'அபத்தம்' மின்னிதழின் ஆசிரியரான நண்பர் ஜோர்ஜ்.இ.குருஷேவ் ஆடி 'அபத்தம்' இதழில் எழுதிய  கட்டுரைகளில் என் கவனத்தை ஈர்த்த சில பகுதிகளை இங்கு குறிப்பிடுவது நல்லதென நினைக்கின்றேன்.  ஓரிடத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

"......... தாயகத்தில் எழுதியவர்கள் எல்லாம் இயல் விருதுக்கு அழைப்புக்  கிடைத்து ஆஜராவது போல், எனக்கு ஒரு போதும் அழைப்புத் தரப்பட்டதுமில்லை. கிடைக்காதது பற்றி அலட்டிக்கொள்வதுமில்லை. Black Tie Affair இல், முத்தரின் Coat Tail இல் தொங்கிக்கொண்டு ஈடேற நினைக்கும் அளவிலும் எனக்குத் தேவை இல்லை"

இங்கு அவர் ' தாயகத்தில் எழுதியவர்கள் எல்லாம் இயல் விருதுக்கு அழைப்புக்  கிடைத்து ஆஜராவது போல், எனக்கு ஒரு போதும் அழைப்புத் தரப்பட்டதுமில்லை'  என்று குறிப்பிடுவது தாயகத்தில் எழுதிய எழுத்தாளர்களை அவமானப்டுத்துவதுபோல் தென்பட்டதால் யார்  யார் தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இயல் விருதின் ஒரு பிரிவில் விருது பெற்றவர்கள் என்று சிந்தித்துப்பார்த்தேன். எஸ்.பொவுக்கு வாழ்நாள் இலக்கியச் சாதனைக்காக இயல் விருது கிடைத்துள்ளது. அவருடனான பாரிஸ் இலக்கியச் சந்திப்பு பற்றித் தாயகத்தில் தொடரொன்று வந்துள்ளது. ஆனால் எஸ்.பொ தாயகத்தில் எழுதியுள்ளாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதனால் அவர் எழுதவில்லையென்றே வைத்துக்கொள்வோம். இதுபோல் தான் கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தனும். அவரும் எழுதியது மாதிரியும் உள்ளது. ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. அதனால் அவரும் தாயகத்தில் எழுதவில்லையென்று தற்போது வைத்துக்கொள்வோம். அவருக்கும் அபுனைவுக்காக அவரது கூலித்தமிழ் நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது கிடைத்துள்ளது. எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்திக்கும் புனைவுக்காக இயல் விருது கிடைத்துள்ளது. அவரும் தாயகத்தில் எழுதியிருக்கக்  கூடும். ஆனால் உறுதியாகத் தெரியாததால் அவரையும் எழுதாதவர் பட்டியலில் சேர்த்து விடுவோம்.  எழுத்தாளர் மு.புஷ்பராஜனுக்கும் இயல் விருது கிடைத்துள்ளது. அவரும் தாயகம் சஞ்சிகையில் எழுதியிருக்கக் கூடும். ஆனால் உறுதியாகத் தெரியாததால் அவரையும் தற்காலிகமாக எழுதாதவர் பட்டியலில் சேர்த்து விடலாம்.

எஞ்சியிருப்பவர்கள் எழுத்தாளர்கள் கவிஞர் திருமாவளவனும், கவிஞர் செழியனும், பா.அ.ஜயகரனும், வ.ந.கிரிதரனுமே.  பா.அ.ஜயகரனின் கவிதைகள், சிறுகதை ஆகியன  'தாயக'த்தில் வெளிவந்ததாகத் தெரிகின்றது. எனது படைப்புகள் பல (நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் & கட்டுரைகள்) வெளிவந்துள்ளன. கவிஞர் திருமாவளவனும் தாயகத்தில் எழுதியுள்ளார். கவிஞர் செழியனின்  'ஒரு போராளியின் நாட்குறிப்பு' தாயகத்தில் தொடராக வெளிவந்துள்ளது. கவிதைகள், கட்டுரைகளும் தாயகத்தில் வெளியாகியுள்ளன. கவிஞர் செழியனுக்கு சிறப்பு இயல்விருது கிடைத்துள்ளது. திருமாவளவனுக்குக் கவிதைக்காக இயல்விருது கிடைத்துள்ளது. பா.அ. ஜயகரனுக்கு புனைவுக்காகவும், எனக்கு இலக்கியப் பங்களிப்புக்காகவும்  இயல் விருதுகள் கிடைத்துள்ளன. ஆக,  ஜோர்ஜ் குறிப்பிடுவது  எழுத்தாளர் ஜயகரனையும், கவிஞர் திருமாவளவனையும், கவிஞர் செழியனையும், வ.ந.கிரிதரனையும் என்றுதான் கருத வேண்டியுள்ளது. இது தாயகத்தில் எழுதியதற்காகக்  கிடைத்த மிகப்பெரிய விருதென்று கருதலாம். ஜோர்ஜ் குருஷேவுக்கு விருதுகள் பற்றி, தமிழ் இலக்கியத்தோட்டம் பற்றி எவ்விதக் கருத்துமிருக்கலாம்.அது அவரது உரிமை. அதுபோல் எமக்கும் அவரது கருத்துக்கெதிராகக் கருத்துகள்  இருக்கலாம். அது எம் உரிமை. இந்நிலையில் எம்மையெல்லாம் விருதுகளுக்காக, அங்கீகாரத்துக்காக அலைபவர்களாக அவர் சித்திரிப்பது வருத்தத்துக்குரியது.  துரதிருஷ்ட்டவசமானது.

