நண்பன் வரதன் புகழ்பெற்ற ருஷ்ய கண் வைத்தியர் ஒருவர் பற்றிக் கூறுகின்றான். அவரது உதவியால் சேகரனுக்குக் கண்பார்வை வந்துவிடுகின்றது. ஆனால் பார்வை வந்ததும் தான் அதுவரை ராஜம்மா என்று நம்பிய மனைவி அவளல்ல என்ற உண்மை தெரிகின்றது. குருடனாக இருந்தபோது அன்பு மனைவியுடன் இன்பமாக வாழ்ந்ததைப்போல் பார்வை வந்ததும் அவனால் வாழ முடியவில்லை. அதன் காரணமாகவே தன் கண்களைக் குருடாக்கி மீண்டும் அவளுடன் வாழ்கின்றான். இதுதான் கதைச்சுருக்கம். இது அ.ந.க.வின் ஆரம்பகாலச் சிறுகதை. வயதுக்குரிய உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறுகதை.

அ.ந.க.வின் புகழ்பெற்ற நாவலான 'மனக்கண்'நாவலைப்படித்த எவரும் இச்சிறுகதையைப் படித்ததும் ஒன்றினை மிகவும் தெளிவாக உணர்வார்கள். இச்சிறுகதையையே விரித்து மனக்கண் என்னும் நாவலாக அ.ந.க எழுதியிருக்கின்றார் என்பதுவே அப்புரிதல். மனக்கண்ணில் இரண்டாவது தடவையாகப் பார்வையினை இழந்த நாயகனுக்கு மூன்றாம் தடவை பார்வை கிடைக்கின்றது. அது அவனது தந்தையின் தியாகத்தால் அவனுக்குக் கிடைக்கின்றது. தன் கண்களை அவனுக்கு வழங்கி அவர் இறந்து விடுகின்றார். இது சிறுகதையில் இல்லாதது. 

மனக்கண் நாவலின் கதைச்சுருக்கமென்ன?

நாவல் கூறும் கதை இதுதான்: ஶ்ரீதர் இலங்கையின் பெரும் பணக்காரர்களிலொருவரான சிவநேசர் / பாக்கியம் தம்பதியினரின் ஒரே மகன். கொழும்பில் அவர்களுக்குச் சொந்தமான 'கிஷ்கிந்தா' மாளிகையில் தங்கி, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவன். அவனது அறை நண்பனாகத் தங்கியிருப்பவன் சுரேஷ். 'கொழும்புப் பல்கலைகழகத்தில் மருத்துவ பீடத்தில் படிப்பவன். சுரேஷின் படிப்புக்கு உதவி செய்பவர் அவனது மாமா. இதற்குக் காரணம் தனது மகளை 'டாக்டர்' சுரேஷுக்கு மணமுடித்து வைப்பதென்ற எண்ணம்தான். இதற்கிடையில் நாடகங்களில் நடிப்பதில் ஆர்வமுள்ள ஶ்ரீதருக்கும் அவனுடன் கல்வி பயிலும் சக மாணவியான பத்மாவுக்குமிடையில் காதல் ஏற்படுகிறது. பத்மா மிகவும் அழகானவள். அவளது தந்தையான பரமானந்தரும் வாத்தியாரே.

பத்மாவுக்கும் , ஶ்ரீதருக்குமிடையில் காதல் முகிழ்க்கிறது. ஏற்கனவே அவன் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்தவென்பதால் அவனுடன் பழகுவதற்கே சக மாணவர்கள் தயக்கம் கொள்வார்கள். இந்நிலையில் சாதாரண ஆசிரியர் ஒருவரின் மகளான பத்மாவை மணப்பதற்கு முடிவு செய்கின்றான் ஶ்ரீதர். தான் மிகவும் புகழ்பெற்ற தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவென்று கூறி விட்டால் எங்கே பத்மா தன்னை நிராகரித்து விடுவாளோ என்று பயந்த ஶ்ரீதர் தன் குடும்பப்பெருமையினை மறைத்து அவளுடன் பழகுகின்றான். இதற்கிடையில் ஶ்ரீதரின் கிராமத்தில் வசிக்கும் தங்மணி என்பவள் பத்மாவும், ஶ்ரீதரும் காதலர்களாகத் திரிவதைக் கண்டு பொறாமை கொண்டு சிவநேசருக்கு ஒரு மொட்டைக் கடிதமொன்றினை எழுதி விடுகின்றாள்.

