எழுத்தாளர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) அவர்களின் 'கடவுள் என் சோரநாயகன்' என்னும் கவிதையினை நீண்ட காலமாகத் தேடிக்கொண்டிருந்தேன். அந்தக் கவிதை இலங்கை சாகித்திய மண்டலக் கவியரங்கில் அ.ந.க ஓதிய கவிதை. அதனைப்பற்றி எழுத்தாளர் அ.ந.க பற்றி எழுதி தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

"1966ம் ஆண்டு ஸ்ரீலங்கா சாகித்திய மண்டபத்தில் நடத்திய 'பாவோதல்' நிகழ்ச்சியில் அ.ந.கந்தசாமி பாடிய 'கடவுள் என் சோர நாயகன்' என்ற கவிதை பாவோதல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. அந்தக் கூட்டத்தில் குறிப்புரையாற்றிய தென்புலோலியூர் மு.கண்பதிப்பிள்ளை "ஒரு நூற்றாண்டிற்கு ஒரு தடவைதான் இதைப் போன்ற நல்ல கவிதை தோன்றும்" எனப் பாராட்டினார். "

இந்தக் கவிதையினைச் சில வருடங்களின் முன் முனைவர் சேரனிடமிருந்து பெற்றுக்கொண்டேன். அவரது தந்தையாரிடமிருந்த பழைய கோப்புகளிலிருந்து பெற்றதாகக் குறிப்பிட்டு அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி.

இந்தக் கவிதையில் அ.ந. க கடவுளைச் சோரநாயகனாக்கி உருவகித்திருப்பார். மிகவும் சிறப்பான கவித்துவக் கற்பனை.  இதுவரையில் வேறு யாராவது கடவுளைச் சோர நாயகனாக்கியிருக்கிறார்களா என்பது ஆய்வுக்குரிய விடயம். கவிதை நாஸ்திகராக அறியப்பட்ட ஒருவரைப்பற்றிப் பேசுகிறது. நாஸ்திகராக அறியப்பட்டவர் உண்மையில் நாஸ்திகரா என்றால் அதுதான் இல்லை. அவரை அவ்விதம் அறிந்தவர்கள் அறியாமல் அவரது மனம் கடவுளை நாடுகின்றது. அவரது பகுத்தறிவாளர்களான் நண்பர்கள் அறியா வண்ணம் அவரது உள்ளம் கடவுளை மோகிக்கின்றது. நண்பர்கள் அருகில் இல்லையென்றதும் நாஸ்திகரான அவரின் உள்ளம் பக்திப்பரவசத்தில் குதித்தாடத் தொடங்கிவிடுகின்றது.

"சுற்றுமுற்றும் பார்த்தேன் எனது
உற்ற நண்பர் பகுத்தறிவாளர்
உளரோ என்று. அன்னவர் யாவரும்
மெத்தத் தொலைவில் என்றறிந்திட்டதும்
பக்திப் பெருக்குப் படீரென எழவும்
கல்லை எனது கைகளால் வணங்கித்
"தொல்லை தீரடா தோகை மயிலாள்
வள்ளி கணவர்! வடிவேல் முருகா!
பொல்லாச் சூரனை இல்லா தாக்கிய
நல்லை நகரா, போற்றியென்" றிசைத்தேன்."

இவ்விதம் செல்லும் கவிதையின் இறுதி இவ்விதம் தொடர்கிறது:

"ஆண்டவன் முன்னே நேரே செல்ல
அஞ்சினேன் இருளில் ஆடையுள் மறைந்து
கொஞ்சினேன் அன்னவன் குமிழ் வாயிதழை!
கடவுள் என்றன் கள்ளக் காதலன்.
கள்ளக் காதல் இனிப்பது போல
வெள்ளைக் காதல் இனியா தாதலின்
நாஸ்திகன் பக்தியே
நாட்டில் சிறந்ததாம்!"

