- ஸ்கார்பரோவில் நேற்று நடைபெற்ற எழுத்தாளரும், நடு இணைய இதழ் ஆசிரியருமான கோமகன் அவர்களை நிஒனைவு கூர்தல் மற்றும் நடு 50 இதழின் வெளியீடு ஆகியவற்றை உள்ளடக்கிய நிகழ்வில் நான் ஆற்றிய உரையின் விரிவான வடிவமிது. - வ.ந.கி -


இன்று இங்கு கூடியிருக்கும் பேச்சாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள். சமூக அரசியற் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் முதலில் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இன்று நாம் இதழாசிரியரும் , எழுத்தாளருமான நண்பர் கோமகனின் எழுத்து மற்றும் இதழியற் பங்களிப்பை உள்ளடக்கிய இலக்கியப் பங்களிப்பு பற்றிப் பேசுவதற்கும், அவரை நினைவு கூர்வதற்கும், அவரது இலட்சியக் கனவான நடு இணைய இதழின் அச்சு வடிவினை அறிமுகப்படுத்துவதற்காகவும் கூடியிருகின்றோம். அதற்காக இங்கு எழுத்துலக ஆளுமைகள் பலர் கலந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தம் கண்ணோட்டத்தில் கோமகனை நமக்கு அறிமுகப்படுத்தவிருக்கின்றார்கள்.

கோமகனை நான் ஒரு போதும் நேரில் சந்தித்ததில்லை. அவருடன் உரையாடியதுமில்லை. ஆயினும் அவரும் நானும் முகநூல் மெசஞ்சர் மூலம் தொடர்பிலிருந்தோம். அத்தொழில்நுட்பத்தினூடு உரையாடிக்கொண்டிருந்தோம். அவர் படைப்புகளை வேண்டி நிற்கும்போது என் படைப்புகளை வழங்கியிருக்கின்றேன். இணைய இதழ் தொழில்நுட்பம் பற்றிக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டிருந்தோம். அவருடனான எனது தொடர்பிலிருந்து அவரைப்பற்றியதொரு பிம்பம் என்னுள்ளத்திலிருந்தது. இதழாசிரியராக, எழுத்தாளராக விளங்கிய அவர் சுயமாகத் தகவற் தொழில் நுட்பத்தை இணையம் மூலம் கற்பதில் வெற்றியடைந்தார். அதனால் அவரால் நடு இணைய இதழைத் தனியாக வடிவமைக்க முடிந்தது. இவ்விதம் இணைய இதழொன்றினைச் சுயமாக வடிவமைத்து, ஆக்கங்களைப் பெற்று , அவற்றைப் பதிவேற்றுவதென்பது மிகவும் நேரத்தை எடுக்குமொரு செயல் என்பதைப் பதிவுகள் இணைய இதழை உருவாக்கிப் பராமரிப்பவன் என்னும் என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் அறிவேன். ஆர்வமும், மிகுந்த அர்ப்பணிப்பும் இருந்தாலன்றி இவ்விதமான இணைய இதழொன்றினைத் தொடர்ச்சியாக வெளியிட முடியாது. இதனால்தான் பலர் இவ்வித இணைய இதழ்களை அல்லது வலைப்பூக்களை உருவாக்கிவிட்டு, ஆரம்பத்தில் சிறிது காலம் உற்சாகமாக இருந்துவிட்டு பின்னர் ஓய்ந்து விடுவார்கள். இதனால் எப்பொழுதும் எனக்குக் கோமகன் மீது தனிப்பட்ட மதிப்பும், அன்புமுண்டு.

நானறிந்த வகையில் கோமகனின் ஆளூமைகள் பன்முகப்பட்டவை. அவரோர் இதழாசிரியர். அவர் ஒரு புனைகதை எழுத்தாளர். அவர் ஒரு தகவற் தொழில் நுட்பவியலாளர். அவர் ஒரு வெளியீட்டாளர். இவ்வகை ஆளுமைகளோடு அவர் குழந்தையைப்போலும் முகநூலைப் பாவித்துக்கொண்டிருந்தார். அவரது குழந்தைத்தனமான முகநூற் பதிவுகள் மூலம் பலரையும் அவர் மகிழ்ச்சிக்குட்படுத்திக்கொண்டிருந்தார். அவரது இறுதிப் பயணத்தின்போது கூட அவர் புகைப்படங்கள் பலவற்றைப் பதிவிட்டு அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திக்கொண்டிருந்தார். இவ்விதமானதொரு சூழலில் அவரது திடீர் மறைவு யாருமே எதிர்பாராதது. அதனைப் பலராலும் ஜீரணிக்க முடியாமலிருந்தது. முகநூலில் குவிந்துகொண்டிருந்த அனுதாபச் செய்திகள் அவர் எவ்வளவுதூரம் பலவகைப்பட்ட நண்பர்களையும் பாதித்திருந்தார் என்பதைப் புலப்படுத்தின.

