உண்மையில் இவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளித்தது என்றுதான் கூற வேண்டும். இவ்வளவு விரைவில் பிரிந்து விடுவார் என்று எண்ணியதேயில்லை.

இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் உயர்தர வகுப்பில் படித்த நண்பர்களிலொருவர். பாடசாலைக் காலத்து நண்பர்களைப் பல வகைகளில் பிரிக்கலாம். ஆனால் அப்பிரவுகளில் இரு பிரிவுகள் முக்கியமானவை. ஒரு பிரிவு நண்பர்களின் சகவாசம் பாடசாலையுடன் நின்று விடும். பாடசாலையில் அவர்களுடனான நட்பு கொடிகட்டிப் பறக்கும். பெரும்பாலும் இவ்விதமான நண்பர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வருவதால், பாடசாலைக்கு வெளியில் அதிகம் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவிருக்கும். மேலும் இவர்கள் படிப்பதில் அதிக ஆர்வமாகவிருப்பவர்கள். வயதுக்குரிய கேளிக்கை, விநோதங்கள் போன்ற சமூகச்செயற்பாடுகளில் வீணாக நேரத்தைச் செலவிட விரும்பாதவர்கள். அடுத்த வகையினருடனான நண்பர்களுடனான நட்பு பாடசாலையிலும், வெளியிலும் தொடரும். வயதுக்குரிய கேளிக்கை, விநோதங்களில் கும்மாளமடிப்பதில் வல்லவர்கள் இவ்விதமான நண்பர்கள்.

இவர்களில் இணுவில் விக்கினேஸ்வரன் முதற் பிரிவைச்சேர்ந்தவர். யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் நெருங்கிப்பழகிய நண்பர்களில் முக்கியமானவர்களிலொருவர். பழகுவதற்கு இனிய பண்பாளர். அமைதியானவர். இவர் ஆத்திரமடைந்து நான் பார்த்ததில்லை.
இவரை இன்னுமொரு காரணத்துக்காகவும் மறக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பிலிருந்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்களுக்கு விண்ணப்பப்படிவங்கள் அனுப்பப்பட்டபோது , நானும் தெரிவாகியிருந்த விடயத்தை ஆச்சி வீட்டில் அச்சமயம் தங்கியிருந்த என்னைத் தேடி வந்து தெரிவித்து , பாடசாலை அழைத்துச் சென்று அன்றே விண்ணப்படிவத்தை நிரப்பி அனுப்பிட உதவியவர் இவர். அதன் பிறகு நாம் அனைவரும் திக்குக்கொன்றாகச் சிதறி விட்டொம். உண்மையில் அதன்பிறகு இவரை மீண்டும் சந்திக்கவேயில்லை.

பின்னர் இவரைப்பற்றி அறிந்தது இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தெரிவானபோதுதான். மகிழ்ச்சியாகவிருந்தது. வாழ்த்தி முகநூலில் பதிவொன்றினையும் இட்டிருந்தேன். அக்காலகட்டத்தில் அவர் 'டொராண்டோ' வந்திருந்தார். அவருடன் தொலைபேசி மூலம் உரையாட முடிந்தது. நானும், நண்பர் கனகவரதாவும் அவரைச் சந்திக்கவிருந்த நாளில் எதிர்பாராமல் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் அச்சந்திப்பும் நிகழவில்லை. அவரும் உடனடியாக நாடு திரும்ப வேண்டியிருந்ததால் மீண்டும் சந்திக்க முடியவில்லை. இனி ஒருபோதுமே அவரைச் சந்திக்க முடியாது என்னும் நினைவு துயர் தருவது.

அவரது மறைவுச் செய்தி அவருடன் பழகிய பாடசாலைக் காலகட்டத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது. அந்தச் சிரித்த முகமும், மென்மையான குரலும், ஒரு போதுமே ஆத்திரமடையாத குணமும் நினைவில் நிழலாடுகின்றன.
 
இத்துயரகரமான தருணத்தில் அவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.