ஶ்ரீதரின் தந்தையான சிவநேசரோ சாதி, அந்தஸ்து பார்க்கும் மனிதர். தன் அந்தஸ்துக்குகந்த மணப்பெண்ணாக தன்னையொத்த பணக்காரரான கந்தப்பரின் மகளான டாக்டர் அமுதாவை ஶ்ரீதருக்குக் கட்டி வைக்கத்திட்டமிடுகின்றார். ஊர் வரும் ஶ்ரீதருக்கு திடீரென்றேற்பட்ட கண் நோய் காரணமாக இரு கண்களின் பார்வையும் போய் விடுகின்றது. அவனது பார்வை போய் விட்டதையறிந்த அம்பலவாணர் தன் மகளை ஶ்ரீதருக்குக் கொடுப்பது என்றிருந்த முடிவினை மாற்றி விடுகின்றார். ஏற்கனவே தனக்கு ஶ்ரீதர் பொய் கூறிவிட்டதால் சிறிது ஆத்திரமுற்றிருந்த பத்மாவும் அவனை நிராகரித்து , கட்டழகான கமலநாதன் என்பவனைத் திருமணம் செய்ய விரும்புகின்றாள்.

இதற்கிடையில் இரு கண்களினதும் பார்வையை இழந்த ஶ்ரீதர் பத்மாவை நினத்து ஏங்கி , வருந்துகின்றான். மகனின் வேதனையைத் தாங்காத சிவநேசரின் மனம் மாறுகின்றது. பத்மாவின் வீட்டுக்குச் செல்லும் சிவநேசரிடம் குருடான ஶ்ரீதரை மணமுடித்துத் தனது வாழ்க்கையைச் சிதைக்க முடியாதென்று கூறி அவரை மறுத்துத் திருப்பி அனுப்பி விடுகின்றாள் பத்மா. பத்மாவின் பதிலினக் கூறினால் ஶ்ரீதர் மிகவும் மனம் வருந்துவானெயென்று நினைத்து என்ன செய்வதென்று யோசிக்கின்றார். இதற்கிடையில் கிளார்க்கர் நன்னித்தம்பியாயின் மகளான சுசீலா ஶ்ரீதரின் நிலையினை உணர்ந்து அவனைத் திருமணம் செய்வதற்கும், பத்மாவின் மேல் கொண்ட காதலால் துயரத்திலாழ்ந்திருக்கும் ஶ்ரீதர் முன் பத்மாவாக நடிப்பதற்கும் சம்மதிக்கின்றாள். அவளை உண்மையாகவே பத்மாவாகக் கருதிவிடும் ஶ்ரீதருக்கும், சுசீலாவுக்குமிடையில் தோன்றிய உறவின் விளைவினால் அவர்களுக்கு ஆண்குழந்தையொன்றும் பிறந்து விடுகின்றது. முரளி என்பது அவன் பெயர்.

இதற்கிடையில் கண் வைத்திய நிபுணரொருவரின் உதவியால் பார்வையைபெறும் ஶ்ரீதர் தனக்கு நேர்ந்த ஆள்மாறாட்ட அனுபவத்தைக் கண்டு, தான் வெறுக்கும் சுசீலாவுடன் தொடர்ந்தும் வாழ்வேண்டுமென்றால் தன் பார்வை இருக்கும் மட்டும் அது முடியாது என்று 'தன் கண்களைக் குத்தி மீண்டும் அந்தகனாகி விடுகின்றான். ஆரம்பத்தில் சுசீலவை வெறுக்கும் ஶ்ரீதர் பின்னர் உண்மை நிலை அறிந்து, பத்மா குருடனான தன்னை மணமுடிக்க மறுத்ததையும், அவளிடம் மகனை மணக்கும்படி கேட்டு அவமானப்பட்ட தன் பெற்றோருக்கேற்பட்ட அனுபவத்தையும் அறிந்து அவளை விரும்பத் தொடங்குகின்றான். சிவநேசரோ இறுதியில் தன்னை அழித்துத் தன் கண்களை அந்தகனான மகனுக்கு வழங்கி அவனுக்குப் புது வாழ்வினைக் கொடுக்கின்றார்.

சோபாகிளிஸ்ஸுன் எடிப்பஸ் நாடகப்பாதிப்பு!

மனக்கண்ணில் சோபாகிளிஸ்ஸின் எடிப்பஸ் நாடகம் பற்றியும் வருகின்றது.