நடு இணைய இதழ் அவரது வாழ்க்கையின் பிரதான இலட்சியமாகவிருந்ததை உணர்ந்தேன். அதன் மூலம் எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடல், நடு இதழை வருடத்தின் ஆரம்பத்திலும், இறுதியிலும் அச்சிதழாக வெளியிடல். அதே சமயம் நடு இணைய இதழைக் காலாண்டிதழாக இணையத்தில் வெளியிடல் என அவர் பல்வேறு திட்டங்களை வைத்திருந்தார். அவை முறையாக நிறைவேறுவதற்கு முன்னர் , நடு 50 இதழை அச்சில் காண்பதற்கு முன்னர் அவர் மறைந்தது துரதிருஷ்ட்டமானது. இருந்தாலும் அவரது நண்பர்கள் நடு 50 இதழினை அச்சிதழாக வெளிவரச்செய்திருக்கின்றார்கள். குறிப்பாகச் சென்னையிலுள்ள பதிப்பாளர் மொகமட் சிராயுதீன் அவர்கள் நடு 50 இதழின் வெளியீட்டுக்கு முக்கியமானவர். அது பாராட்டுக்குரியது.

நடு 50 இதழ் உண்மையில் பெருமைப்படத்தக்க வகையில் , காத்திரமான படைப்புகளைத் தாங்கி வெளிவந்துள்ளது. கட்டுரை, கவிதை, சிறுகதை, நேர்காணல் , மொழிபெயர்ப்பு என இலக்கிய ஆளுமைகள் பலர் தம் படைப்புகளை வழங்கியுள்ளார்கள். அவற்றிலுள்ள படைப்புகள் விரிவான ஆய்வுக்குரியவை. அவற்றில் சில படைப்புகளைப் பற்றிய எனது எண்ணங்களை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

கவிஞர் தாட்சாயணியின் 'பேச ஒன்றுமில்லை' யுத்தத்தின் இறுதிக்காலத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்ககளின் குறிப்பாகப் பெண் போராளிகளின் வலியினை எடுத்தியம்புகின்றது. தமிழ்க் கவியின் 'ஏன் எதற்கு' யுத்தச்சூழலையும், சூழலில் அவள் இழந்த மகனையும் பற்றிப் பேசுகிறது. வழமைப்போல் மண் வாசனை மிக்க எழுத்து தமிழ்க்கவியினுடையது. இக்கதையும் அத்தகையது. கதையை வாசித்து முடித்தபோது 'ஏன்? எதற்கு/' இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்க்கையில் நடக்கின்றது என்று கேள்வி எழுகின்றது.

ஐ.கிருத்திகாவின் 'தொலைதல்' இதழில் குறிப்பிட வேண்டிய கதைகளிலொன்று. முப்பதுகளில் கணவனை இழந்த , இரு இளம் பெண்களுக்குத் தாயான பெண்ணொருத்தியின் கதையினைக் கூறும் கதை. பாத்திரப்படைப்புகள் சிறப்பாக அமைந்துள்ளன. தன் பெண்களை உறவுக்காரப் பையன்கள் யாராவது கட்டிக்கரை சேர்க்க மாட்டார்களா என்ற தாயின் ஆதங்கங்களை கதை வெளிப்படுத்துகின்றது. அவளது உளவியற் துயரங்களால் மாறிய அவளது மனநிலையைப்பற்றிக் கதை பேசுகின்றது. பெண்கள் இருவரும் வேலை பார்க்கின்றார்கள். ஆனாலும் அவர்களைக் கரை சேர்க்க ராஜகுமாரர்கள் எவரும் வரவில்லை. அவ்விளம்பெண்களின் உணர்வுகளையும் கதை பேசுகின்றது. கதை முடிகையில் இருண்டு கிடக்கும் அவர்களது வீட்டைப்போலுள்ளது அவர்கள்தம் இருப்பு. வாசகர்கள் நெஞ்சங்களை வலிக்க வைக்கும் கதைகளிலொன்று கிருத்திகாவின் 'தொலைதல்'.

