உடையார்குடிக் கல்வெட்டில் 'பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று' என்று வருகின்றது. பாண்டியன் தலைகொண்ட கரிகால் சோழனை எதற்காகச் சோழர் உயர் அதிகாரிகள் கொல்ல வேண்டும்? அந்தக் கல்வெட்டின் மேற்படி வசனத்தைப் பார்க்கும் எவரும் தர்க்கரீதியாக ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் பாண்டியனுக்குச் சார்பானவர்களாக இருக்கக் கூடுமென்ற முடிவுக்கு வரலாம். அப்படி வந்தால் அது தர்க்கபூர்வமானதாகவுமிருக்கும். அப்படி கல்கி வந்திருந்தபடியால் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைப் பாண்டிய ஆபத்துதவிகளாக உருவாக்கியிருக்கக் கூடும்.

கல்கி பிராமணர் குலத்தில் பிறந்தவர் என்பதற்காக அவர் திட்டமிட்டே குற்றவாளிகள் என்பதை மறைத்தார் என்று கூறுவது  சரியானதல்ல. நாம் ஒருவரின் சாதியைக் கூறி அறிமுகப்படுத்துவது மனித உரிமை மீறல் என்னும் காலகட்டத்தில் வாழ்கின்றோம். அதன் காரணமாகவும் அவர் குற்றவாளிகளின் சாதியின் பெயரைக் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கக் கூடும். மக்களுக்கிடையில் சாதிரீதியிலான வேறுபாடுகளை அவ்விதம் குறிப்பிடுவது அதிகரிக்கும் என்று கல்கி கருதியிருக்கலாம்.  மேலும் பொன்னியின் செல்வனில் பல பாத்திரங்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் வருகின்றார்கள். அவர்களையெல்லாம் சாதிப் பெயர் பாவித்துக் கல்கி அறிமுகப்படுத்தவில்லை. இந்நிலையில் எதற்காகச் சதிகாரர்களின் சாதிப்பெயரைக் கல்கி கூற வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?

கல்கி தேசியவாதி. காந்தியவாதி. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற ஒருவர். அவரது 'தியாகபூமி'யில் தீண்டாமைக்கெதிராகக் குரல் கொடுத்தவர். பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். தேசிய விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர். அவ்விதமான ஒருவரைச் சாதி வெறியராகக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

மன்னன் மன்னன் என்னும் யு டியூப்பில் நன்கறியப்பட்ட அரசியல் ஆய்வாளார்  'பிராமணர்கள் திட்டமிட்டு மாற்றிய சோழ வரலாறு என்னும் காணொளியில் எதிரிகள் , துரோகிகள் பற்றி கூறும் விளக்கம் சிறுபிள்ளைத்தனமானது. துரோகிகள் என்றால் கூட இருந்து குழி பறிப்பது என்கின்றார். எதிரிகள் என்றால் எதிரி நாட்டில் அல்லவா  இருக்க வெண்டும் என்கின்றார். கூட இருப்பவன் எதிரிக்கு உளவாளியாக இருந்து செயற்படலாம் என்பதை ஏனோ மறந்து விட்டார்?  பாண்டியனுக்கு ஆதரவாகச் சோழர் மத்தியில் இருந்து செயற்பட்டாலும் அவர்கள் பாண்டிய ஆபத்துதவிகளாகக் கருதப்படலாம்.  இதை அவர் மறந்து விட்டார். இங்கு ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் சோழர்களை வெறுப்பவர்களாக இருந்திருக்கக் கூடும்.  உண்மையில் குற்றவாளிகள் நால்வரும் சகோதரர்கள் என்றுதான் உடையார்குடிக் கல்வெட்டு கூறுகின்றது.  ஒரு குடும்பத்தவர்கள் சோழரை வெறுப்பதற்கு ஏதாவது முக்கிய காரணம் இருந்திருக்கக் கூடும். ஏதோ ஒரு வகையில் சோழரால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கக் கூடும். அதனால் பாண்டியனுடன் இணைந்து பாண்டியனுக்கு உளவாளிகளாகச் செயற்பட்டவர்களாக இருந்திருக்கக் கூடும்.  

மன்னர் மன்னன் மேற்குறிப்பிட்ட காணொளியில் சோழர்கள் காலத்தில் மட்டுமே பிராமணர்கள் அதிகம் தண்டிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டுவார். அதுவும் கூட மேற்படி சகோதரர்கள் சோழரை வெறுத்துப் பாண்டியனுடன் இணைந்து பாண்டிய ஆபத்துதவிகளாகச் செயற்படக் காரணமாக இருந்திருக்கக் கூடும்.

கல்கி அக்கல்வெட்டு கூறும் விளக்கம் பற்றி அன்று விரிவாக அறிந்திராமல் இருந்திருக்கக்  கூடும். அதனால் அவர்களை வேற்று மனிதர்களை உள்ளடக்கிய  பாண்டிய ஆபத்துதவிகளாகக் கல்கி உருவாக்கியிருந்திருக்கக் கூடும்.  அவ்விதம் கல்கி உருவாக்கியிருந்தால் அது நியாயமான அணுகுமுறை. பொன்னியின் செல்வனை வரலாற்றின் அடிப்படையில் கல்கி உருவாக்கின புனைவாக நோக்குவதே பொருத்தமானது.

