எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தால் 2001இல் ஸ்தாபிக்கப்பட்ட 'தமிழ் இலக்கியத் தோட்டம்' கனடிய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளை. 9 இயக்குநர்களையும், இரு போசகர்களையும் உள்ளடக்கிய இவ்வமைப்பின் தற்போதைய தலைவராக எழுத்தாளரும், சட்டத்தரணியுமான மனுவல் ஜேசுதாசனிருக்கின்றார். காரியதரிசியாக எழுத்தாளர் அ.முத்துலிங்கமும், பொருளாளராக எழுத்தாளர் என்.கே.மகாலிங்கமும் இருக்கின்றனர்.

நிகழ்வில் கலை, இலக்கியவாதிகள் பலரையும் காண முடிந்தது. எழுத்தாளர் முருகபூபதி பதிவுகள் இணைய இதழில் தொடர்ச்சியாக எழுதுபவர், அவரை இப்பொழுதுதான் முதன் முறையாகச் சந்தித்தேன்.   எழுத்தாளர் பாவண்ணனுடன் சில நிமிடங்களே உரையாட  முடிந்தது. அவர் என் மதிப்புக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர். அவர் கணையாழியில் எழுதிய 'குறி' சிறுகதை எனக்குப் பிடித்த சிறுகதைகளிலொன்று. அது பற்றி கணையாழிக்கு வாசகர் கடிதமொன்றும் எழுதியுள்ளேன். பதிவுகளிலும் பாவண்ணனின் 'போர்க்களம்'  என்னும் சிறுகதை வெளியாகியுள்ளது.

நிகழ்வில் எழுத்தாளர்கள் பாவண்ணன், என்.கே.மகாலிங்கம், பேராசிரியர் நா.சுப்பிரமணியன் தம்பதியர், ராஜாஜி ராஜகோபாலன் (மணற்காடர்), குரு அரவிந்தன், அகணி சுரேஷ், கவிஞர் புகாரி, நடராஜா முரளிதரன், 'உதயன்' லோகேந்திரலிங்கம்,  பா.அ.ஜயகரன், கனடா மூர்த்தி, சாம்ராஜ், காலம் செல்வம், தேவகாந்தன், ஶ்ரீரஞ்சனி, சுமதி ரூபன், டானியல் ஜீவா, சட்டத்தரணியும் முன்னாள் ஊடகவியலாளருமான பாலச்சந்திரன் முத்தையா, 'வெண்மேரி ' அறக்கட்டளை அநுரா , கலை இலக்கிய ஆர்வலர் முருகதாஸ், 'அகரம்தமிழ்' ஸ்தாபகர் (பெயர் உடனடியாக நினைவுக்கு வரவில்லை) ஆகியோரைச் சந்திக்க முடிந்தது.  நிகழ்வில் 'டொரோண்டோ'வின் வர்த்தக,கலை, இலக்கிய ஆளுமைகள் பலரைக் காண முடிந்தது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜப்பானிய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், ஆசிரியருமான  தோமஸ் ஹிடொஷி புருக்ஸ்மா கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கிம் எக்லின் (நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்) கலந்து கொண்டார்.   எழுத்தாளர் சிவசங்கரி தனது விருதினைப் பெறுவதற்காக வந்திருந்து கலந்துகொண்டார். இவரைக்கண்டதும் என் பால்யப் பருவத்தில் வாசித்த சிறிய ஆனால் ஒரு முறை வாசிப்பிலும் மறக்க முடியாததாக  அமைந்து விட்ட 'எதற்காக' நாவல் நினைவுக்கு வந்தது.

கவிஞர் புகாரி, நடராஜா முரளிதரன், குரு அரவிந்தன்  ஆகியோர் தமது நூல்களைத்  தந்தனர். நன்றி. அவை பற்றிய என் கருத்துகளைப் பின்னர் எழுதுவேன்.  விழா சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சி அறிவிப்பாளர்களும், விருதுக்குரியவர்களை அறிமுகம் செய்த சிறுமிகளும் சிறப்பாகச் செய்திருந்தனர். மொத்தத்தில் நிகழ்வு நிறைவாக அமைந்திருந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.