அனுரசிரி ஹெட்டிகேயின் சிங்களச் சிறுகதையொன்று தமிழில் முசுறு என்னும் தலைப்பில் லறீனா அப்துல் ஹக்கினால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஐம்பத்தாறு வயதுடைய ஆபிஸில் உயர்பதவியில் இருக்கும் ஒரு முதியவரின் அவரது செயலாளினியான இளம் பெண் மீதான சபலத்தைப் பேசும் கதை. நோய்வாய்ப்பட்ட அவரது மனைவிடமிருந்து பாலியல் சுகமெதனையும் பெற முடியாத முதியவர் இறுதியில் தடம் புரளும்போது அவ்விளம் செயலாளினியிடமிருந்து அறையையும், கடும் திட்டையும் பரிசாகப் பெறுகின்றார். மயங்கி விழுந்தும் விடுகின்றார். அவர் மயங்கி விழுந்ததைக் கண்டதும் அவ்விளம்பெண் கூக்குரலிட்டுக்கொண்டு வெளியே ஓடி மற்றவர்களுக்கு அதனை அறியத்தந்ததால்தான் அவர் மயங்கி விழுந்த விடயத்தை மற்றவர்கள் அறிய முடிந்து அவரைக் காப்பாற்ற முடிந்ததென்று அவளுக்குப் பாராட்டு வேறூ கிடைக்கின்றது. இதன் கருவைப்பொறுத்தவரையில் புதிய மொந்தையில் ஊற்றிய பழைய கள்ளாகவே இதனைக் கருதவேண்டியுள்ளது. ஏனென்றால் இக்கருவையொட்டி பல புனைகதைகளை ஏற்கனவே நாமெல்லாரும் படித்திருக்கின்றோம்.

ஆனால் பழைய கள் புதிய மொந்தையில் சுவைப்பதற்குக் காரணம் இக்கதையில் வரும் முசுறுதான். முசுறு சிறப்பானதொரு படிமம். குறியீடு. அந்த முதியவரின் சபல உணர்வுகள்தாம் முசுறாக ஆசிரியரால் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முசுறு கதைக்கும் ஒரு நவீனத்தன்மையினைக் கொடுத்து விடுகின்றது. வாசகர்களுக்கு முசுறு புதிராகவிருக்கும். ஆனால் தேர்ந்த வாசகர்கள் முசுறுவின் சுயரூபத்தை, அடையாளத்தை மிகவும் இயல்பாக, இலகுவாகக் கண்டு பிடித்து விடுவார்கள். முசுறு இச்சிறுகதையின் முக்கிய பலம். மூலத்தை மொழிபெயர்ப்பினூடு படிக்கையில் மூலத்தைப் படிப்பதுபோலுள்ளது. அது மொழிபெயர்ப்பாளரின் திறமையினைப் புலப்படுத்துகின்றது.

சாத்திரியின் இருமனம் சிறுகதையும் ஒரு விதத்தில் புதிய மொந்தையில் ஊற்றிய பழைய கள்தான். இதுபோன்ற மையக்கருத்துள்ள புனைகதைகள் பலவற்றை ஏற்கனவே வாசித்துள்ளோம். புகலிடத்தில் தன்னைக்காதலிக்கும் வேற்றினப் பெண்ணைத் தவிர்த்துவிட்டு, ஊருக்குச் சென்று மணம் புரியும் ஒருவன், மனைவியின் காதலை அறிந்து அவளை அவளது காதலனுடன் சேர்த்துவிட்டு புகலிடம் திரும்பித் தன்னைக் காதலித்தவளைத் தேடும் கதை. அகிலனின் சிநேகிதி, நாரண துரைக்கண்ணனின் உயிரோவியம், நடிகர் சந்திரபாபுவின் சொந்தக்கதை, பாக்கியராஜின் அந்த ஏழு நாட்கள் திரைப்படம் இவையெல்லாம் மணமுடித்தவளின் காதலை உணர்ந்து , அவளைக் காதலனுடன் சேர்த்து வைக்கும் மையக்கருவினைக்கொண்டவை. என் வாசிப்பனுபவத்தின்படி சாத்திரியின் வெற்றி அவரது சொந்தப் போரனுபவங்களைக் களங்களாகக் கொண்ட கதைகளில் அதிகமாக உள்ளடங்கியிருப்பதாக உணர்கின்றேன்.