'கடவுள் என் சோர நாயகன்' கவிதையின் கிடைக்கப்பெற்ற முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது:

"இலங்கைச் சாகித்திய மண்டலக் கவியரங்கு - 10.12.1966

கடவுள் என் சோரநாயகன்! - அ.ந.கந்தசாமி -

நாஸ்திக ரெல்லாம் நாஸ்திகரல்லர்.
ஆஸ்திக ரெல்லாம் ஆஸ்திகரல்லர்.
ஒருகால் -
நாஸ்திகன் என்றெனை நம்பியிருந்தேன்.
ஆயின் -
கோயில் கண்டதும் கை கூப்பிற்று.
குளத்தைக் கண்டதும் உளம் சுத்திட்டது.
எனவே -
சுற்றுமுற்றும் பார்த்தேன் எனது
உற்ற நண்பர் பகுத்தறிவாளர்
உளரோ என்று. அன்னவர் யாவரும்
மெத்தத் தொலைவில் என்றறிந்திட்டதும்
பக்திப் பெருக்குப் படீரென எழவும்
கல்லை எனது கைகளால் வணங்கித்
"தொல்லை தீரடா தோகை மயிலாள்
வள்ளி கணவர்! வடிவேல் முருகா!
பொல்லாச் சூரனை இல்லா தாக்கிய
நல்லை நகரா, போற்றியென்" றிசைத்தேன்.
நாஸ்திகன் நானா? ஆஸ்திகன் நானா?
என்னை அறியா நிலைக்கு வந்திட்டேன்.
ஆண்டவன் முன்னே நேரே செல்ல
அஞ்சினேன் இருளில் ஆடையுள் மறைந்து
கொஞ்சினேன் அன்னவன் குமிழ் வாயிதழை!
கடவுள் என்றன் கள்ளக் காதலன்.
கள்ளக் காதல் இனிப்பது போல
வெள்ளைக் காதல் இனியா தாதலின்
நாஸ்திகன் பக்தியே
நாட்டில் சிறந்ததாம்!
பக்தனுக் கினிப்பதே
பரமர்க்கு மினிப்பாம்.
ஆகையால் -
வரமெலாம் கிடைக்கும்
பயமிவண் வேண்டாம்!"

இது மேற்படி 'கடவுள் என் சோர நாயகன்'கவிதையின் முழு வடிவமா அல்லது ஒரு பகுதியா என்பது தெரியவில்லை. மேற்படி இலங்கைச் சாகித்திய மண்டலப் பாவோதல் நிகழ்வில் அ.ந.க ஓதியதாக 'சத்திய தரிசனம் அல்லது மனக்கண்' என்னும் மொரு கவிதையினையும் முனைவர் சேரன் அனுப்பியிருந்தார். அதன் வரிகளைப் பார்க்கையில் அவை 'கடவுள் என் சோர நாயகன்'கவிதையின் இறுதி வரிகளோ என்னும் சந்தேகத்தையும் எழுப்புகின்றன. கடவுளைக் கள்ளக் காதலனாக்கி மோகிக்கும் நாஸ்திக மனிதன் இறுதியில் கடவுளை நம்பும் ஆஸ்திகனாக உருமாறுகின்றான் என்பதை வெளிப்படுத்தும் வரிகளாக 'சத்தியதரிசனம்'கவிதை வரிகள் அமைந்துள்ளன. 'சத்திய தரிசனம் அல்லது மனக்கண்' கவிதை வரிகள் வருமாறு:

"சத்திய தரிசனம் அல்லது மனக்கண்!

உண்மையே உண்மையே
உன்னைநான் இதுவரை
ஓரக் கண்ணால்
ஓரொரு தடவை
சோரப் பார்வை
பார்த்தன னல்லால்
நேரில் பார்க்க
நெஞ்சந் துணிந்திலேன்.

