எழுத்தாளர்கள்  ஶ்ரீரஞ்சனி  விஜேந்திரா , சிவகாமி (தாயும் மகளுமாக ) இணைந்து எழுதிய, புகலிடத் தமிழ்க் குழந்தைகள்  இலக்கியத்துக்கு, உலகத் தமிழ்க் குழந்தைகள்  இலக்கியத்துக்கு வளம் சேர்க்குமொரு படைப்பாக வெளியாகியுள்ளது 'சிந்துவின் தைப்பொங்கல்'. முதலில்  இந்நூல் ஏன் நல்லதொரு சிறுவர் நூல்  என எனக்குத் தென்படுவதன் காரணத்தைக் கூறி விடுகின்றேன்.  சித்திரக்கதையாக வெளியாகியுள்ள இந்நூலில் குழந்தைகள் உள்ளங்களைக் கொள்ளைக்கொள்ளும் அனைத்து விடயங்களும் உள்ளன. குழந்தைகளை மிகவும் கவரும் மூன்று விடயங்கள்.  கதை, சித்திரம் , பாவிக்கப்பட்டுள்ள நிறங்கள்.  இம்மூன்றும் இந்நூலில் ஒன்றுக்கொன்று சளைக்காமல் அமைந்துள்ளன என்பதே இந்நூலின் முக்கிய சிறப்பு.

கதை

கதை சிறப்பாகப் பின்னப்பட்டுள்ளது. கதையில் தனது தாய், தகப்பனுடன் 'டொராண்டோ'வில் வசிக்கும் சிந்து என்னும் சிறுமி யாழ்ப்பாணம் சென்று தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றார். இந்தக் கதை குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள கதை. உலகின் எங்கும் வாழும் தமிழ்க்குழந்தைகளும் பொங்கல் நிகழ்வைப் பற்றிய காரணங்களை, விளக்கங்களை அறிந்துகொள்ளும் வகையில் , அவர்களுக்குப் புரியும் எளிமை கலந்த சரளமான இனிய நடையில் எழுதப்பட்டுள்ள கதை. 

இக்கதை தமிழிலும், ஆங்கிலத்திலும் கூறப்பட்டுள்ளதும் ஆரோக்கியமான விளைவினைத் தருமொரு விடயமாகவே தென்படுகின்றது. புகலிடத் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப்பொங்கல் பற்றிய விளக்கங்களுடன்  , அவர்களுடைய தாய், தந்தையரின் பிறந்த மண்ணின் சூழலையும் வெளிப்படுத்துகின்றது. சேவல் கூவலுடன் விடியும் காலை, கிணற்றுத் தண்ணீரை வாளி மூலம் அள்ளும் வழக்கம், தை மாதக் காலநிலை, அரிசிக்கோலம் , கும்பம் அமைக்கும் முறை, மண் பானையில் பொங்கல், வெடி கொளுத்துதல் , கதிரவனுக்குப் பொங்கலிட்டு வணங்குதலெனப் பல விடயங்களை இச்சித்திரைக்கதை நூல் சிறப்பாகவே வெளிப்படுத்துகின்றது.

அதே சமயம் இலங்கையில் வாழும் குழந்தைகளுக்கு ஆங்கில மொழியையும் எளிமை கலந்த நடையில் அறிமுகப்படுத்துகின்றது. இது இச்சித்திரக் கதை நூலின் வெற்றி என்பேன்.

இப்புனைவை அனைத்துக் குழந்தைகளையும் கருத்தில் கொண்டு கதாசிரியர்களான சிவகாமி, ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா இருவரும் புனைந்துள்ளார்கள். அதில் வெற்றியும் அடைந்திருக்கின்றார்கள்.


வர்ணங்களும், ஓவியங்களும்

கதையில் வர்ணங்கள் குழந்தைகளைக் கவரும் வகையில் சிறப்பாகப் பாவிக்கப்பட்டுள்ளன. வால்ட் டிஸ்னியின் குழந்தைகளுக்கான 'கார்ட்டூன்'கள் , திரைப்படங்கள் குழந்தைகள், பெரியவர்கள்  மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று அவற்றில் பாவிக்கப்படும்  வர்ணங்கள். குழந்தைகளின் உளவியலை நன்கு புரிந்து தேர்ந்தெடுக்கப்படும் வர்ணங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பார்கள் வால்ட் டிஸ்னி நிறுவனத்தினர். அத்துடன் ஓவியங்களும் சிறப்பாக வரையப்பட்டிருக்கும்.

'சிந்துவின் தைப்பொங்கல்' சிறுவர் சித்திரக்கதையிலும் இதற்குச் சித்திரங்கள் வரைந்த ஓவியர் வி.ஜீவானந்தன் சிறப்பாக, குழந்தைகளின்  உளவியலை நன்கு புரிந்து ஓவியங்களை வரைந்துள்ளதோடு , வர்ணங்களையும் பயன்படுத்தியுள்ளார். புத்தகத்தின் கதையினை வாசிக்கும் குழந்தைகள் கண்கவரும் வர்ண ஓவியங்களில் தம் சிந்தையினை இழப்பர் என்பது மட்டும் நிச்சயம்.  உண்மையில் பெரியவர்களையும் இவ்வோவியங்கள் கவரும் தன்மை மிக்கன.

'சிந்துவின் தைப்பொங்கல்' சித்திரக்கதையினை வாசித்தபோது என் மனத்தில் என் குழந்தைப்பருவத்து நினைவுகள் சிறகடித்தன., என் பெற்றோருடன் வவுனியா நகரில் பொங்கல் விழாவினைக் கொண்டாடிய தருணங்கள் படம் போல் விரிந்தன. வெடி கொளுத்தி,  பத்திரிகைகள், சஞ்சிகைகளின் வரும் பொங்கல்தினக் கவிதைகளை  வாசித்து மகிழ்ந்த நினைவுகள் உயிர்பெற்று சிந்தையில் மகிழ்வலைகளைப் பரப்பின. இதுவே 'சிந்துவின் தைப்பொங்க'லின் வெற்றி.

இந்நூல் வெளியான ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பதிப்பகத்தின் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பதிப்பகமொன்றின் பெயரைப் பதிவு செய்து இது போன்ற நூல்களை வெளியிடுவது பல வழிகளில் பயன்மிக்கதென்பேன்.

நூலிலுள்ள ஓவியங்கள் இரண்டு


நூல் - சிந்துவின் தைப்பொங்கல் (2019)
எழுதியவர்கள் - சிவகாமி & ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா
பதிப்பகம் - சிவகாமி & ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா
ஓவியம் - வி.ஜீவானந்தன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.