எழுத்தாளர் சோமகாந்தன் வெளியிட்ட நூல்களிலோ அல்லது அவர் பற்றிய கட்டுரைகளிலோ அவரது 'களனி நதி தீரத்திலே'  என்னும் இந்த நாவல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததாக எனக்கு நினைவிலில்லை.  ஒரு வேளை நான் தவற விட்டிருக்கலாம்.  நான் அறிந்த வரையில்  இந்நாவல் நிச்சயம் இதுவரை நூலாக வெளியாகவில்லையென்றே கருதுகின்றேன். ஆனால் அவரது நாவல்களில் இதுவொரு முக்கியமான நாவலாகவே எனக்குப் படுகிறது. 20.8.1961 தொடக்கம் 29.101.961 வரை மொத்தம் 11 அத்தியாயங்கள் வெளியாகியுள்ளன.  1- 4 வரையிலான அத்தியாயங்களுக்குத் தலைப்புகள் இடப்பட்டிருக்கவில்லை.

கதைச்சுருக்கம்: கதை சொல்லியும் அவன் நண்பன் நடராஜனும் பால்ய காலத்திலிருந்து நண்பர்கள். இருவரும் எஸ்.எஸ்.சி சித்தியடைந்து   கொழும்பில் வேலை கிடைத்துச் செல்கின்றார்கள். ஒன்றாகத் தங்கியிருக்கின்றார்கள். இருவரும் களனி கங்கை நதிக்கரையில் றோசலின் என்னும் அழகியொருத்தியைச் சந்திக்கின்றார்கள். அதன் பின் ஒரு நாள் வேலைக்குச் செல்லும் நண்பர்கள் வழக்கமாகச் செல்லும் ட்ரொலி வருவதற்கு நேரமெடுக்கவே 'ராக்சி' பிடித்துச் செல்லத்தீர்மானிக்கிறார்கள். றோசலின் அன்று புதிய வேலை கிடைத்துச் செல்வதற்காக 'ட்ரொலி'யை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள். அவளுக்கும் நேரமாகிவிடவே இவர்களிடம் தனக்கும் 'ராக்சி'யில் இடம் தர முடியுமா  என்று கேட்கின்றாள். இவர்களும் சம்மதித்து அவளுக்கு உதவுகின்றார்கள். அன்று முதல் மூவரும் நண்பர்களாகின்றார்கள்.

அவர்களுக்கிடையில் நட்பு வளர்கிறது. அவள் இருவருடனும் சகஜமாகப் பழகி வருகின்றாள். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் அவள் பேச்சு, செயல்களை வைத்து அவள் மீது காதல் கொள்கின்றார்கள். ஒரு சமயம் கதை சொல்லி உடல் நலம் கெட்டு ஊருக்குச் சென்று திரும்புகையில் நண்பன் நடராஜன் றோசி மேல் காதல் கொண்டிருப்பதை அறிந்து அவன் மேல் ஆத்திரமடைகின்றான். றோசியும் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதி அவள் மீதும் கோபமடைகின்றான்.

றோசி காரணமாக நண்பர்களுக்கிடையில் மோதல் முற்றி கதை சொல்லி நண்பன் நடராஜனைத் தாக்கவே , நடராஜனும் ஆத்திரமடைந்து அவனைவிட்டு விலகி, றோசியின் வீட்டுக்கே சென்று விடுகின்றான். உண்மையில் அதுவரை றோசி அவர்களுடன் சாதாரணமாகவே பழகி வந்திருக்கின்றாள். நடராஜன் அவளிருப்பிடத்துக் சென்ற பின்பே அவனது தன்மீதான தீவிர காதலை உணர்ந்து அவனைக் காதலிக்கத்தொடங்குகின்றாள்.

பின்னர் கதை சொல்லி ஊரிலிருக்கும் அவனுக்குத் தெரிந்த பெண்ணான கமலா என்பவளை மண முடிக்கின்றான். இதற்கிடையில் நாடு தழுவி நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு பேசுகையில் முற்போக்குவாதியான கதைசொல்லிக் காடையர்களால் தாக்கப்படும் சந்தர்ப்பமுமேற்படுகின்றது., ஆனால் இறுதியில் அத்தொழிலாளர் வேலை நிறுத்தமும் எவ்விதப் பயனுமறறு முடிவுக்கு வந்து, தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதுடன் முடிவுக்கு வருகின்றது.

