இன்று கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனின் நினைவு தினம். என் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவர்.
 
என் இளமைப் பருவத்தில் பத்திரிகைகளில் , சஞ்சிகைகளில் அவரது கட்டுரைகளைப் பார்த்திருக்கின்றேன். படித்திருக்கின்றேன்.பின்னர் பல்கலைக்கழகக்காலகட்டத்தில் ஃபிளவர் றோட்டில் அமைந்திருந்த அமெரிக்கன் சென்டர் நூலகத்தில் அடிக்கடி பார்த்து வியந்திருக்கின்றேன். ஆனால் அவருடன் பழகும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கவில்லை. ஆனால் காலத்தின் மாற்றத்துடன் , இணையத்தின் வரவும், சமூக ஊடகங்களின் வரவும் அந்தக் குறையினையும் தீர்த்து வைத்தது.
ஒரு காலத்தில் என்னை வியக்க வைத்தவர் பதிவுகள் இணைய இதழில் நிறைய எழுதினார். முகநூலில் இனிய நண்பரானார். தொழில் நுட்பத்தின் ஆரோக்கியமான விளைவு. இவரைப்போல் கலை, இலக்கிய ஆளுமையாளர்கள் பலருடன் என்னைப் பிணைத்து வைத்துள்ள இணையத்தொழில் நுட்பத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி.
 
திரு.கே.எஸ்.எஸ் அவர்கள் இருந்தவரை தளராமல் இயங்கிக்கொண்டேயிருந்தார். எழுதிக்கொண்டேயிருந்தார்.இவரைப்போல் நந்தினி சேவியர் , எஸ்.பொ, வெங்கட் சாமிநாதன் போன்றவர்களையும் குறிப்பிடலாம். இவர்கள் அனைவருடனும் நட்பைப்பேண வழி வகுத்த இணையத்தொழில் நுட்பத்தை என்றுமே நன்றியுடன் நினைவு கூர்வேன்.
 
கே.எஸ்.எஸ் அவர்களின் வாழ்க்கை ஒரு நிறைந்த வாழ்க்கை. தான் நினைத்தபடி , தான் நினைத்தபடியே இருந்து இன்று தன் படைப்புகளூடு நிலைத்து நிற்கின்றார். அவரால் ஆவணப்படுத்தப்பட்ட படைப்புகள் காலத்தினூடு நிலைத்து நிற்கும்.