ஜீவநதி சஞ்சிகையின் 175ஆவது இதழ் 'ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்கள் சிறப்பிதழ்' ஆக வெளியாகியுள்ளது. பிரமிப்பைத் தந்த இதழ். இவ்விதழ் ஆய்வாளர்களுக்கு ஓர் ஆவணச்சுரங்கம். இவ்விதழ் சிற்றிதழ்களின் பெயர்களைக் குறிப்பிடும் பட்டியலொன்றல்ல. மாறாகச் சிற்றிதழ்கள் பற்றிய ஆய்வாளர்களுக்குப் பெரிதும் உதவக்கூடிய ஆவணச்சிறப்பு மிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு. இதனை எவ்விதம் சாத்தியமாக்கினார் ஜீவநதி சஞ்சிகையின் வெளியீட்டாளரும் ஆசிரியருமான பரணீதரன் என்பது வியப்பைத் தருமொன்று. இவ்விதச் சிறப்பிதழொன்றினை அவ்வளவு இலகுவாக உருவாக்கி விட முடியாது. கட்டுரையாளர்களிடமிருந்து சிற்றிதழ்கள் பற்றிய ஆவணக்கட்டுரைகளை தொடர்புகொண்டு எடுக்க வேண்டும். சிரமமான காரியத்தை வெற்றிகரமாக முடித்திருக்கின்றார். இதற்காகப் பரணீதரனுக்கு வாழ்த்துகள்.

- ஜீவநதி வெளியீட்டாளரும் ஆசிரியருமான க.பரணீதரன் -

பொதுவாக இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் எவரும் தாம் அறிந்த விடயங்கள், தம்முடன் தொடர்புள்ளவர்கள் தரும் விடயங்கள், தாம் ஏற்றுக்கொண்ட கலை, இலக்கியக் கொள்கைகள் ஏற்படுத்தும் அவர்கள்தம் எண்ணங்கள் இவற்றின் அடிப்படையில் அக்கட்டுரைகளை எழுதுவார்கள். இதனால் எப்பொழுதும் பலர், பலரின் ஆக்கங்கள், சஞ்சிகைகள் , படைப்புகள் பற்றிய விபரங்கள் அக்கட்டுரைகளில் தவறிவிடுவதைக் காண்கின்றோம். இதற்கு இன்னுமொரு காரணம் அவர்களின் தேடல்களின் போதாமை. இவ்விதமானதொரு சூழலில் ஜீவநதியின் எழுத்தாளர்கள் பற்றிய சிறப்பிதழ்கள், சிற்றிதழ்கள் சிறப்பிதழ் , நாவல்கள் பற்றிய சிறப்பிதழ் , இவை போன்ற ஏனைய சிறப்பிதழ்கள் அனைத்துமே இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு அரும்பெரும் பங்கினை ஆற்றியுள்ளன. ஆய்வாளர்கள் தம் ஆய்வுகளில் நிச்சயம் ஜீவநதிச்  சிறப்பிதழ்களை உசாத்துணைப் பட்டியல்களில் குறிப்பிட  வேண்டும். இச்சிறப்பிதழில் தேவகாந்தனின் 'இலக்கு' மற்றும் 'கலைச்செல்வி' சஞ்சிகைகள் பற்றிய எனது கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. மீண்டுமொரு தடவை எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்  பரணீதரனுக்கு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.