இன்று, நவம்பர் 5,  வித்துவான் வேந்தனாரின் பிறந்தநாள்.  ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் வேந்தனாரின் சிறுவர் இலக்கியத்திற்கான பங்களிப்பு மகத்தானது. சோமசுந்தரப் புலவரைத் தொடர்ந்து இவரது பல சிறுவர் கவிதைகள் தமிழ்ப் பாடநூல்களில் சேர்க்கப்பட்டன. வேந்தனாரின் புகழ்பெற்ற குழந்தைப் பாடலான ‘அம்மாவின் அன்பு’ என்னும் தலைப்பில் வெளியான ‘காலைத் தூக்கிக் கண்ணிலொற்றி.. ‘  நவாலி சோமசுந்தரப்புலவரின் 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை' என்னும் குழந்தைகளுக்கான பாடல் போல் தமிழ் இலக்கியத்தில் நிலைத்து நிற்குமொரு சிறந்த பாடல். ‘அம்மாவின் அன்பு’.

தமிழகக் குழந்தைக் கவிஞர்களான அழ.வள்ளியப்பா, தேசிக விநாயகம் பிள்ளை இவர்களது குழந்தைக் கவிதைத்தொகுப்புகள் மிகவும் புகழ்பெற்றவை. அவற்றையொத்த குழந்தைக் கவிதைத்தொகுப்புகள்தாம் வித்துவான் வேந்தனாரின் குழந்தைக் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்புகளும். இவரது குழந்தைப் பாடல்களை உள்ளடக்கிய மூன்று தொகுப்புகள் நூலகம் இணையத்தளதிலுள்ளன. இவை சென்னையிலுள்ள லாவண்யா பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

1. வேந்தனார் குழந்தை மொழி - பாகம் 1 ( சிறுவர் பாடல்கள்) - https://noolaham.net/project/774/77316/77316.pdf
2. வேந்தனார் குழந்தை மொழி - பாகம் 2 ( சிறுவர் பாடல்கள்) - https://noolaham.net/project/774/77317/77317.pdf
3. வேந்தனார் குழந்தை மொழி - பாகம்3 ( சிறுவர் பாடல்கள்) - https://noolaham.net/project/774/77318/77318.pdf

பாடல் : அம்மாவின் அன்பு
பாடலாசிரியர் : வித்துவான் க.வேந்தனார்

காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா.

புழுதி துடைத்து நீரும் ஆட்டிப்
பூவுஞ் சூட்டும் அம்மா
அழுது விழுந்த போதும் என்னை
அணைத்துத் தாங்கும் அம்மா.

அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி
அழிவு செய்த போதும்
பிள்ளைக் குணத்தில் செய்தான் என்று
பொறுத்துக் கொள்ளும் அம்மா.

பள்ளிக் கூடம் விட்ட நேரம்
பாதி வழிக்கு வந்து
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கி
தோளிற் போடும் அம்மா.

பாப்பா மலர்ப் பாட்டை நானும்
பாடி ஆடும் போது
வாப்பா இங்கே வாடா என்று
வாரித் தூக்கும் அம்மா.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.