எழுத்தாளர் பொன் குலேந்திரன் அவர்களின் மறைவுச் செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். துயருற்றேன். உண்மையில் இவரை நான் நேரில் சந்தித்ததில்லை, ஆனால் தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் மூலமும்  அண்மைக்காலம் வரையிலும் என்னுடன் தொடர்பிலிருந்தார். கடைசியாக இவரது குவியம் அமைப்பும் (குவியம் என்னும்  பெயரில் மின்னிதழ் நடத்தி வந்தவர்) தமிழகத்திலுள்ள கொலுசு அமைப்பும் நடத்திய " 2022 ஆம் ஆண்டிற்கான குவியம் - கொலுசு சிறுகதைப்போட்டி'க்காக என்னுடன் தொடர்பு கொண்டிருந்தார். அதற்காக என் சிறு பங்களிப்பையும் அவருக்கு அனுப்பியிருந்தேன்.

சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் என இலக்கியத்தில்  பன்முகத்திறமை மிக்கவர். ஆங்கிலத்திலும் எழுதுவதில் வல்லவர். இவரது ஆங்கில நாவல்களும் மின்னூல்களாக வெளியாகியுள்ளன. சிறுவர் இலக்கியத்துக்கும் தன் பங்களிப்பை நல்கியவர். அவரது அறிவியற் சிறுகதைகளை நான் இரசித்து வாசிப்பதுண்டு. அவர் தனது அறிவியற் கதைகள் சிலவற்றைத் தொகுத்து தமிழகத்தின் ஓவியா பதிப்பகமாக வெளியிட்டபோது என்னிடம் அதற்காக அணிந்துரையொன்றினையும் கேட்டுத் தொடர்பு கொண்டிருந்தார். மகிழ்ச்சியுடன் எழுதிக் கொடுத்தேன். ஓவியா  பதிப்பக வெளியிட்ட 'முகங்கள்' சிறுகதைத்தொகுப்புக்கும் விமர்சனக் குறிப்பொன்றினை எழுதியிருந்தேன்.

இவர் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணப் புனித பரியோவான் கல்லூரியில் கற்றவர்.  கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெளதிகத்துறையில் சிறப்பு இளமானிப் பட்டம் பெற்றவர். தொலைதொடர்புத் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். சந்தைப்படுத்தலிலும் பட்டம் பெற்றவர்.

பத்து வயதிலேயே எழுதத்தொடங்கியவராக அறிகின்றேன். அத்துடன் பொன், நல்லூரான், விஷ்வா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளதாகவும் தெரிகின்றது. பீல் தமிழ் முதியோர் சங்கத்தின் தலைவராக நான்கு வருடங்கள் கடமையாற்றியிருக்கின்றார். இவரது மறைவுச் செய்தி பற்றிய பதிவில் மூத்த வானொலிக் கலைஞரும், எழுத்தாளருமான வி.என். மதியழகன் '70  களின் வானொலி "சிறுவர் மலர்" மாமாவே !  உங்கள் மருமக்கள் மனதில் நீங்கள் நிரந்தரமாய் வாழ்வீர்கள்' என்று நினைவு கூர்ந்திருக்கின்றார். அதன் மூலம் இவரது இலங்கை வானொலிப் பங்களிப்பையும் அறிய முடிகின்றது. இவரது நனவிடை தோய்தல்கள் இலங்கை பற்றிய , யாழ்ப்பாணம் பற்றிய பல வரலாற்று முக்கியம் மிக்க தகவல்களை உள்ளடக்கியவை.

அவ்வப்போது தொலைபேசியில் அழைத்துக் கதைக்கும் போதுகளில்  நோயும், முதுமையும் வாட்டிய நிலையிலும் மிகவும் உற்சாகமாகத் தனது இலக்கியச் செயற்பாடுகளில் மூழ்கியிருந்தார். அவரது அந்த உற்சாகமும், அர்ப்பணிப்புடன் கூடிய இலக்கியச் செயற்பாடுகளும் என்னை மிகவும் கவர்ந்தவை. இவரது விடாமுயற்சியுடன் கூடிய எழுத்து வேகம் என்னைப் பிரமிக்க வைப்பதுண்டு. நிறையவே எழுதியுள்ளார்.  தான் பீல் தமிழ் முதியோர் சங்கத்தின் தலைவராகவிருந்தபோது  சங்கத்துக்காக  அரச நிதி உதவிகள்  பெறக் கடுமையாக உழைத்ததையும், அதன் விளைவே இன்றைய சங்கத்துக்கான நிரந்தரக் கட்டடமும் என்பதையும் பெருமையுடன் நினைவு கூர்ந்திருக்கின்றதை இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன்.