உண்மையோர் பெருந்தீ.
ஒளிப்பிழம் பாகும்.
நேரில் பார்த்தவன்
நேத்திரம் தீய்ந்திடும்.
கண்கள் இழந்து
கபோதியு மாவான்
என்பதா லுன்னைக்
கடைக்கணால் கண்டேன்.
ஆயின் இன்றோ
புதியதோர் துணிவு
பூத்ததென் மனதில்
பார்ப்பேன் உண்மையைப்
பட்டொழிந் திடினும்
நெருப்பே உன்னிடம்
நேரே வருவேன்.
கனலே உன்னோடு
காதல் புரிவேன்.
தொட்டுன் உடலை
விட்டில் பூச்சிபோல்
விளையா டுவனே!
இனியான்,
ஊரார்க் கின்பம்
தருதற் காக
ஓரக்கண்ணால்
ஒன்றையும் நோக்கேன்.

இக்கவிதை வரிகள் உண்மையில் எனக்குச் சிறிது குழப்பத்தைத் தருகின்றன. எதற்காக அ.ந.க இக்கவிதைகளை எழுதினார்? இக்கவிதை வரிகளில் வரும் நாஸ்திகன் யார்? உண்மையில் நாஸ்திகராக  வேடமிடும் ஆஸ்திகர்களைப்பற்றிக் கேலியாக எழுதப்பட்ட கவிதையா இது? அல்லது முற்போக்கு, பகுத்தறிவுவாதியான அ.ந.க தன் இறுதிக்காலத்தில் இருப்பு பற்றிய சிந்தனைகளில் மூழ்கியதன் வெளிப்பாடா இக்கவிதை வரிகள். இது ஆய்வுக்குரியது.

அ.ந.க.வைப்பொறுத்தவரையில் அவர் முற்போக்குவாதி. மார்க்சியவாதி. ஆனால் அதே சமயம் அவர் சைவசமய சித்தாந்தங்களை நன்கு அறிந்த ஒருவர். அதனைத்தான் அவரது புகழ்பெற்ற 'மதமாற்றம்' நாடகத்தில் வரும் வரிகள் எடுத்துரைக்கின்றன.அவர் யாழ் இந்துக்கல்லூரியில் உயர் கல்வியைக் கற்கும் காலத்தில் யாழ் இந்துக் கல்லூரியின் சைவ வாலிபர் சங்கத்தின் செயலாளராக இருந்திருக்கின்றார். பின்னரே அவர் மார்க்சிய நூல்களைக் கற்று மார்க்சியவாதியாகப்  பரிணாம மாற்றமடைந்திருக்கின்றார். அதே சமயம் அவர் மார்க்சிய நூல்களைக் கற்று மார்க்சியவாதியாவதற்கு முன்னரே அவர் சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை, வர்க்க வேறுபாடுகளை, தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டு மனங்கொதித்துக் கவிதைகள் எழுதியிருக்கின்றார். இதனையே அவரது 'வில்லூன்றி மயானம்' (தினகரன்) , 'கனல்' (ஈழகேசரி) போன்ற கவிதைகள் புலப்படுத்துகின்றன.

அவர் யாழ் இந்துக்கல்லூரியின் சைவ வாலிபர் சங்கத்தின் செயலாளராக இருந்ததற்கு ஆதாரமாக ஈழகேசரியின் 17.10.1943 பதிப்பில் வெளியான கீழுள்ள விளம்பரம்  அமைகின்றது.

இதிலுள்ள அ.ந.கந்தசாமி என்னும் பெயர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் பெயரென்றே நான் கருதுகின்றேன். இந்த விளம்பரம் வெளியானபோது அவரது வயது 19. இக்காலகட்டத்தில் அவர் யாழ் இந்துக்கல்லூரிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆனால் இச்சங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னரும் இணைந்து இயங்கியிருக்க வேண்டும். ஏனென்றால் அமைப்புன் பெயர் யாழ் இந்துக் கல்லூரியின் மாணவர் சங்கம் அல்ல வாலிபர் சங்கம் என்றிருப்பதால் யாழ் இந்துக்கல்லூரியில் படிப்பை முடித்த மாணவர்களும் இவ்வாலிபர் சங்கத்தில் இணைந்து இயங்கியிருக்க வேண்டுமென்றே கருதுகின்றேன்.

