தத்யயேவ்ஸ்கி நூல்களுக்குப் புறக்கணிப்பா?

அண்மையில் சாப்டர்ஸ் புத்தகக் கடைக்குச் சென்றிருந்தபோது ஒன்றை அவதானித்தேன். வழக்கமாக ருஷ்ய எழுத்தாளர் தத்யயேவ்ஸ்கியின் அனைத்துப் புத்தகங்களையும் அங்கு காணலாம். ஆனால் இம்முறை பெயருக்கு ஒன்றிரண்டே காணப்பட்டன.

தற்போது நடைபெறும் ருஷ்ய-உக்ரைன் யுத்தம் காரணமாக மேற்கு நாடுகள் ருஷ்ய பொருட்கள் மேல் ருஷ்ய சொத்துகள் மேல், ருஷ்ய மனிதர்கள் மேல் என்று பல்வகைத்தடைகளை விதித்து வருவதன் நிலையோ சாப்டர்ஸில் தத்யயேவ்ஸ்கி நூல்கள் மீதான இந்தப் புறக்கணிப்பும் என்றும் எண்ணம் தோன்றாமலில்லை.

'ட்வீட்டர்' (varcharian என்பவரின் 'ட்வீட்') தகவலொன்றின்படி ஸ்வீடனிலுள்ள நீதிமன்றமொன்று தத்யயேவ்ஸ்கியின் புகழ்பெற்ற நாவலான 'குற்றமும் தண்டனையும்' நாயகன் Raskolnikov , நாவலில் செய்த கொலைக்குத் தண்டனையாக அவனுக்கு ஆயுட்காலத்தண்டனை விதித்துள்ளது. இத்தனைக்கும் தத்யயேவ்ஸ்கி அன்றிருந்த ருஷ்ய அரசால் சைபீரியாவில் சிறைவைக்கப்பட்ட ஒருவர். இச்செய்தியின் உண்மை பொய் தெரியுவில்லை.

ருஷ்ய இலக்கியமென்பது உலக இலக்கியத்தின் உலராத ஊற்றுகளிலொன்று. அவ்வூற்றை யாராலும் தடுக்க முடியாது. மறைக்க முடியாது. உலக இலக்கியத்துக்கு அதன் பங்களிப்பென்பது போற்றுதற்குரியது. சமகால அரசியல் கண்கொண்டு அதனைப் பார்ப்பது முட்டாள்தனமானதோர் அணுகுமுறை. எதற்கும் மறுமுறை சாப்டர்ஸ் செல்லும்போதும் இந்நிலை தொடர்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

இச்சமயத்தில் இலங்கையில் இந்தியப்படைகளின் அட்டூழியம் மேலோங்கியிருந்த சமயத்தில் இந்திய தேசிய விடுதலைக்காகக் குரல் கொடுத்த பாரதியின் எழுத்துகளுக்கெதிரான எதிர்ப்புணர்வுகளை ஊடகங்களில் அவதானித்தது நினைவுக்கு வருகின்றது.


கவிஞர் புதுவை இரத்தினதுரையின் 'ஒரு இலங்கையனின் பாடல்'!

இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டக் காலத்தில் தமிழ்த்தேசியக் கவிஞராகக் கொண்டாடப்பட்டவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை. அத்துடன் விடுதலைப்புலிகள் அமைப்பில் ஆயுதம் தரித்து இயங்கியவரும் கூட.

இவர் ஆரம்பத்தில் இடதுசாரிக் கவிஞராக, கவிஞர் வரதபாக்கியனாக, எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் 'குமரன்' சஞ்சிகை மூலம் எனக்கு அறிமுகமானார். ஈழநாடு வாரமலரில் (12.3.1978) வெளியான இக்கவிதையில் 'ஒரு இலங்கையனின் பாடல்' என்று இலங்கை நாட்டைப் புகழ்ந்து பாடியிருக்கின்றார். பின்னர் நாட்டிலேற்பட்ட தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் காரணமாகத் தமிழ்த் தேசியக் கவிஞராக உருமாறினார். இலங்கையைப் பற்றி ஒருகாலத்தில் இவ்விதம் புகழ்ந்து பாடிய கவிஞனை அதே இலங்கை நாட்டின் அரசபடைகள் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கைது செய்து காணாமலாக்கினார்களென்பது காலம் செய்த கோலம். சரணடைந்தபோது காணாமல் போன இவர் இன்றுவரை காணாமால் போனவர்களில் ஒருவராகவேயிருக்கின்றார்.


குமாரி ஆர்.குமுதினி (பின்னர் ரேலங்கி செல்வராஜா)....


ஈழநாடு வாரமலரில் (13.8.1978) வெளியான இப்புகைப்படத்திலிருப்பவர் இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெளியான 'தெய்வம் தந்த வீடு' (சினிமாஸ்கோப்) திரைப்பட நாயகியும், நாடக நடிகையும், சிறந்த நர்த்தகியுமான குமாரி ஆர்.குமுதினி.

இவர்தான் பின்னர் ரூபவாகினியில் பணியாற்றிய ஊடகவியலாளரும், நடிகையுமான ரேலங்கி செல்வராஜா (சுட்டிக் காட்டிய எழுத்தாளர் இரவி அருணாசலத்துக்கு நன்றி). இவரும் , இவரது கணவரும் இலங்கை வெளிவிவகார அமைச்சராகவிருந்த லக்சுமண் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட அதே தினத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இவரைப்பற்றி விக்கிபீடியாக் குறிப்பினை வாசிக்க: https://ta.wikipedia.org/s/ub5
ஈழநாடு பத்திரிகை மற்றும் விக்கிபீடியாக் குறிப்புகளிலிருந்து ரேலங்கி செல்வராஜாவின் இயற்பெயர் ரேலங்கி குமுதினி என்பதை அறிய முடிகின்றது.


உலர்ந்த தமிழன்?

அவ்வப்போது பாரதியாரின் கவிதைப்புத்தகத்தைப் பிரித்து அகப்பட்ட பக்கத்தை வாசிப்பது என் வழக்கம். அவ்விதம் இப்போது புத்தகத்தைப் பிரித்ததும் அகப்பட்ட பக்கத்திலுள்ள அவரது வசன கவிதைப்பக்கத்திலிருந்தவை:

"மழை பெய்கிறது.
ஊர் முழுவதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள்
எருமைகளைப்போல,
எப்போதும்
ஈரத்திலேயே நிற்கிறார்கள்.
ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கின்றார்கள்.
ஈரத்திலேயே நடக்கிறார்கள்.
ஈரத்திலேயே படுக்கிறார்கள்.
ஈரத்திலேயே சமையல்.
ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட
அகப்பட மாட்டான்."

'உலர்ந்த தமிழன்' என்னும் சொற்பதம் ஈரத்தைச் சிறப்பானதொரு படிமமாக இக்கவிதையில் வெளிப்படுத்துகின்றது. 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.