நாவலின் இறுதி துயர் மிக்கது. நாட்டின் அரசியல் சூழலால் வெடிக்கும் வன்முறையில் நடராஜன் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டு விடுகின்றான். றோசியும் பலரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு, தாதியாகி கர்த்தரிடம் சரணடைகின்றாள்.  கதை சொல்லியின் குழந்தைப்பேறுக்கும் அவளே தாதியாக உதவியும் செய்கின்றாள். அவளது வீடு  காடையர்களால் எரிக்கபப்டுகையில் அதற்குள் சிக்கி அவளது தந்தையும் எரிந்து போகின்றார். நாட்டில் நடந்த இனக்கலவரம்தானது. ஆனால் கதாசிரியர் அதனை மறைமுகமாகவே எடுத்துரைப்பார். 'வடக்கில் மின்னல், தெற்கில் முழக்கம். எந்நேரமும் மழை கொட்டத்தயாராகக் கருமேகங்கள் நாடு பூராவும் கவிந்திருந்தன.' எத்தனையோ லட்சம் ஜனங்களின் அமைதிக்கு உலை வைப்பது போல, இலங்கை வானில் கவிந்திருந்த கரு மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஆக்ரோசமாக முட்டி அகங்காரமாக மோதி பலத்த மழையாகக் கொட்டத் துவங்கிவிட்டன. பயங்கரப் பிரவாகம். எத்தனை உயிர்கள், உடமைகள் அதில் அடித்துச் செல்லப்பட்டனவோ?"  போன்ற சொற்றொடர்களால் நாட்டுச் சூழல் விபரிக்கப்படுகின்றது.

நாவலில் கதை சொல்லியின் பெயர் எங்கும் கூறப்படவில்லை. ஆனால்  முற்போக்குச் சிந்தனை மிக்க எழுத்தாளன் என்னும் அவனது  ஆளுமை நண்பர்களுக்கிடையிலான உரையாடல், சம்பவங்கள் மூலம் விபரிக்கப்படுகின்றது. நாவலின் நடை வாசகர்களைக்கவரும் எளிமையான , ஆனால் சுவையான நடை.

இன்னுமொரு விடயம் - நாவலில் வரும் றோசி பேர்கர் இனப்பெண்ணா அல்லது சிங்களக் கிறிஸ்தவப் பெண்ணா என்பது தெளிவாக்கப்படவில்லை. ஆனால் றோசியும் நடராஜனும் இரு வேறு இனத்தவர்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவே எழுத்தாளர் சோமகாந்தனின் முதல் நாவல். இந்நாவல் அவரது சொந்த அனுபவத்தில் புனையப்பட்டது என்று 'புதினம்' பத்திரிகைக்கான நேர்காணலில் அவரே கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாவல் தொடராக வெளியானபோது பத்திரிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான வரதர் இன்னுமொரு விளம்பர் உத்தியையும் பாவித்திருந்தார்.  டேவிட் லீனின் (David Lean) இயக்கத்தில் 1957இல் வெளியாகி 7 ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற சிறந்த படம் The Bridge on the River Kwai. இதன் காட்சிகள் இலங்கையிலும் எடுக்கப்பட்டிருந்தன. இதில் கொட்டாஞ்சேனையில் நிறுவனமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த அழகான தோற்றமுள்ள  லிண்டா என்னும் பெண்ணும் நடித்திருந்தார்.  அவரை நாவலின் றோசி பாத்திரமாக்கி புகைப்படப்பிடிப்பாளர் சிவம் என்பவரைக்கொண்டு புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டிருந்தார்.

 - நாவலாசிரியர் நா.சோமகாந்தன் (ஈழத்துச் சோமு) -

நாவல்:  'களனி நதி தீரத்திலே' - நா. சோமகாந்தன் (ஈழத்துச் சோமு)

அத்தியாயம் 1 -  (20.8.1961)
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5 - றோசியும் றோசாவும்
அத்தியாயம் 6 - இரண்டு மலர்களும் ஒரு வண்டும்
அத்தியாயம் 7 - மோகவலை
அத்தியாயம் 8 - மண்  கோட்டையா? மதிற் கோட்டையா?
அத்தியாயம் 9 - பாவ விமோசனம்
அத்தியாயம் 10 - கருமுகில்
அத்தியாயம் 11 - அஞ்சலி  (29.10.1961)

ஈழத்துச் சோமுவின் 'களனி நதி தீரத்திலே..' நாவலை வாசிக்க

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.