எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் (குப்பிழான் ஐயாத்துரை சண்முகலிங்கம்) அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் தெரியப்படுத்தியது. எதிர்பாராத செய்தி.  அவர் மறைவால் வாடும் குடும்பத்தவர், நண்பர்கள், எழுத்துலகைச் சேர்ந்தவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் 'பதிவுகள்' சார்பாகவும் , என் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல்.

நந்தினி சேவியர், கே.எஸ்.சிவகுமாரன்  , குப்பிழான் ஐ.சண்முகன் இவர்கள் என் முகநூல் நண்பர்களாகவுமிருந்தவர்கள்.  நான் என் இளமைப்பருவத்தில் வியந்து நின்ற  இவர்களைப்போன்ற இலக்கிய ஆளுமைகளுடன் நண்பர்களாகப் பழக, கருத்துகளைப் பரிமாற நவீன இணையத்தொழில் நுட்பம் வழி சமைத்துத் தந்தது நவீனத் தொழில் நுட்பத்தின் ஆரோக்கியமான அம்சங்களிலொன்று.

சிலரைப் பார்த்ததுமே பிடித்துப் போய்விடும். இவரை நான் ஒருபோதும் நேரில் பார்த்ததில்லை. ஆனால் இவரது மீசை, புன்னகையுடன்  கூடிய முகத்தோற்றத்தைக் காட்டும் புகைப்படத்தை முதலில் பார்த்ததுமே இவரை எனக்குப் பிடித்துவிட்டதென்பேன். அமைதியான, எதிர்த்து ஓங்கிப் பேசாத ஒருவர் என்பதை அப்புகைப்படம் எடுத்துக்காட்டியது. அது போலவே இவர் இருப்பதை  இவருடனான  நேர்காணல்கள் எடுத்துக்காட்டின.

அலை வெளியீடாக வெளிவந்த இவரது 'கோடுகளும் கோலங்களும்' சிறுகதைத்தொகுப்புக்கு 1976ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. ஆனால் அதனைப் பெறுவதற்கு அன்று நிலவிய அரசியல் சூழல் காரணமாக இவர் செல்லவில்லை. அதில் இவருக்கு நாட்டமும் இருக்கவில்லையென்பதை இவருடனான 'கபிடல் டிவி'யின் நேர்காணலிலிருந்து அறிய முடிந்தது.

குப்பிழான் ஐ.சண்முகன் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முகப் பங்களிப்பு செய்த ஆளுமைகளில் ஒருவர். எழுபதுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான 'அலை' சஞ்சிகையின் ஆசிரியர் குழுவினருள் ஒருவர்.  பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரி. ஆரம்பத்தில் அரச எழுவினைஞராகப் பணியாற்றிப் பின்னர் ஆசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.  யாழ் இலக்கியக் கழகம், கொழும்பு இலக்கியக் கழகங்களில் இணைந்து இயங்கியவர்.

'கபிடல் டிவி' இவருடன் நடாத்திய நேர்காணல் முக்கியமானதொன்று. அதில் இவர் தனது வாழ்க்கை பற்றி, எழுத்துலக அனுபவங்கள் பற்றி, தனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் பற்றியெல்லாம் மனந்திறந்து விரிவாக உரையாடுகின்றார்.  இவரது முதலாவது சிறுகதை 'ராதா' பத்திரிகையில் வெளியான 'பசி' என்றும் அது அவரிடம் இல்லையென்பதையும் மேற்படி நேர்காணல் மூலம் அறிய முடிகின்றது. ஒருவேளை அச்சிறுகதையை உள்ளடக்கிய ராதா பத்திரிகை  இலங்கைச் சுவடிகள் திணைக்களத்தில் இருக்கக் கூடும்.  இவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள் லா.சா.ரா மற்றும் தி.ஜானகிராமன் என்பதையும் இந்நேர்காணல் தெரிவிக்கின்றது. அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=zlRpnnRGB8Y

'ஜீவநதி' சஞ்சிகையும் இவர் பற்றிய சிறப்பிதழொன்றினை வெளியிட்டுள்ளது. அதற்கான இணைப்பு - https://noolaham.net/project/1029/102876/102876.pdf இச்சிறப்பிதழில் வெளியான இவரது தொகுப்புகள் பற்றிய நூல் மதிப்புரைகளை வாசிக்கலாம்.

