- அண்மையில் வெளியான எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் 'தராசு முனைகள்'  நூலுக்கு எழுதிய அணிந்துரை. - வ.ந.கி -


எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் 'தராசு முனைகள்' என்னும் நூல் மதிப்புரைகளின் தொகுப்பினை வாசித்தேன். பதினைந்து எழுத்தாளர்களின் பல் வகைப்பட்ட நூல்களைப்பற்றிய மதிப்புரைகள். சுருக்கமான ஆனால் தெளிவான, கதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு போன்ற இலக்கியத்தின் பன்முக வெளிப்பாடுகள் பற்றிய ஆசிரியரின் தெளிவான புரிதல்களின் அடிப்படையில் உருவான மதிப்புரைகள். மதிப்புரைக்காக எடுத்துக்கொண்ட நூல்கள் ஆணாதிக்கம், பணம் ஏற்படுத்தும் அவலங்கள், தாயகத்தின் அவலங்களை, இருப்பின் தன்மை, முதிர்கன்னி, விதவைகள் துயர், தாய்மை, சீதனம், காதல், பிரிவு, தீண்டாமை. இனவாதம், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, நல்லிணக்கம் எனப்பலவற்றைப்பற்றிப் பேசுகின்றன. இத்தொகுப்பு நூலை வாசித்தபோது நான் அவதானித்த முக்கியமான விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்.

நூலாசிரியரின் இலக்கியம் பற்றிய எண்ணங்களைக் கட்டுரைகள் பலவற்றில் காணலாம். நூலாசிரியரின் 'என்னுரை'யில் அவர் கவிதை பற்றிக் கூறுகையில் ''கவிதையின் மிக உயர்ந்த பண்பு உண்ர்வுதான். வடிவம் எதுவாக இருக்கலாம் ஆனால் அது ஏதோ ஒரு இரசத்தைப் பேசவேண்டும். காதல், அன்பு, சோகம் , பாசம் , பரிவு , வீரம், விடுதலை எதுவாகவும் இருக்கலாம். ' என்று கூறுகின்றார். கவிதை பற்றிய தெளிவான கருத்து. கவிதையின் மிக முக்கியமான பண்பே அது வெளிப்படுத்தும் உணர்வுதான். கவிதையொன்று எது பற்றியதாக இருந்தாலும் அதன் சிறப்பு, வெற்றியென்பது அது வெளிப்படுத்தும் உணர்விலேயே தங்கியுள்ளது என்பதில் எனக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இதன் அடிப்படையில் கவிதைகளை எடைபோடும் நூலாசிரியர் அவற்றை அவற்றின் ஏனைய முக்கிய கூறுகளான சொல்லாட்சி, பாடுபொருள் போன்றவற்றையும் உள்வாங்கியே எடைபோடுகின்றார் என்பதை நூலிலுள்ள மதிப்புரைகள் வெளிப்படுத்துகின்றன.

இது போல் எழுத்தாளர் சுதாகரியின் 'அரங்க அலைகள்' ஆறு நாடகங்களின் தொகுப்பு. தொகுப்பு நூல் பற்றிய மதிப்புரை நாடகம் பற்றிய நூலாசிரியரின் நாடகம் பற்றிய புரிதலையும் எமக்கு எடுத்துரைக்கின்றது. நாடக வழக்கு பற்றிய தொல்காப்பியர் கூற்றுகளின் அடிப்படையில் , அவற்றை அளவுகோல்களாகக் கொண்டு இந்நாடகப்பிரதியை எடை போடுகின்றார்.

இதுபோலவே எழுத்தாளர் கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளான 'என்றாவது ஒருநாள்' எழுத்தாளர் ஹென்று லாசனின் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புக் கதைகள். இச்சிறு மதிப்புரையே மொழிபெயர்ப்பு பற்றிய, மொழியாக்கம் பற்றிய , அவற்றின் பிரிவுகள் பற்றிய தெளிவானதொரு கட்டுரையாகவுமிருக்கின்றது.

இவ்விதம் கதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு எனப்பல்வகை நூல்களை எடைபோடும் நூலாசிரியர் இலக்கியத்தின் அவ்வகைகள் பற்றிய தெளிவான புரிதல்களுடன் அவற்றை எடைபோடுவதை நன்கு அவதானிக்க முடிகின்றது. இது இம்மதிப்புரைகளின் தொகுப்பில் நான் அவதானிக்கும் முக்கியமான பண்புகளிலிலொன்று.

