ஐபிசி தமிழில் ஒரு செய்தி வந்திருந்தது. அது இதுதான்: "சிறிலங்காவில் அரச கட்டமைப்பை வீழ்ச்சியடையச் செய்து, வடக்கு கிழக்கை பிரிப்பதே காலி முகத்திடல் போராட்டத்தின் பின்னணி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவசன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், அரசை வீழ்த்தும் திட்டத்தின் பின்னணியில் அமெரிக்கவே உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்."

ஏற்கனவே ராஜபக்சாக்கள் நாட்டின் சில பகுதிகளைப் பிரித்துச் சீனாவிடம் தாரை வார்த்து விட்டார்கள் என்பதை விமல் வீரவன்ச மறந்து விட்டது ஆச்சரியம்தான். அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை ராஜபக்சாக்களும், ரணிலும் 99 வருடக் குத்தகைக்குக் கொடுத்து விட்டதை நாடே அறியும். கொழும்புத் துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட நிலப்பரப்பு சீனாவுக்குத் தாரை வார்க்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததொன்று. இவற்றையெல்லாம் மறந்து விட்டு வடகிழக்கைப் போராட்டக்காரர்கள் பிரித்து விடுவார்கள் என்பதன் மூலம் இனவாதத்தை விமல் வீரவன்ச கையிலெடுத்துள்ளார்.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோதபாயா ராஜபக்சவை ஓட ஓட விரட்டிய போராட்டக்காரர்கள் அங்கு விஜயம் செய்த விமல் வீரவன்சவையும் கலைத்தார்கள். தன் உயிரைக் காக்க அவர் ஓடிய ஓட்டத்தை இணையத்தில் அவதானித்தோம்.

இலங்கை மக்கள் மத்தியில், குறிப்பாகத் தென்னிலங்கை மத்தியில் ஆதரவைப் பெற்றுள்ள போராட்டக்காரர்கள் மீதான ஆதரவைச் சீர்குலைக்க வேண்டியது புதிய ஜனாதிபதியும் அரசியல் குள்ளநரியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசியம். தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கும் அவசியம். அதற்காக அவர்கள் போராட்டக்காரர்களை நடத்தைப் படுகொலை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அதன் ஒருபடியாகவே போராட்டக்காரர்களைப் பாசிஸ்டுகள் என்று ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியதும். போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையினைக் கட்டவிழ்த்து விட்டதும். இப்பொழுது தென்னிலங்கை அரசியல்வாதிகளில் சிலர் மீண்டும் மக்களை இனரீதியிலாகப் பிரித்து, போராட்டக்காரர்களை மக்கள் மத்தியிலிருந்து அப்புறப்படுத்த இனவாதத்தைக் கக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனைத்தான் இதுவரை செய்து வந்தார்கள். இனியும் செய்வார்கள். இவ்விடயத்தில் மக்கள், போராட்டக்காரர்கள் விழிப்பாக இல்லாதுவிட்டால் நாடு மீண்டும் இனவாதத்துக்குள் சிக்கும் அபாயமுண்டு.

இதன் ஓரம்சமாகவே தென்னிலங்கை அரசியல்வாதியான விமல் வீரவன்ச மேற்படி கூறியுள்ளார். போராட்டக்காரர்களின் போராட்டம் வடகிழக்கைப் பிரித்துவிடும் என்பதன் மூலம் அவர்களைத் தென்னிலங்கைப் பொதுமக்கள் மத்தியிலிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்யும் ஒரு வழியாகவே விமல் வீரவன்ச இனவாதத்தை மீண்டும் கையிலேந்தியுள்ளார். இது போல் ஏனைய தென்னிலங்கை அரசியல்வாதிகள் இனவாதத்தைத் தூக்கிப்பிடித்துப் போராட்டக்காரர்களை நடத்தைப் படுகொலை செய்ய ஆரம்பிப்பார்கள். இவ்விடயத்தில் மக்கள் அவதானமாகவிருக்க வேண்டும்.