இதுவரை நோயை எதிர்த்து உற்சாகத்துடன் இருப்பில் போராடிக்கொண்டிருந்த  பொன் குலேந்திரன் அவர்கள் இன்னும் பல வருடங்கள் இருப்பாரென்று எண்ணியிருந்தேன். அதனால் அவரது மறைவை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அவரது இழப்பால் ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், வாசகர்கள் அனைவர்தம் துயரில் நானும் பங்கு கொள்கின்றேன்.

மின்னூல்கள்  (முழுமையான பட்டியல் அல்ல)

1. சிறுவரின் சிந்தனைக்கு (சிறுகதைகள்) - https://noolaham.net/project/865/86483/86483.pdf
2. இரு அறிவியல் நண்பர்கள் _ அறிபியற் சிறுகதைகள்  - https://noolaham.net/project/865/86481/86481.pdf
3. குடும்பம் ஒரு கதம்பம் - சிறுகதைகள்
4. அருவி - கவிதைத்தொகுப்பு
5. யாழ்ப்பாணத்தான் - சிறுகதைகள்
6. உரிமை மீறல்  - சிறுகதைகள்
7. 20 வணிகக் கதைகள்
8. ஜன்னல் - சிறுகதைகள்
9. விடிவு இல்லம் - சிறுகதைகள்
10. பெண்ணியம் (சிறுகதைகள்) _ https://noolaham.net/project/865/86484/86484.pdf
11. மண்ணிலிருந்து விண்வெளிக்கு - அறிவியல் கதைகள்.
12. விதை - நாவல்.
13. வாழு வாழ விடு - உருவகக் கதைகள்
14.முள் வேலிக்குப் பின்னால் - குறுநாவல்
15. காலம் - அறிவியற் சிறுகதைத் தொகுப்பு
16.பார்வை - சிறுகதைகள்
17. 20 மரபுக் கதைகள்
18. அந்தமான் காதலன் - குறுநாவல்
19. அறிவியற் கதைக்கொத்து
20. அழகு - குறுநாவல்
21. விதி - சிறுகதைகள்
22. நெற்றிக்கண் - சிறுகதைகள்
23. திருமணம் - குறுநாவல்
24. ஆறு தேசத்துச் சிறுகதை மலர்கள்
25. காதல் கதைகள்
26. கைத்தடி - சிறுகதைகள்
27. கண்டிய நடனக்காரி நிமலாவதி - நாவல்
28. HINDUISM & SCIENCE: Impact of Science on Hinduism
29. THE JAFFNA MAN: (Reflective of Traditions, Beliefs & Culture of Jaffna)
30. பறை - குறுநாவல்
31. Hinduism a Scientific Religion: & Some Temples in Sri Lanka
32. சோழபுரம் - நாவல்
33. Unforgettable Memories Kindle
34. பணயக் கைதி - நாவல்
35.Sentinel Island lover - Novel
36. DRUVAN THE DRUMMER  - Novel
37. கொரோனாக் கதைகள்
38. கிழக்கு இலங்கைச் சிறுகதைகள்
39. மனிக் கைதிகள் முகாம் - குறுநாவல்
40. சங்ககாலப் பாடல்களின் கருவில் சமகாலக் கதைகள்
41. GENERATIONS: (The story of the son of a Tea Estate worker)
42. தலைமுறைகள்
43. இலங்கையில் நடந்த கொலைகள்: பிரித்தானியர் ஆட்சியின் போதும் ,பின்னரும் இலங்கையில் நடந்த முக்கிய கொலைகள்
44.THE TIME: Scince fiction stories
46. THE HINDU TEMPLES IN SRI LANKA: (The History and Legends)


வெளியான நூல்கள்

1. காலம் - அறிவியற் சிறுகதைகள் - ஓவியா பதிப்பகம்
2. முகங்கள் - சிறுகதைகள் - ஓவியா பதிப்பகம்
3. விடிவு இல்லம் - சிறுகதைகள் - ஓவியா பதிப்பகம்

வெளியிட்ட தொகுப்பு நூல்
முதுதமிழரின் முத்துமாலை _ 55 எழுத்தாளர்களின் சிறுகதைகள் -

இவர் தனது மின்னூல்களை 'படி! படைத்திடு!" என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டியங்கும் தனது மின்கவி  வெளியீடுகளாக வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமேசன் தளத்தில் இவரது மின்னூல்களை வாங்க -

இலவசமாக இவரது மின்னூல்களை வாசிக்க -

மேலும் பல நூல்களை இவர் தானே வடிவமைத்து வெளியிட்டுள்ளார். 'டொராண்டோ நூலகக் கிளைகளிலும் அவற்றைக்  கண்ட நினைவுண்டு.


'முகங்கள்' தொகுப்பு பற்றிய எனது விமர்சனக் குறிப்பு - https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/3013--134-
'காலங்கள்' தொகுப்புக்கு எனது அணிந்துரை -  https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/4239-2017-11-06-20-18-22