புகலிடத்தமிழ் இலக்கியத்தில் இவரைப் பலரும் அறிந்திருப்பர். முக்கிய பங்கினை ஆற்றியிருப்பவர்; ஆற்றி வருபவர்.  தாயகம்' (கனடா) ஆசிரியர் ஜோர்ஜ்.இ.குருஷேவைத்தான் குறிப்பிடுகின்றேன்.  இவரிடம் எனக்குப் பிடித்த விடயங்கள்:

1. தனித்து, சுயமாக ஒரு விடயத்தைப்பற்றி நேரமொதுக்கி , ஆராய்ந்து , அறிந்து கொள்பவர்.

2. சிறந்த சிறுகதையாசிரியர். இவரது எழுத்து நடை சிறப்பானது.   தொண்ணூறுகளில் வெளியான இவரது 'ஒரு துரோகியின் இறுதிக்கணம்' (தேடல்), 'கொலைபேசி' (தாயகம்) ஆகிய சிறுகதைகளை வாசித்தவர்கள் நிச்சயம் இன்றும் நினைவு வைத்திருப்பர்.

3. தாயகம் பத்திரிகையாக, சஞ்சிகையாக வெளியானபோது தீவிர வாசிப்பாளர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தது. கவிஞர் கந்தவனம், பேராசிரியர் சிவசேகரம், மாத்தளை சோமு, கலாமோகன் (ஜெயந்தீசன் , நேசன் போன்ற பல புனைபெயர்களில்), தராக்கி சிவராம், 'காலம்' செல்வம், 'அசை' சிவதாசன், சுகன்,  அளவெட்டி சிறீஸ்கந்தராசா , மொனிக்கா, பவான், மூர்த்தி (முனி, கனடா மூர்த்தி) , சிதம்பரம் ஞானவடிவேலனார், டொன்மில்ஸ் சிவப்பிரகாசம், கடல் புத்திரன், ஆனந்த பிரசாத் , லோகநாதன், சுமதி ரூபன், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,  நிவேதிகா, பா.அ.ஜயகரன், ரதன் , கெளரி, அ.கந்தசாமி, உமாகாந்தன்,  மலையன்பன் (கனடா 'உதயன்' ஆசிரியர் லோகேந்திரலிங்கம். இவர் 'தாயகம்' சஞ்சிகையில் பல்வேறு புனைபெயர்களில் எழுதினார்), ,நிலா குகதாசன், அருண், சி.கிருஷ்ணராஜா, சின்னத்தம்பி வேலாயுதம்  என்று பலர் எழுதினார்கள். யாழ் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை அறிக்கை தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டிருந்தது. எனது நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் பல 'தாயக'த்தில் வெளிவந்துள்ளன. பல்வேறு அரசியல் கருத்துகள கொண்டவர்களுக்கும் தாயகம் இடம் கொடுத்தது. இவ்விதம் எழுத்தாளர்கள் பலரையும் அரவணைத்து வெளியிட்ட இவரது ஆளுமை ஆரோக்கியமானது. எனக்குப் பிடித்ததொன்று.

தாயகம் (கனடா) ஆரம்பத்தில் வாரப்பத்திரிகையாக வெளியானது. பின்னர் தனது வடிவமைப்பை மாற்றி வார சஞ்சிகையாக வெளிவந்தது. தானே ஆசிரியராகவிருந்து, பதிப்பாளராகவிருந்து, தட்டச்சு செய்பவராகவிருந்து, அச்சடிப்பவராகவுமிருந்தார். இதற்காகச் சிறியதொரு அச்சியந்திரத்தையும் தன்னிருப்பிடத்தில் வைத்திருந்தார். ஒருவரே கைகளால் இயக்கக்கூடிய அச்சியந்திரம்.

அந்த அச்சியந்திரம் இன்னும் அவரிடம் ஞாபகச்சின்னமாக இருக்கக்கூடும்)  சுமார் ஐந்து வருடங்கள் வரையில் 'தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையினைக் கொண்டு வந்தார்.  ஐந்து வருடங்களில் இருநூறுக்கும் அதிகமாகத்  தாயகம்(கனடா)வினைத் தனியொருவராக வெளிக்கொணர்ந்தவர் இவர் என்பது பிரமிப்பினைத் தருவது.

4. படைப்புகளைப் பெற்று , அவற்றைத் தட்டச்சு செய்து,  இதழை வடிவமைத்து, வாராவாரம் சுமார் ஐந்து வருடங்கள் வெளியிடுவதென்பது அவ்வளவு இலகுவானதல்ல. அர்ப்பணிப்பு மிகுந்த செயலது. அந்தத் தனித்துச் செயலாற்றும் ஆளுமையும் எனக்குப் பிடிக்கும்.

5. இவரது முகத்தில் எப்போதும் ஒரு புன்சிரிப்பு ஒளிர்ந்து கொண்டிருக்கும்,. இவர் ஆத்திரப்பட்டு நான் கண்டதில்லை.  எப்பொழுதுமே அச்சிரிப்பைக் கைவிடாமல் உரையாடும் பாங்கும் எனக்குப் பிடிக்கும். தற்போது இணையத்தில் 'அபத்தம்' தொடங்கியிருக்கின்றார். இதுவும் 'தாயகம்' போல் காத்திரமான இலக்கியப் பங்களிப்பை அளிக்குமென்ற நம்பிக்கையை இதுவரை வெளிவந்த இதழ்கள் ஏற்படுத்துகின்றன.
கியூறியஸ் ஜி என்ற புனைபெயரில்  இவர் எழுதிய அறு(சு)வை  என்னும் பத்தி அங்கதச் சுவை மிக்கது. தாயகம் இதழின் இறுதிப்பக்கங்களில் வெளியானது. வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. கியூறியஸ் ஜீ தன்னைக் கல்(லா)நிதி என்று குறிப்பிட்டிருந்ததை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.  அவரது ஆசிரியத் தலையங்கமான  'ஏடு இட்டோர் இய'லும் முக்கியமான ஆசிரியத் தலையங்கம்.

தாயகம் சஞ்சிகையை வாங்குவதற்கென்று ஒரு வாசகர் கூட்டமிருந்தது. புகலிடத்தில் வெளியான சஞ்சிகைகளில், காசு கொடுத்து வாசகர்கள் வாங்கிப் படித்தவற்றில்,  தாயகம் நிச்சயம் முதலிடத்தில் இருக்குமென்பது என் நம்பிக்கை.

'டொராண்டோ'வின் மேற்கிலிருந்து கிழக்கு வரை தாயகம் பத்திரிகையை விற்ற பலசரக்குக் கடைகள் பல இருந்தன. சிலர் அரசியல் காரணங்களுக்காக மறைத்தும்  விற்றுக்கொண்டிருந்தார்கள். அனைவரும் விற்றுக்கொண்டிருந்த காரண தாயகம் வாங்க வெள்ளிக்கிழமை தவறாது வரும் தாயகம் வாசகர்களுக்காக. அவ்விதம் வரும் வாசகர்கள் தாயகத்துடன் மேலும் பொருட்களை அங்கு வாங்கிச் செல்வார்கள் என்பதற்காக.

'தாயகம்' ஜோர்ஜ். இ.குருஷேவுக்கு இன்று , பெப்ருவரி 27,  பிறந்தநாள். வாழ்த்துகள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.