கோ.நாதனின் 'இறைச்சி காமத்தின் குறியீடு', ஜெயதர்கமனின் 'இரவுப்பறவை' மானுட காமத்தை, அதன் விளைவான உணர்வுகளைப்பற்றிப் பேசுகின்றன.

யனீஸ்கரனின் 'தீட்டெனும் கொண்டாட்டம்' இளைஞனொருவன் தன் பாடசாலைக் காலத்தோழி ஒருத்தி பற்றிக் கூறுவதாக அமைந்துள்ள கதை. கதையின் முடிவு கதையின் தரத்தைக் குறைத்து விட்டதாகத் தோன்றுகின்றது. படித்திருக்க வேண்டிய பெண்ணொருத்தியை , அவளுக்குச் சற்றும் பொருத்தமில்லாத, இருபது வயது வித்தியாசம் மிக்க ஒருவனுக்கு மணமுடித்து வைத்துவிடுகின்றார்கள். அவனோ அவளோ அவளது உணர்வுகளை மதிக்காது பாலியற் பொம்மையாகப் பாவித்து வருகின்றான். கதை சொல்லியான இளைஞனுடன் அலைபேசியில் நட்பைத்தொடரும் அவள் தன் உணர்வுகளையெல்லாம் கொட்டித்தீர்க்கின்றாள். இந்நிலையில் இளைஞனுக்கும் இன்னுமொரு பெண்ணுடன் திருமணம் நடைபெறுகின்றது. அவனுடன் தொடர்பிலிருக்கும் திருமணமான பாடசாலைத்தோழியுடனான தொடர்ப்புகள் படிப்படியாகக் குறைந்துபோய் ஒரு கட்டத்தில் இல்லாமலாகிவிடுகின்றன. சிறிது காலத்தின் பின் ஆறுமாதக் குழந்தையுடன் அவள் ஓடிப்போனதாகச் செய்தியொன்று வருகின்றது. காலப்போக்கில் அச்செய்தியும் காற்றோடு காற்றாக அடங்கி விடுகின்றது. இவ்விதம் கதை முடிகின்றது. கதையில் திருமணம் பற்றிய கேள்விகள் எழுப்ப்படுகின்றன. மனைவி என்னும் பெயரில் பாலியல்ரீதியிலான வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் நிலை பற்றிய விமர்சனம் எழுப்பப்படுகின்றது. இறுதியில் அப்பெண்ணின் நிலை வலிந்து திணிக்கப்பட்டதாகவுள்ளது. இவ்வளவுதூரம் அப்பெண்ணுடன் பழகி, அவள நிலைக்காக வருந்தும் கதைசொல்லி அவளை ஏற்றுக்கொண்டிருக்கலாமோ என்றொரு எண்ணம் ஏற்படுகின்றது. அவள் அதனை எதிர்பார்த்துத்தான் அவஞுடன் பழகினாள். ஆனால் அவனுக்கு அந்தத் துணிச்சல் இல்லாததால், அவள் துணிச்சல் மிகுந்த ஒருவனைக் கண்டு , அவனுடன் சென்று விட்டாள் என்று கதாசிரியர் கூறக்கூடும். அப்படிக் கூறினால் அதுவும் நியாயமான வாதமாகத்தானிருக்கும். கதை கொரோனாக் காலச் சூழலையும் பின்னணியில் பதிவு செய்கின்றது.

உமாஜியின் குறுஞ்செய்தி கதை போர்ச்சூழலின் இன்னுமொரு முகத்தைக் காட்டுகின்றது. விடுதலைப்புலிகளின் சிறு விமானம் கொழும்பு பறந்து வந்த காலகட்டத்தை, அக்காலகட்டத்த்துக் கொழும்புத் தமிழர்கள் பலரின் உளவியலைப் படம் பிடித்துக்காட்டுகின்றது. அக்காலக்கொழும்பு நகரத்து வாழ்வனுபவத்தை விபரிக்கின்றது. அவ்வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