'நான் அந்த விருதை ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும், விருதுகளைபெற்ற தாயகத்தில் எழுதிய எழுத்தாளர்களை வாழ்த்துகிறேன்' என்றுதான் பொதுவாக இதழாசிரியர் ஒருவர் கூறுவார். அவ்விதம் செய்திருந்தால் அது கியூறியஸ் ஜீக்குப் பெருமை சேர்த்திருக்கும். ஆனால் அதற்குப்பதிலாக அவர் அவர்களைக் கேலி செய்திருக்கின்றார். அது அவரது ஆளுமையைச் சிறுமைப்படுத்துகின்றது.

'அபத்தம்' தேவைக்கு அதிகமாக தமிழ் இலக்கியத்தோட்டத்தின் மீது விமர்சனத்தை வைப்பது போல் தெரிகிறது. எத்தனையோ அமைப்புகள் (அரசுகளின் சாகித்திய விருதுகள், பல்வேறு கலை, இலக்கிய அமைப்புகளின் , எழுத்தாளர்களின் விருதுகள் போன்ற)  விருதுகள் வழங்குகின்றன. இவற்றையெல்லாம் தமிழ் இலக்கியத் தோட்டத்தை விமர்சிப்பதுபோல் 'அபத்தம்' விமர்சிக்கவில்லை.  ஆனி 'அபத்தம்' இதழில் இயல் விருது பற்றி அபத்தம் நிறையவே விமர்சித்து விட்டது. அதற்கான எதிர்வினைகள் கிடைத்திருந்தால் அவற்றைப்  பிரசுரிக்கலாம்.

இதே சமயம் தாயகம் சஞ்சிகையில் எழுதிய எழுத்தாளர்களான என்.கே.மகாலிங்கம், 'காலம்' செல்வம்' ஆகியோர்  'இயல் விருது' வழங்கும் 'தமிழ் இலக்கியத் தோட்ட'த்தின் இயக்குநர்களில் இருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தொண்ணூறுகளில் கனடாவில் தமிழர்கள் மத்தியில் நிலவிய சமூக, அரசியல் சூழலில் விருதுகளையோ, அங்கீகாரத்தையோ எதிர்பார்க்கும் எவரும் தாயகம் பத்திரிகையில் எழுதியிருக்க மாட்டார்கள். இந்நிலையில் அவ்விதம் அக்காலத்தில் தாயகத்தில் எழுதியவர்களை 'அபத்தம்'  கிண்டலடிப்பதாகவே கருத வேண்டியுமுள்ளது.

இன்னுமோரிடத்தில் ஜோர்ஜ் புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் எவரும் தாயகம் சஞ்சிகையின் ஐந்தாண்டுப் பங்களிப்பைக் குறிப்பிடுவதில்லையென்றும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். அதுவும் தவறானதொரு கூற்று.  தாயகம் பற்றியும் , ஜோர்ஜ் இ.குருஷேவ் பற்றியும் அவ்வப்போது  நான் சுட்டிக்காட்டத்தவறுவதில்லையென்பதைக் கீழுள்ள இணைய முகவரிகளிலுள்ள பதிவுகள் வெளிப்படுத்தும்.

எழுத்தாளர் தேவகாந்தனின் ஆண்டிதழான 'கூர்' இதழில் நான் எழுதிய தாயகம் பற்றிய கட்டுரை - கனடாத் தமிழ் இலக்கியத்தில் 'தாயகம் (கனடா) பத்திரிகை/சஞ்சிகையின் பங்களிப்புப் பற்றியதொரு சுருக்கமான அறிமுகம்!  - வ.ந.கிரிதரன் - https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/4825-2018-11-19-03-17-06

பதிவுகள் இணைய இதழில் எழுதிய இன்னுமொரு குறிப்பு - வாசிப்பும், யோசிப்பும் 229 : எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவின் தாயகம் (கனடா) புகலிடத்தமிழர்களின் முக்கியமான பத்திரிகை / சஞ்சிகைகளிலொன்று.  https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/3836--229-

பதிவுகள் இணைய இதழில் எழுதிய இன்னுமொரு குறிப்பு -  'கியூறியஸ் ஜி' ஜோர்ஜ் இ.குருஷேவ்! - வ.ந.கிரிதரன் - https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/7759-2023-02-28-03-39-37  

தமிழ் இலக்கியத் தோட்டம் இதுவரை வழங்கிய விருதுகளின் பட்டியல் :  https://tamilliterarygarden.com/awards