ஜுன் 1 இலங்கை வரலாற்றில், குறிப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றில் கறை படிந்த நாள். ஆம்! யாழ் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டது யூன் 1 , 1981 இரவுதான். எரியுண்ட நூலகத்தில் அரிய ஆய்வு ஆவணங்கள், சுவடிகள், நூல்கள் பலவும் எரியுண்டு போயின. நூலக எரிப்பு ஏற்படுத்திய அதிர்ச்சி தமிழ் அறிஞர் தாவீது அடிகளின் உயிரையும் பறித்துச் சென்றது.

என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத பகுதியாக நூலகத்துடனான எனது உறவும், பிணைப்புமிருந்தனவென்பேன். பால்ய , பதின்மப் பருவங்களில் என் தோழராக, ஆசிரியராக யாழ் பொது சன நூலகம் இருந்ததென்றால் அது மிகையானதொரு கூற்றல்ல.

யாழ் பொதுசன நூலகத்தை நினைத்ததும் நினைவில் வரும் நூல்கள் சிலவாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

கல்வி கோபாலகிருஷ்ணனின் 'பண்டை உலகில் பறக்கும் பாப்பா' , 'பெளதிகத்தின் வரலாறு' போன்ற அறிவியல் நூல்கள், டால்ஸ்டாயின் 'போரும் சமாதானமும்' , சிவராம் காரந்தின் 'மண்ணும் மனிதரும்', 'நீங்களும் விஞ்ஞானியாகலாம்' (இது கலைக்கதிர் வெளியீடாக இருக்க வேண்டும். சிறுவர்களைக் கவரும் வகையிலான சித்திரங்கள் உ ள்ளடங்கிய கல்கி இதழ் அளவிலான நூல். எனக்கு மிகவும் பிடித்த நூல். இந்நூலிலுள்ள பூதக்கண்ணாடி கொண்டு சூழலை ஆய்வு செய்யும் சிறுவன் ஒருவனின் சித்திரம் எனக்கு இன்பத்தைத் தந்தது. கற்பனையைச் சிறகடிக்க வைத்தது. அச்சிறுவன் போல் நானும் பூதக்கண்ணாடியைத் தூக்கிக்கொண்டு வீட்டு வளவு முழுவதும் சுற்றி வருவேன். ) கல்கி, சாண்டில்யன் போன்றோரின் வெகுசனப் படைப்புகள் என எண்ணற்ற நூல்கள் எனக்கு வாசிப்பில் இன்பத்தைத்தந்தன.

நூலகத்தில் கழித்த பொழுதுகள், அடைந்த இன்பம் எல்லாமே மறக்க முடியாத, அழிக்க முடியாத நினைவுகளாக நிலைத்து நிற்கின்றன. இருப்பு உள்ளவரை இருக்கப்போகும் நினைவுகள் அவை.