சித்தாத்தனின் நவீன அசுரர்கள் வித்தியாசமான கதை. ஆரம்பத்தில் சிக்மண்ட் ஃபிராய்டின் கூற்றுடன் ஆரம்பமாகின்றது. மானுட எண்ணங்கள் எல்லாவற்றையும் ஆழமனதே கட்டுப்படுத்துகின்றது. தன்னிச்சையாக நடப்பதில்லை. கனவுகள் ஆழ்மனத்தின் பிரதிபலிப்புகள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். தாம் வாழாத வாழ்வைக் கனவுகளில் மனிதர்கள் கண்டு கொண்டிருக்கின்றார்கள் என்கின்றார். என் கண்கள் கனவுகளில் கடவுள்களைக் காணும் பாக்கியமற்றவை என்கின்றார். காணாத கடவுள்களைக் கனவுகளில் கண்டு பரவசம் கொள்கின்றார்கள் என்கின்றார். கதை முழுவதும் கடவுளைச் சந்தித்து, உரையாடிக்கொண்டிருக்கின்றார். இறுதியில் யார் நவீ ன அசுரர்கள் என்று தேடினால், காலங்காலமாக அசுரர்களுடன் மோதி அவர்களை அழித்து மக்களைக் காத்தததாக நினைத்துக்கொண்டிருந்த கடவுளுக்கு அசுரர்கள் அழியவில்லை. காலத்துக்குக் காலம் புதிய புதிய வடிவங்களில் வந்துகொண்டுதானிருக்கின்றார்கள் என்கின்றார். வளச்செழிப்பு மிக்க இயற்கை மிக்க உலகை மானுடர்களுக்குக் கொடுத்துச் சென்ற கடவுளை மாசு படிந்து இயற்கையை விசமாக்கி விட்டார்கள் நவீன அசுரர்கள் என்பது திகைப்பினைத் தருகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறுகதையினைப் புரியாத வார்த்தைகளையிட்டுக் கதாசிரியர் சிறிது குழப்பிவிட்டாரோ என்று தோன்றும்படியாக எண்ண வைக்கின்றது கனவு எங்கிருந்து வருகின்றது கண்களிலிருந்தா? மனத்திலிருந்தா? மனம் பார்ப்பதைக் கண்கள் காட்சிகளாக்குகின்றனவா போன்ற தர்க்கங்கள். கனவு என்பது ஆழ்மனத்தின் செயற்பாடென்று ஆரம்பத்திலேயே கூறிவிட்ட கதாசிரியருக்கு இச்சந்தேகம் வந்திருக்கத்தேவையில்லை. மேலும் மனம் பார்ப்பதைக் கண்கள் ஒருபோதும் காட்சிகளாக்குவதில்லை. ஆனால் கண்கள் பார்த்தவை ஆழ்மனத்தில் பதிந்திருக்கையில் அவற்றை ஆழ்மனம் காட்சிகளாக்கிக் கனவுகளில் ஓட விடுகின்றதென்பதுதான் சரியாகவிருக்க முடியும். இவ்விதமான குழப்பங்கள் வாச்கார்களை மேலும் குழப்பி விடும் அபாயம் மிக்கவை.

ஶ்ரீரஞ்சனின்யின் 'நிழலில் நிஜம் தேடி' என்னும் சிறுகதையில் எழுதியவரின் பெயர் ஹரீரஞ்சனி என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அட்டையில் மட்டும் சரியாகவுள்ளது. உள்ளடக்கத்திலும், கதைப்பக்கத்திலும் தவறாகவுள்ளது. போர்ச்சூழலுக்குக் கணவனையிழந்து, மகளுடன் புகலிடத்தில் வாழும் பெண்ணொருத்தி தன் மகளுடன் ஊர் திரும்புகின்றாள். அம் மகளின் தந்தை பற்றிய ஏக்க உணர்வுகளை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதையில் தாயின் புகலிட வாழ்க்கைப் பணி அனுபவங்கள், மழை போன்ற இயற்கை நிகழ்வுகளைக் கூட மண் வாசனையுடன் இரசிக்க முடியாத மாநகரச் சூழல், நடைபெற்ற போர்ச்சூழலில் மீறப்பட்ட மனித உரிமைகள், குடும்பங்கள் சந்தித்த இழபபுகள் எனப் பலவற்றைத் தொட்டுச் செல்கின்றது கதை.

கட்டுரைகளைப் பொறுத்தவரையில் எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் பத்தி 'பதிப்பக வாணிகர்' பற்றிய விமர்சனத்தை அவரது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் முன்வைக்கின்றது. தமிழகப்பதிப்பகங்கள் மீதான விமர்சனம்.