அடுத்த முக்கியமான பண்பாக, சிறப்பாக நான் கருதுவது அவர் இம்மதிப்புரைகளை எழுதப்பாவித்துள்ள மொழி. கவித்துவம் மிக்கதொரு மொழியில் அவர் இவற்றை எழுதியுள்ளார். அவ்வகையில் இவை ஏனைய பொதுவாக எழுதப்படும் மதிப்புரைகளிலிருந்தும் வேறுபடுகின்றன. இக்கவித்துவம் மிக்க மொழி இம்மதிப்புரைகளையே கவிதைகளாக்கி எம் வாசிப்புக்குச் சுவை சேர்க்கின்றன. உதாரணங்கள் சிலவற்றை இங்கு தருவது பொருத்தமானது. எழுத்தாளர் மாலினி மாலாவின் 'அர்த்தமுள்ள மெளனம்' பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

' எனது முதல் வாசிப்பில் எடை போட்டேன். எடுகோள் தவறானால், எடையும் தவறாகும். தராசு பிழைத்தால் தங்கத்தின் தரம் , எடை எல்லாமே பிழையாகும் என்பதனை எனது இரண்டாவது வாசிப்பின்போது உணர்ந்து கொண்டேன்' இவ்வரிகளைக் கீழுள்ளவாறெழுதினால் அவையொரு கவிதை வரிகளாகி விடுகின்றன.

' எனது முதல் வாசிப்பில்
எடை போட்டேன்.
எடுகோள் தவறானால்,
எடையும் தவறாகும்.
தராசு பிழைத்தால்
தங்கத்தின்
தரம் , எடை
எல்லாமே பிழையாகும்
என்பதனை
எனது இரண்டாவது வாசிப்பின்போது
உணர்ந்து கொண்டேன்'

எழுத்தாளர் மணிமேகலையின் 'தாயுமானவன்' நூல் பற்றிய மதிப்புரையில் பின்வருமாறு கூறுவார் (வரிகளைப் பிரித்து கவிதை வடிவில் தந்துள்ளேன்):

'போர் கிழித்த தேசம்தான் எமது தேசம்.
புன்னகை இழந்த முகங்கள்தான் எமது மக்கள்.
இருந்த போதும்
இந்த
மண்ணின் மணமும் மாறவில்லை.
மக்களின் மனமும் சோரவில்லை'

இவ்விதம் கவித்துவமொழியில் மதிப்புரைகள் அமைந்திருப்பது இத்தொகுப்பு நூலின் இன்னுமொரு முக்கியமான சிறப்பு ,பண்பு என்பேன்.

அடுத்த முக்கியமான பண்பாக நான் கருதுவது மதிப்புரைகளின் அளவு. சுருக்கமான ஆனால் தெளிவான மதிப்புரைகள். மதிப்புரைகள் அனைத்தும் சுருங்கக் கூறி விளங்க வைப்பவை. மதிப்புரைகள் அனைத்தும் தேவையற்ற அலட்டல்கள் தவிர்த்து நேரடியாக எடுத்துக்கொண்ட நூல் பற்றிய எண்ணங்களை முன் வைக்கின்றன.

இவை மூன்றும் இம்மதிப்புரைகளின் தொகுப்பு நூலின் முக்கிய பண்புகளாக எனக்குத் தோன்றுகின்றன. இம்மதிப்புரைகளின் தொகுப்புக்கு ஆசிரியர் வைத்த தலைப்பும் பொருத்தமான தலைப்பாகவே உணர்கின்றேன். 'தராசு முனைகள்' - தலைப்பு பற்றிக் குறிப்பிடும் நூலாசிரியர் 'தராசு முனை என்றும் நீதி வழுவாத தீர்ப்புகளையே இங்கே வழங்கியிருக்கின்றது என்ற சுய நினைவோடு இத்தால் உறுதி கூறுகிறேன்' என்று கூறுகின்றார். தராசுகள் பொருட்களை எடைபோடுவன. இத்தராசோ இலக்கியத்தை எடை போடுகின்றது. நியாயமாகவே எடை போடுகின்ற்து.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.