இச்சமயத்தில் இன்னுமொரு விடயத்துக்காகவும் இவரை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.  எனது குடிவரவாளன் நாவலுக்கான அறிமுக விழாவினை எழுத்தாளர் சு.குணேஸ்வரன் (கவிஞர் துவாரகன்)   15.05.2016 அன்று பருத்தித்துறையில் நடத்தியபொழுது அந்நிகழ்வுக்குத் தலைமை வகித்து நடத்தியவர் எழுத்தாளர் ஐ.சண்முகன் அவர்கள். அத்துடன் நூல் பற்றிய தனது கருத்துகளையும் முகநூற் பதிவொன்றில் பகிர்ந்து கொண்டவர்.  கடுமழை பெய்த நாளொன்றில் நடந்த அந்நிகழ்வுக்குச் சென்று தலைமையேற்று நடத்தினார். அதை எப்பொழுதும் மறக்க மாட்டேன்.  நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன்.

- எனது 'குடிவரவாளன்' நாவலின் அறிமுக விழாவுக்குத் தலைமையேற்று நடத்தினார். -

இதுவரை வெளியான இவரது நூல்கள்:

கோடுகளும் கோலங்களும் (சிறுகதைகள் - 1976)
சாதாரணங்களும் அசாதாரணங்களும் (சிறுகதைகள் - 1983)
அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புக்கள் (2003)
உதிரிகளும்... (சிறுகதைகள், 2006)
ஒரு பாதையின் கதை (சிறுகதைகள், 2012)
பிரபஞ்ச சுருதி (கவிதைகள், 2014)
ஒரு தோட்டத்தின் கதை (சிறுகதைகள், 2

இவரது 'மல்லிகை' சஞ்சிகையில் வெளியான 'தலைமன்னார் ரெயில்' எனக்குப் பிடித்த சிறுகதைகளிலொன்று. அது பற்றிப் 'பதிவுகள்' சஞ்சிகையில் என் பக்கத்தில் வெளியான 'வாசிப்பும் யோசிப்பும்' பகுதியில் என் கருத்துகளைப் பகிர்ந்திருந்தேன். அதனை இத்தருணத்தில் மீண்டுமொரு தடவை நினைவு மீட்டிப் பார்க்கின்றேன்.

- குப்பிழான் ஐ.சண்முகனின் இளமைத்தோற்றம் -

குப்பிழான் ஐ.சண்முகனின் 'தலை மன்னார் ரெயில்'

ஆங்கிலேயர்களால் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் தமிழகத்தமிழர்கள், ஏனைய மொழிபேசும் இந்தியர்கள் எனப்பலர் கூலி அடிமைகளாக இலங்கை, கரிபியன் நாடுகள் எனப்பல நாடுகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இவரகளில் இலங்கையின் மலையகத்தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காக அடிமைகளாகக்கொண்டு செல்லப்பட்ட தமிழகத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி நாகரிக உலகம் நாணப்பட வேண்டியதொன்று. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள். அவ்விதம் அவர்கள் நாடற்றவர்களாக்கப்படுவதற்கு இலங்கையின் பூர்வீகத்தமிழர்களும் உடந்தையாக இருந்ததுதான் வேதனையானது. இந்திய, இலங்கை அரசுகளால் ஒப்பந்தங்கள் போடப்பட்டாலும் அவை முறையாக அமுல்படுத்தப்பட்டனவா? ஒரு நாட்டில் ஐந்தாறு வருடங்கள் சட்ட விரோதமாக இருந்தவர்களுக்கே நாடுகள் பல மன்னிப்பை வழங்கித் தம் குடிமக்களாக ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் இலங்கையின் தோட்டங்களில் தம் இரத்தத்தை உரமாக்கித் தம்மை அழித்த மக்களை நாட்டற்றவர்களாக்குவதற்கே இந்தியா அனுமதித்திருக்கக்கூடாது. இலங்கைத் தமிழர்களைப் பிரதிநித்துவப்படுத்திய அரசியல் அமைப்புகள் ஆதரவளித்திருக்கக்கூடாது. தமிழக அரசுகள் மலையகத்தமிழர்களின் உரிமைகளுக்காக உறுதியாகக்குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