பதிவுகள் இணைய இதழில் சேசாத்திரி ஶ்ரீதரன் எழுதிய  உடையார்குடிக் கல்வெட்டும் அதன் விளக்கமும் பற்றிய 'உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் ராஜதுரோக தண்டனை' (19 ஜூன் 2019 ) என்னும் கட்டுரையிலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகின்றேன்.

"ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்............................................... தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார், பெற்றாளும் இ........................ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கோட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத் தந்தோம். தாங்களும், இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக. இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவர இ ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன். இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன். இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன"

பெருங்குறி பெருமக்கள் –   மதிப்புடைய வெகுமக்கள்; ஸ்ரீ முகம் – திருமுகம், அரசாணை;  பிரமாணிமார் – பிராமணர் மனைவியர்; பெற்றாளும் – தாயும், குடியோடு குடிபெறும் விலை – சாதாரண மக்கள் பெறும் விலை; பிடாகை – உள்அமைந்த சிறுகிராமம்; அகமனை – குடியிருக்கும் சொந்தமனை.

விளக்கம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள உடையார்குடியில் ஆனத்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் கி.பி.987 வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையானான நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையன்  6 சொந்த வீடுகளையும், இரண்டுவேலி 16 மா நிலத்தையும் 112 பொற்காசுகளுக்கு வாங்கி கோயிலுக்கு விட்டான். அதைக் கொண்டு வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து திருக்கோயிலில் தண்ணீர் சொரியும் மூவாயிரத்தரு நூற்றுவன் என்ற நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிசதம் படி நாழி நெல்லும் ஆட்டை வட்டம் ஒரு காகம். அதே நேரம் நிசதம் 15 பிராமணர் உண்பதற்கும் ஆக பதினாறு 16 பிராமணர்களுக்கு, இவருள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வேண்டும் என்று கொடுத்தான் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையன். இத்தர்மம் காக்கின்ற மகாசபையார் திருப்பாதங்கள் என் தலை மேலன என்று குறித்தான்.

இவன் வாங்கிய 6 வீடும் நிலமும் இரண்டாம் ஆதித்தகரிகாலரை கி.பி. 965 ல் வஞ்சகமாகக் கொன்ற வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிராமணர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சோமன், இவன் தம்பி இரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன். இவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழபிரமாதிராஜன். இவர்தம் தம்பி மலையனூரன் பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகிய நான்கு பேர்களும் சேர்ந்து இரண்டாம் ஆதித்த கரிகாலனை வஞ்சகமாக கொலை செய்த இராசதுரோகிகள் ஆவர். இவர்ளுக்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தி இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி.987) பதிவாகி உள்ளது. தண்டனை வழங்கப்பட்டபோது இராசதுரோகிகள் நால்வரது பிள்ளைகள், மனைவியர், பெற்ற தாய், பேரப்பன்மார் இவர்களுக்கு பெண்கொடுத்த மாமனார்களும், தாயுடன் பிறந்த மாமன்மார்களும், இவருடன் பிறந்த பெண் மக்களும் இனி பிராமணர் அல்லாத வேற்றவர், வேற்று சாதியார். இவர் தம் பிள்ளைகளும் வேற்றுசாதியார் என சமூகம் கருத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இவர்களது உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆணைப்படி கோட்டையூர் பிரம்ம ஸ்ரீராஜன், புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டன் ஆகியோர் பொறுப்பில் விடப்பட்டது. இந்த இருவரும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு ஆணைப்படி குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று குருகாடிக்கிழான் ஆணைஓலை தந்தான். ஏனென்றால் இந்த ஆணைஓலையில் மேற்படி குறித்த இராஜதுரொகிகளின் தம்பி மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும், இவன் மகனும், இவன் தாய் பெரிய நங்கைச் சாணியும் ஆகிய இம்மூவருடைய நிலம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிடாகையான தேவமங்கலத்தில் அமைந்த பட்டில நிலம் தான் அந்த இரண்டுவேலி 16 மா நிலம் என்பது.

இவர்களில் மற்றவர் உடைமைகள் எந்தெந்த ஊர்களில் இருந்தனவோஅங்கும் இதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்பதுதெளிவு. இந்த கல்வெட்டு வியாழகஜமல்லப் பல்லவரையன்  தொடர்பானது என்பதால் இந்த அளவு செய்தி மட்டுமே கல்வெட்டில் அறியத் தரப்பட்டது. இது இராஜ துரோகிகளின் நேரடியான தண்டனைக் கல்வெட்டு அன்று. அதனால் இரண்டாம் ஆதித்ய சோழன் எங்கு? எவ்வாறு? எப்போது? எப்படிக் கொல்லப்பட்டான் என்ற செய்தி இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை. இப்படி இராஜதுரோக தண்டணைக்கு உள்ளானவருக்கு ஊரார் உதவிட, ஒத்துழைக்க முன்வரமாட்டார் மாறாக ஒத்துழைக்க அஞ்சுவார். இவர்கள் தம் தண்டனைக் குற்றம் யாது என்று பிறரால் அறியப்படாதவாறு வேற்றூர் சென்று அக்ஞாத வாசம் செய்தால் அன்றி ஊராரால் ஒதுக்கப்பட்டு வாழ்வதற்கே இடர்படுவர், மிடிமைப்படுவர் என்பதை உணரமுடிகின்றது. இதனால் ஒன்றும் அறியாத அப்பாவியான உறவினர் படும் துன்பம் தான் வேதனையானது.