இவ்விதம் சமயத் தத்துவங்களில் ஈடுபாடு காட்டிய அ.ந.க பின்னர் பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுள்ளார். மார்க்சியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுள்ளார். அதனால்தான் அவர் பின்னர் தீவிர பகுத்தறிவுவாதியாக, மார்க்சியவாதியாக தன் வாழ்நாள்முழுவதும் இருந்திருக்கின்றார். அதே சமயம் இருப்பு பற்றிய சிந்தனைகள் அவரது இறுதிக்காலத்தில் அவரை ஆட்கொண்டிருக்கக்கூடுமென்ற சாத்தியக் கூற்றினையே அ.ந.க.வின் மேற்படி 'கடவுள் என் சோரநாயகன்'என்னும் கவிதை வரிகள் புலப்படுத்துவதாக எனக்குத் தெரிகின்றது.

அ.ந.க.வின் இறுதிக்காலத்தில் அவர் இருப்பு பற்றிச் சிந்தித்திருக்கின்றாரென்பதையே அவரது ஆதிசங்கரரின் மொழிபெயர்ப்புக் கவிதையொன்றும் புலப்படுத்துவதாகவும் உணர்கின்றேன். அவரது தொடர்நாவலான 'மனக்கண்' தினகரனில் (மே 31. 1967) வெளிவந்துகொண்டிருந்தபோது அவரது அந்த மொழிபெயர்ப்புக் கவிதையொன்றும் வெளியாகியிருந்தது. அது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆதிசங்கரரின் கவிதையின் ஆங்கிலவழித் தமிழ் மொழிபெயர்ப்பு. இல்லாவிட்டால் எதற்காக அவர் அக்கவிதையை மொழிபெயர்த்திருக்க வேண்டும். அக்கவிதை இருப்பு பற்றி ஆழமாகச் சிந்திக்கும் கவிதைகளிலொன்று. அக்கவிதையில் வரும்

".காண்பதெதனால் காட்சிகளை
மனதால் அவற்றைக் காண்கின்றேன்.
,மனதே கண்ணும் ஆகியதே!
மனமே என்றாய் மனத்தினையே.
மண்ணில் அறிந்தார் யாருளரோ?
நானே மனமாம் நிலமீது.
நானும் மனமும் ஒன்றேயாம்.."

என்னும் வரிகள் ஆழமான தத்துவத் தர்க்கத்தை எழுப்புவை. சிந்தையில் விரியும் கண்ணெதிரே காணப்படும் பொருளுலகு மனத்தின் வெளிப்பாடா? அல்லது அதற்கும் வேறாகக் கிடக்குமோர் உ ண்மையா என்பதைச் சிந்திக்கும் வரிகள். மகாகவி பாரதியாரின் 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையும் இத்தகைய தத்துவச் சிக்கலைச் சிந்திக்குமோர் ஆழ்கருத்து மிக்க கவிதைதான்.

அக்கவிதை வரிகள் வருமாறு:

ஆதிசங்கரரின் 'ஏகசுலோகி' என்பதன் ஆங்கிலவழித்
தமிழாக்கம்! தமிழில்: அ.ந.கந்தசாமி

பகலில் எந்த விளக்காலே
பார்வை நீயும் பெறுகின்றாய்?
ஐயா அந்த ஆதவனால்
அதனை நானும் பெறுகின்றேன்!

இரவில் எந்த ஒளியாலே
இவண் நீ பார்வை பெறுகின்றாய்?
தீபத்தாலே மின்னலினால்
திங்கள் நிலவால் பெறுகின்றேன்.

தீபம் மின்னல் திங்களினைத்
தெரியக் காண்பதெதனால் நீ!
கண்களிரண்டால் அவை கண்டேன்.
கண்ணே காட்சி காட்டிடுமே!

கண்கள் மூடும் காலையிலே
காண்பதெதனால் காட்சிகளை.
மனதால் அவற்றைக் காண்கின்றேன்.
மனதே கண்ணும் ஆகியதே!

