அண்மையில் இம்மனிதனைப்பற்றிய செய்திக்குறிப்பொன்றை வாசித்தேன். இவனது வாழ்க்கை என் கவனத்தை ஈர்த்தது. நமது தமிழ்ப்பட நாயகர்கள் பலர் திரைப்படங்களில் செய்ததைத்தான் இவன் தன் வாழ்க்கையில் செய்திருந்தான். அதனால் இவன் தன் வாழ்வின்  43 வருடங்களைச் சிறையில் கழித்திருந்தான். பின்னர் விடுதலையான இவன் நோய் வாய்ப்பட்டு இறந்திருந்தான். அது பற்றிய செய்தியினை ஜூலை 17, 2022 வெளியான டெய்லி நியூஸ் (இலங்கை) வெளியிட்டிருந்தது.

இவன் களுத்துறை மாவட்டத்தில் பிறந்தான். இவனது பெயர் படுகாகஹே டொன் சுமதிபாலா.  ஆனால் இவன்  'ஹிதுமதெ ஜீவிதெ' (Hitumate Jeevithe) என்றே அறியப்பட்டிருந்தான்.  இவனுக்கு ஒரே யொரு சகோதரி. அழகுமிக்க அச்சகோதரி 1972 புது வருட தினத்தில் நடைபெற்ற அழகுராணிப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாள். ஆனால் அவனது சகோதரி அழகு ராணிப் போட்டியில் வெற்றி பெற்றபின் வீடு திரும்பவில்லை.  அவளுக்கு என்ன நடந்தது?  களுத்துறைக் காவல்துறை அதிகாரி  ஒருவன் இவனது சகோதரியைக் காரில் கடத்தி,  ஹொட்டலொன்றுக்குக் கொண்டு சென்று பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய பின் கொலை செய்திருக்கின்றான். இதனை அறிந்த ஹிதுமதெ ஜீவிதெ அந்தக் காவல் துறை அதிகாரியைக் கொன்றிருக்கின்றான். அதற்காக அவனுக்குத் தூக்குத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்திருக்கின்றார். சிறையிலிருந்தபோது இவன் ஐந்து தடவைகள்  தப்பிச் சென்றிருக்கின்றான். தனது சகோதரியின் மரணத்துடன் தொடர்புள்ளவர்களாகக் கருதப்பட்ட மேலும் ஐவரைக் கொலை செய்திருக்கின்றான்.

1978இல் இவனது மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மரண தண்டனையை இலங்கை அரசு ஒழித்ததே அதற்குக் காரணம். பின்னர் பல வருடங்கள் சிறையிலிருந்த இவன் 2018இல் ஜனாதிபதியின் பொது மன்னிப்பால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றான். விடுதலையானதிலிருந்து இவன் குளியாப்பிட்டியிலிருக்கும் பெளத்த ஆலயமொன்றில் தங்கி வாழ்ந்திருக்கின்றான்.

அவனது ஒரேயொரு தங்கையின் மரணத்துக்காக, அம்மரணத்துக்குக் காரணமானவர்களைப் பழி வாங்கியிருந்திருக்கின்றான். என்னைப்பொறுத்தவரையில் இவனுக்கு மரண தண்டனை கொடுத்திருக்கவே கூடாது. ஆனால் சட்டம் அப்படிச் சொல்லாது. அதனால்தான் சட்டம் ஒரு கழுதை என்பார்கள். சட்டம் ஓர் இருட்டறை என்பார்கள். ஆனால் இதைத்தான் நமது தமிழ்ப்படக் கதாநாயகர்களில்  பலர் செய்து வருகின்றார்கள்.  இவன் திரைப்படக் ஹீரோ அல்லன்.  உண்மையான ஹீரோ!

இவன் சிறையிலிருந்த காலத்தில் இவனுடன் சிறையிலிருந்த அரசியல் கைதிகளில் சிலர் - ரோகண விஜேவீரா, விஜய குமாரணதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனா & சரத் பொன்சேகா.

இவனது கதை சிங்களத் திரைப்படமாகவும்  'ஹிதுமதெ ஜீவிதெ' (The Wandering Life - அலையும் வாழ்க்கை)  என்னும் பெயரில் 2021இல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது.  சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுமுள்ளது. பின்வரும் இணைப்பில் அதைப் பார்க்கலாம்:  https://www.youtube.com/watch?v=o0d-vL00w1A