ஜிஃரி ஹாசனின் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் 'மடொல் தூவ' விமர்சனம் இறுதியில் கடுமையான குற்றச்சாட்டுகளை அவர்மேல் வைக்கின்றது. உள்ளூர் மக்களின் நம்பிக்கைகளை, மரபுகளை, பண்பாடுகளைக் கேலிச்செய்யும் காலனித்துவம் மனநிலையே அவரை இயக்குகின்றதென்றும், பெரும்பாலும் அவரது குரல் மேற்குக்கும் அதன் பண்பாட்டுத் திணிப்புக்கும் ஆதரவாகவே உள்ளது என்றும் கடுமையான குற்றச்சாட்டுகளை கட்டுரையாசிரியர் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் மேல் வைக்கின்றார். அது அவருடைய சொந்தக் கருத்து. இவ்விதம் பலருக்குப் பலவிதக் கருத்துகளிருக்கும்.

ஊடகவியலாளர், ஓவியர், எழுத்தாளர், சஞ்சிகை ஆசிரியர் என்பன்முக ஆளுமை மிக்கவும், ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்து வரும் இலங்கையரான ஷமீலா யூசுப் அலியுடனான இதழாசிரியர் கோமகனின் நேர்காணல் நடு 50 ஒதழின் முக்கிய அம்சமாகத்திகழ்கின்றது. நேர்காணலின் முதற்கேள்வி 'கவிமனமும், ஓவிய ஈடுபாடும் இயற்கையில் வருவதற்குச் சாத்தியமில்லை. உங்களிடம் எப்படி சாத்தியம்?'. ஆனால் நடைமுறையில் பலரைக் காணாவிட்டாலும், கவிஞர்கள் சிலர் ஓவியர்களாகவும் இருந்துள்ளதைக்கண்டிருக்கின்றேன். உதாரணத்துக்குக் கவிஞர் சேரன் ஓர் ஓவியரும் கூட. புதுசு சஞ்சிகையில் அவரது ஓவியங்களைக் காணலாம். பெண்கள் மீதான அடக்குமுறை, இஸ்லாமியப் பெண்ணியம், அபாயா போன்ற கலாச்சார நடைமுறைகள், இலங்கையில் நடைபெற்ற போர், அரபிலக்கியம், பெண் அடக்குமுறையில் பெண்களின் பங்கு, நவீன கவிதை பற்றிய சிந்தனைகள், திருமணம்,ம் தனிப்பட்ட வாழ்க்கை என்று பல்வேறு விடயங்களைப்பற்றிய விரிவான நேர்காணலொன்றை நம்க்குத் தந்திருக்கின்றார் கோமகன்.

மேலும் இதழ் சஞ்சயன், வேலணை ரஜீந்தன், பிரியதர்சினி, ஏ.எம்.குர்ஷித், கே.முனாஸ், கருணாகரன் சிவராசா, மிஹாத் என்று பலரின் ஆக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது.

ஈழத்தமிழர்களின் யுத்தம் முடிவுக்கு வந்து பத்தாண்டுகளைக் கடந்து விட்ட நிலையிலும் அது ஏற்படுத்திய வலி இன்னும் தீரவில்லை. மறக்க முடியாத வலியினைத் தந்த யுத்தம். படைப்புகள் சில அவ்வலியினை வெளிப்படுத்துகின்றன.

நடு - 50 இதழினை முழுதாகப் பார்க்கும்போது மொத்தத்தில் திருப்தியைத்தரும் வகையில் வெளியாகியுள்ளது. மானுடரின் சமூக, அரசியற் சீர்கேடுகளை, போர், சீதனைப்பிரச்சினை, பொருந்தா மணம், சட்டரீதியாகத்திருமணம் என்னும் பெயரில் நடைபெறும் பாலியல் வன்முறை, இயற்கைச் சீரழிவு , காமம் அதன் விளைவுகள், பணியிடத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் பிரச்சினைகள், போர்ச்சூழல் ஏற்படுத்திய அழிவுகள், அது பெண்கள் மேல் ஏவிவிட்ட பாலியல் வன்முறை, இளைஞர்கள் மேல் ஏற்படுத்திய வன்முறை எனப் பலவற்றை நடு -50 இதழ் பேசுகின்றது. திருப்தி தரக்கூடிய வகையில் வெளியாகியுள்ளது இதழ். இதனைச் சாத்தியமாக்கியவர்கள்  நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். வாழ்த்துகள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.