நாடகக் கலைஞரான ஆனந்தராணி பாலேந்திராவின் கலைத்துறைப்பங்களிப்பு , குறிப்பாக நவீனத் தமிழ்நாடகத்துறையில் முக்கியமானது. நாடக நடிகை, திரைப்பட நடிகை, நர்த்தகி எனத் தன் ஆளுமையை மேடை, திரை, வானொலி எனப் பல்வேறு களங்களிலும் சிறப்பாக வெளிப்படுத்தியவர்.  

இவருடனான நேர்காணலொன்று சிரித்திரன் சஞ்சிகையின் டிசம்பர் 1981 இதழில், 'தேன்பொழுது' என்னும் பகுதியில் வெளியாகியுள்ளது. இந்நேர்காணல் இவர் செல்வி ஆனந்தராணி இராசரத்தினமாக இருந்தபோது எடுக்கப்பட்ட நேர்காணல். நேர்காணலை எடுத்தவர்கள் பொன் பூலோகசிங்கம் & கனக.சுகுமார்.

இந்நேர்காணலில் ஆனந்தராணி பாலேந்திரா அவர்கள் அளித்த பதில்கள் அவர் நவீன நாடகத்துறை, நாடகமயப்பட்ட நடனத்துறையில் எவ்வளவுதூரம் ஆழ்ந்த புரிதலைக்கொண்டிருந்தார் என்பதை விளக்குகின்றன.  ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் தான் பிறேக்டின் 'அந்நியப்படுத்தப்பட்ட நடிப்பு' வகையிலேயே நடிப்பதாகக் கூறுகின்றார்.

இன்னுமொரு கேள்வியில் 'மேல் நாட்டுக் கலைகள்தான் எமது கலை உலகில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எமது கலைகள் ஏன் மேல்நாட்டுக் கலையுலகில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை' என்று  கேட்கப்பட்டபோது 'ஏன் இல்லை. பிறெக்ட் கீழைத்தேய வடிவங்களைத் தன்னுடைய நாடகங்களில் கையாண்டுள்ளார். எமது கூத்து மரபிலுள்ள கட்டியக்காரன் உள்ளடக்கிய பாணியிலேயே அவர் நவீன நாடகங்களைத் தயாரித்துள்ளார்' என்று பதிலிறுத்திருக்கின்றமை அவரது இத்துறைப் புலமையினைப் புலப்படுத்துகின்றது.

இன்னுமொரு கேள்வியில் 'நவீனமயப்படுத்தப்பட்ட நாடகங்களில் நடிக்கும் நீங்கள் நடனத்துறையில் அறிவு, ஆற்றல் மிக்கவர். அவற்றைப் பயன்படுத்தி ஏன் இரு துறைகளையும் இணைத்து ஏதாவது முயற்சியில் ஈடுபடக் கூடாது' என்று கேட்கப்பட்டபோது அதற்குத் தான் பாரதியாரின் பெண்விடுதலைப் பாடல்களை மையமாகக்கொண்டு நிகழ்ச்சியொன்றினைத் தயாரித்துள்ளதாகக் குறிப்ப்பிடுகின்றார்.
அண்மையில் நான் வாசித்த  நேர்காணல்களில் என் கவனத்தை ஈர்த்ததொரு நேர்காணல்களிலொன்றாக இதனையும் குறிப்பிடுவேன். நேர்காணல் சிறியதென்றாலும், இதில்  கேட்கப்பட்ட தரமான கேள்விகள் மூலம் நவீனத் தமிழ் நாடகம்,  நாடகமயப்படுத்தப்பட்ட நடனம், மேடை நடிப்புப்பாணி எனப் பல விடயங்களைப்பற்றிய கருத்துகளையும், இவ்விடயங்கள் மீதான ஆனந்தராணி பாலேந்திராவின் புலமையினையும் அறிய முடிந்தது. நவீனமயப்படுத்தப்பட்ட தமிழ் நாடகங்களில் நடித்துள்ள ஆனந்தராணி கவிஞர் மஹாகவியின் 'கோடை'  நாடகத்திலும் 'செல்லம்' பாத்திரமாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவருடனான இந்நேர்காணலை வாசிக்கையில் இவரது இலங்கைத் தமிழ்த்திரைப்படப் பங்களிப்பான 'வாடைக்காற்று' திரைப்படமும் நினைவுக்கு வருகின்றது.

மேற்படி நேர்காணல் வெளியாகியுள்ள சிரித்திரன் இதழை வாசிக்க - https://noolaham.net/project/967/96687/96687.pdf