ஜவாத் மரைக்கார் அவர்கள் ஏன் மனைவியைக் கணவள் என்றழைக்கக்கூடாது என்றொரு கேள்வியை எழுப்பி , அவ்விதம் அழைப்பதில் தவறென்ன இருக்கிறது என்ற கேள்வியினை எழுப்பி, இது பற்றி நல்லதொரு பதிவினையிட்டிருந்தார். அவரது கேள்வி நியாயமானது. தர்க்கபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது.
 
இவ்விதம் கணவன் என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல்லாகக் கணவள் என்று பாவிப்பதில் எவ்விதத்தவறுமில்லை. இச்சொல்லும் காலப்போக்கில் நிலைத்து நிற்கும். உண்மையில் கணவனுக்கு ஈடானதொரு சொல் கணவள். அவளுக்கு அவன் கண் என்றால் , அவனுக்கு அவள் கண். நல்லதொரு சொல்.
 
எழுத்தாளர் ஜவாத் மரைக்காரின் கணவள் பற்றிய பதிவினைக் கீழே தருகின்றேன். வாசித்துப்பாருங்கள்.
 
'கணவன்' என்பதற்கு எதிர்ப்பாற் சொல்லாக 'மனைவி' எனப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. மனைவியைக் குறிக்கப் பல்வேறு சொற்களைப் பயன்படுத்துவர். எனினும் ,
கண் + அவன் = கணவன்
என்பதுபோல்,
கண்+ அவள் = கணவள்
என்று கூறுவதில் என்ன தவறிருக்கின்றது ? என்பது
நீண்ட காலமாக என்னுள் தொக்கிநிற்கும் ஐயம்.
 
இது ஒரு புறமிருக்க, மனைவியைக் குறிப்பதற்கு ' கணவி ' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் ஒரு புலவர். கி.பி 18 ஆம் - 19 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த வண்ணக்களஞ்சியப் புலவர் என்ற பன்னூலாசிரியர்தான் அவர். ( வண்ணம் பாடுவதில் வல்லவர் என்பதால் வண்ணக்களஞ்சியம் என்று அழைக்கப்பட்டார்). தான் ஆக்கிய இராஜநாயகம் , முஹியித்தீன் புராணம் , தீன் விளக்கம் போன்ற நூல்களில் ' கணவி ' என்ற சொல்லை அவர் பயன்படுத்தியுள்ளார்.
 
எ.கா :
 
" கறையறு மதிமுகக் கணவி காந்தனென்
றறைதரு மிருவருற் றுக்கு நின்றனர் "
" கண்களி லடங்காக் காட்சி
கணவியு மெவருங் கண்டு "
" பூண்டனன் கணவி தன்னை
நோக்கியே புருடத் தோன்றல் "
 
நன்றி: எழுத்தாளர் ஜவாத் மரைக்காரின் முகநூற பக்கம்.