மனமே என்றாய் மனத்தினையே.
மண்ணில் அறிந்தார் யாருளரோ?
நானே மனமாம் நிலமீது.
நானும் மனமும் ஒன்றேயாம்.

மனிதா நன்கே சொன்னாய் நீ.
மங்கா ஒளியும் நீயேதான்!
உன்னால் தானே உலகினிலே
உள்ள வெல்லாம் ஒளியாகும்.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி மே 31, 1967.

இவற்றிலிருந்து ஒன்று தெரிகின்றது.  அ.ந.க பகுத்தறிவுக்கொள்கைகளால் ஈடுபட்டு மார்க்சியவாதியாகப் பரிணாமமடைந்தவர். இறுதிவரை அத்தத்துவத்தில் மூழ்கியவராகவே இருந்திருக்கின்றார். ஆனால் இருப்புப் பற்றிய கேள்விகள் அனைத்துத் தத்துவங்களுக்கும் பொதுவானது. முப்பரிமாண இருப்புக்குள் அப்பரிமாணங்களின் சிறைக்கைதிகளாக இருக்கும் மானுடர்களாகிய எமது இருப்பு பற்றிய புரிதல்கள் இயல்பானவை. இருக்க வேண்டியவை. அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைன்  இருப்பு பற்றிய சிந்தனைகளுக்கே தன் வாழ்நாளைச் செலவிட்டார்.

இருப்பு பற்றிய சிந்தனைகளில் ஈடுபடுவதென்பது வேறு. மூடநம்பிக்கைகளை நம்புவதென்பது வேறு. அ.ந.க பல்வேறு பிரிவுகளால் பிளவுண்டிருக்கும் மானுட சமூகத்தில் நடக்கும் போர்களை வெறுத்தவர். வர்க்கங்களாகப்பிளவுண்டிருக்கும் மானுட சமுதாயம் பொதுவுடமைச் சமுதாயமாக பரிணாமமடைய வேண்டுமென்று விரும்பியவர். அதற்காகவே தன் எழுத்துகளைப் படைத்தவர். அவர் தன் இறுதிக்காலத்தில் மானுட இருப்பு பற்றியும் சிந்தித்திருக்க வேண்டுமென்பதை வெளிப்படுத்தும் எழுத்துகளாகவே அவரது 'கடவுள் என் சோர நாயகன்','சத்திய தரிசனம் அல்லது ம் மனக்கண்'  மற்றும் ஆதிசங்கரரின் 'ஏக சுலோகி' மொழிபெயர்ப்புக் கவிதையும் விளங்குகின்றன. ஆனால் இவற்றை எழுதிச் சில வருடங்களில் (14.2.1948) அவர் மறைந்து விட்டார்.இருந்திருந்தால் இருப்பு பற்றிய அவரது எழுத்துகளை, சிந்தனைகளை மேலும் அறிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அ.ந.க.வின் இறுதிக்காலச் சிந்தனைகளை , குறிப்பாக 1967-1968 காலச் சிந்தனைகளைப் பற்றி அறிவதற்கு இன்னும் மேலதிக ஆய்வுகள் அவசியம். அதற்கு அக்காலகட்டத்தில் அவருடன் உரையாடியவர்களின் நனவிடை தோய்தல்கள் உதவக் கூடும். 

ஆதாரங்கள்.

1. ஈழகேசரி யாழ் இந்துக் கல்லூரி வாலிபர் சங்க விளம்பரம்.
2. கவிதை 'கடவுள் என் சோரந் நாயகன்' - அ.ந.கந்தசாமி -
3. கவிதை சத்திய தரிசனன் அல்லது மனக்கண் - அ.ந.கந்தசாமி -
4. மொழிபெயர்ப்புக் கவிதை: ஆதிசங்கரரின் 'ஏக சுலோகி' (தினகரன் மே 31. 1967)
5. 'நான் ஏன் எழுதுகிறேன்?' - அ.ந.கந்தசாமி - தேசாபிமானி (1968), நுட்பம் (80/81), பதிவுகள்.காம்