ஶ்ரீதர் திறமையான ஓவியன், அத்துடன் நல்லதோர் நடிகனுமாவான். புகழ்பெற்ற கிரேக்க நாடகாசிரியனான சோபாகிளிஸ்ஸுன் புகழ்பெற்ற நாடகமான எடிப்பஸ் நாடகத்தைத் தமிழில் எழுதி, எடிப்பஸ் பாத்திரத்திலும் மிகவும் சிறப்பாக நடிக்கின்றான். நாடகத்தில் வரும் எடிப்பஸ் தந்தையென்று தெரியாது தந்தையைக் கொன்று, தாயென்று தெரியாது அவளையும் மணந்து பிள்ளைகளையும் பெற்றுக்கொள்கின்றான். பின் உண்மை தெரிய வரவே தன் கண்களைக் குத்தித் தன்னைக் குருடாக்கிக்கொள்கின்றான். இந்த நாடகம் முதலில் கொழும்பு பல்கலைக்கழகத்திலும், இரண்டாவது தடவை யாழ் இந்துக் கல்லூரியிலும் நடைபெறுவதாகச் சம்பவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சோபாகிளிஸின் எடிப்பஸ் நாடகத்தின் மூலம் அ.ந.க நாவலின் நாயகனான ஶ்ரீதருக்கு ஏற்படவிருக்கும் நிலையினைக் குறிப்பாகக் கூறி விடுகின்றாரென்றுதான் கூற வேண்டும். எடிப்பஸ் போலவே ஶ்ரீதரும் இழந்த பார்வை பெற்றதும், தனக்குத் தன் காதலியென்ற பெயரில் இன்னொருத்தியைக் கட்டி வைத்துள்ளார்கள் என்பதை அறிந்து, தன்னிரு கண்களையும் குத்தி மீண்டும் குருடனாகி விடுகின்றான். எடிப்பஸ் நாடகத்துக்கும் , மனக்கண் நாவலுக்குமிடையிலுள்ள முக்கியமான ஒற்றுமை ஆள் மாறாட்டத்தின் விளைவாகவே இருவரும் தம் கண்களைக் குத்திக் குருடாகி விடுகின்றார்கள் என்பதுதான். எடிப்பஸ்ஸுக்கும் தன் தந்தை, தாய் யார் என்ற உண்மை நிலை தெரியாத நிலையில் அவனை மீறிச் சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. ஶ்ரீதரின் வாழ்விலும் அவன் குருடனாகிய நிலையில் அவன் அறியாத நிலையில் அவன் வாழ்விலும் ஆள் மாறாட்டம் நிகழ்து சுசீலாவைப் பத்மா என்று கூறி அவனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுகின்றார்கள்.

குருட்டு வாழ்க்கை, மனக்கண், எடிப்பஸ் இவற்றிலுள்ள முக்கியமான ஒற்றுமை கதை நாயகன் தன் பார்வையைத் தானே கெடுத்துக் குருடாகி விடுவதுதான். இவற்றைப் பார்க்கும்போது எனக்கு அ.ந.க.வை மேற்படி எடிப்பஸ் நாடகம் நிறையவே பாதித்திருக்கவேண்டுமென்று தோன்றுகின்றது. மிகவும் இள வயதிலேயே அவரது தீவிர வாசிப்பு காரணமாக அவர் பல மேனாட்டு இலக்கிய நூல்களைப் படித்திருக்கின்றார். அவற்றிலொன்றுதான் சோபாகிளீஸ்ஸின் புகழ்பெற்ற நாவலான எடிப்பஸ் நாடகமும். அதில் வரும் குருடனாகும் சம்பவம் அவர் மனத்தில் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவாக அவர் உருவாக்கிய கற்பனைச் சித்திரங்களே மேற்படி குருட்டு வாழ்க்கை சிறுகதையும், மனக்கண் நாவலும் என்றும் தோன்றுகின்றது.

உசாத்துணை நூல்கள்

1. குருட்டு வாழ்க்கை (சிறுகதை) - அ.ந.கந்தசாமி (ஈழகேசரி 17.05.1942)
2. மனக்கண் (தொடர் நாவல், தினகரன் , இலங்கை, 1967)
3. அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல்! ஓர் அறிமுகம்! - வ.ந.கிரிதரன் (அமேசன் - கிண்டில் பதிப்பாக வெளிவந்துள்ள அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்'  மின்னூலில் வெளிவந்துள்ள வ.ந.கிரிதரனின் அறிமுகக்கட்டுரை)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.