மலையகத்தமிழர்களின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் மலையகத்தைச் சேராத படைப்பாளிகளால் பல புனை கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அ.செ.மு.வின், அறிஞர் அ.ந.கந்தசாமியின் சிறுகதைகள், அ.ந.க.வின் கவீந்திரன் என்னும் பெயரில் வெளியான கவிதைகள், டாக்டர் நந்தியின் மலைக்கொழுந்து (நாவல்). டாக்டர் தி.ஞானசேகரனின் 'குருதிமலை' (நாவல்) எனப்புனைவுகள் பல பின்னப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகனின் மலையக மக்களின் துயரை வெளிப்படுத்தும் சிறுகதையொன்றினை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. மல்லிகையின் மாசி 1970 இதழில் பிரசுரமான அவரது 'தலைமன்னார் ரெயில்' என்ற அச்சிறுகதை காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியான அவரது சிறுகதைத்தொகுப்பான 'ஒரு பாதையின் கதை'யிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

இலங்கை , இந்திய அரசுகளால், மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியற் தலைமைகளால் நாடற்றவர்களாக்கப்பட்ட மலையகத்தொழிலாளர்கள் தோட்டத்தொழிலாளர்களாக அடையும் துயரை வெளிப்படுத்தும் புனைவுகள் பல. ஆனால் குப்பிழான் ஐ.சண்முகனின் 'தலைமன்னார் ரெயில்' சிறுகதை நாட்டற்றவர்களாக்கப்பட்ட மலையக மக்கள் அதனால் அடையும் துயரினை வெளிப்படுத்துகிறது. தன் வாழ்வின் இறுதிக்கட்டத்திலிருக்கும் ஒரு மூதாட்டி, தான் வாழ்ந்த மண்ணிலிருந்து பிரிந்து செல்கின்றாள். இளைஞனொருவன் தன் அன்புக் காதலியைப்பிரிந்து செல்கின்றான். குழந்தையொன்று தன் தாயுடன் தன் பாட்டியிடமிருந்து பிரிந்து செல்கின்றது. இவற்றையெல்லாம் கதை சொல்லி தான் செல்ல வேண்டிய புகையிரதத்தைத் தவற விட்ட காரணத்தால், அடுத்த 'ரெயிலு'க்காகக் காத்து நிற்கும் சமயம் அவதானிப்பதன் மூலம் கூறுவதாக இச்சிறுகதை விபரிக்கின்றது. அவர்களை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் ரெயில் புறப்படுவதுடன் கதை முடிவுக்கு வருகின்றது.

குப்பிழான் ஐ.சண்முகனின் இச்சிறுகதை அளவில் சிறியது. ஆனால் வாசிப்பவர் நெஞ்சினை தாம் வாழ்ந்த மண்ணை விட்டுப் பிரியும் அந்த மக்களின் துயரம் கூர் முள்ளெனத் தைத்து விடுகிறது.. உதாரணத்துக்குச் சிறுகதையிலிருந்து சில வரிகளைக் குறிப்பிடலாம்:

"அந்தக் கிழவியில் என் கண்கள் படிந்தன. எழுபதையோ எண்பதையோ அவள் தாண்டி விட்டிருந்தாள்; வாழ்க்கையின் அனுபவச்சுருக்கங்கள் அவள் முகத்தில் பிரதிபலிக்க ஏதோ நோயினால் அவஸ்தைப்படுபவள் போல் அவளிருந்தாள். காதில் பெரிய துளைகளின் கீழ்த்தொங்கிய கடுக்கண்கள் அசைந்தாட ஏதோ தன்பாட்டிலேயே அணுங்கினாள். பூமிக்குப் பாரமாய் நெடுநாள் இருக்க முடியாத, பூமியோடு இரண்டறக்கலக்க வேண்டிய அவளும் இந்தியாவுக்குப் போகின்றாள். அல்லது போகடிக்கப்படுகின்றாள். மனிதாபிமானம் மிகுந்த மனித உரிமைகளை மதிக்கும் இன்றைய உலகில் மண்ணோடு மண்ணாகப் போகும் அவள் தான் பிறந்த இந்திய மண்ணில் சங்கமமாகப்போகின்றாள். தான் வளர்ந்த, தான் வாழ்ந்த மண்ணில் தன்னால் வளர்க்கப்பட்ட தேயிலைச்செடிகளுக்கு அவள் உரமாகக் கூடாதாம். இந்த உலகம் மனிதாபிமானமுள்ள உலகமாம். எனக்குச் சிரிப்பு வந்தது. வேதனை கலந்த சிரிப்பு. என் மனம் அவளைச்சுற்றி வட்டமிட்டது. அவள் இங்கு எப்படி வாழ்ந்திருப்பாளென நான் கற்பனை செய்து பார்த்தேன். பனியிலும் , குளிரிலும், வெயிலிலும், மழையிலும் , புயலிலும் மாளாத உழைப்பு. இரவினில் அவள் கணவனுடன் 'மங்கியதோர் நிலவினிலே..' அனுபவங்கள்; தந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவிய நாட்டின் நினைவுகள் பிள்ளை குட்டிகள், பேரன் , பேத்திகள். இன்ப துன்பங்கள்.. நான் பெருமூச்சு விட்டேன்..."

கதை சொல்லி மட்டும் பெருமூச்சு விடவில்லை. தலைமன்னார் ரெயிலும் உஸ்- உஸ்சென்று பெருமூச்சு விட்டுக்கொண்டு விரைவதுடன் கதையும் முடிவுக்கு வருகின்றது. அத்துடன்முதற் கதையாக 'தலைமன்னார் ரெயில்' சிறுகதையே தொகுப்பில் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நாடற்றவர்களாக்கப்பட்டவர்களுக்கு நாடுகள் ஏற்படுத்திய ஒப்பந்தங்கள் அம்மக்களை வாழ்ந்த நாட்டிலிருந்து மட்டும் பிரித்துவிடவில்லை. உறவுகளையும் அவர்களிடமிருந்து பிரித்து விடுகின்றது. அதனை வெளிப்படுத்தும் சிறுகதை என்னும் வகையில் 'தலைமன்னார் ரெயில்' முக்கியமானதொரு சிறுகதை.


கவிஞர் ஷெல்லியின் 'காதல் தத்துவம்' (Love’s Philosophy) என்னும் கவிதையினை மொழிபெயர்த்து குப்பிழான் ஐ.சண்முகன் அவர்கள் எழுதிய கவிதை ஈழநாடு பத்திரிகையின்  18.7.70  பதிப்பில் வெளியாகியுள்ளது. அதனைக் கீழே காணலாம்:

காதல் தத்துவம் - குப்பிளான் ஐ. சண்முகன்

ஊற்றின் சங்கமம் உத்தம நதியாம்;
நதியின் கலப்பு நந்திடும் கடலாம்;
காற்றின் அணைப்பு தண்ணிய சுகமாம்;
கவிதை உணர்வில் காவியப்பிறப்பாம்;
வாழ்வில் தனிமை உலகில் வேண்டாம்;
வாஞ்சை கலந்த உணர்வில் ஒன்றாய்
தனிமை தனிமை தவிப்பு எனக்கு
சார்வோம் அன்பே இணையாய் இன்று.

மலை  முகட்டைக் கொஞ்சும் மேகம்
அலை அணைந் தணைந்தே துள்ளும்;
மலர் அசைந்து மற்றதைப் புல்லி
மகிழ்ந்து சிரிக்கும் மன்பதை வாழ்வில்,
நிலத்தைச் சேரத் துடிக்கும் கதிர்கள்
நீந்திக் கடலுல் திளைக்கும் மதியும்;
விரைந்து வந்தே என்னை அணைத்தே
விரும்பித் தாராய் முத்தம் அன்பே!

* ஈழநாடு ( 18.7.70 ) வாரமலரில் வெளியானது.