சுடர் சஞ்சிகையின் சித்திரை 1977 இதழில் வெளியான 'இனி ஒரு புதுயுகம் பிறக்கும்'  சிறுகதை  கூறும் பொருள் காரணமாக மிகவும் முக்கியத்துவம் பெறும் சிறுகதைகளில் ஒன்று.  யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடந்த அனர்த்தங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதையிது. வேறு யாரும் இவ்விதம் எழுதியதாகத் தெரியவில்லை. இக்கதையினை வாசித்தபோது எனக்கு அன்று நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. இக்கதையின் கதை சொல்லிக்கு ஏற்பட்ட அனுபவங்களையொத்த அனுபவங்களே எனக்கும் ஏற்பட்டன. பேராசிரியர் திருச்சி நயினார் முகம்மது உரையாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் பொலிசார் வந்து கூட்டத்தைக் குழப்பியதும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளைக் கூடியிருந்த மக்கள் மீது பிரயோகித்ததும், கோட்டையின் அகழிக்குள் குதித்து மீண்டதும் நினைவுக்கு வந்தன. கதை சொல்லிக்கும் இத்தகைய அனுபவங்கள் ஏற்பட்டதைக் கதை விபரிக்கின்றது.

இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டுக் காலில் தற்காலிக ஊனம் ஏற்பட்டு விடுகின்றது கதை சொல்லியின் சித்தப்பா மகளுக்கு. அதன் காரணமாக நடைபெறவிருந்த அவளது திருமணம் தடைபட்டு விடுகின்றது. காரணம் மணமகளுக்கேற்பட்ட ஊனம். விளைவு அந்த அப்பாவிப்பெண் தன் வாழ்வை முடித்துக்கொள்கின்றாள். அவளது முடிவுக்குக் காரணம் மாநாட்டின் இறுதிநாள் நடைபெற்ற பொலிசாரின் வன்முறை ஏற்படுத்திய வடுக்கள்தாம். இவ்விதம் நிலையிலிருந்து விடுபடுவதற்கு இனி ஒரு புதுயுகம் பிறக்க வேண்டும் என்று கதை முடிகின்றது. இச்சமயம் தனி நாடு வேண்டி மு.தளையசிங்கம் எழுதிய  ஒரு தனி வீடு நாவலின் நினைவும் தோன்றியது.

வரதரின் மேற்படி சிறுகதை வெளியான சுடர் சஞ்சிகையை வாசிக்க -  https://noolaham.net/project/181/18009/18009.pdf