'வீரகேசரி பிரசுர நாவல்கள் ஒரு பொது மதிப்பீடு' என்னும் அநுபந்தம் பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்களால்  நா.சுப்பிரமணியம் என்னும் பெயரில்  எழுதப்பட்டது. அப்பொழுது அவர் எம்.ஏ பட்டதாரி. யாழ்  பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டம். வீரகேசரி ஐம்பதாவது நூற்பிரசுர விழாவில் அநுபந்தமாக வெளியிடப்பட்ட பிரசுரமிது. இப்பிரசுரத்தில் வீரகேசரி பிரசுரங்கள்  பற்றிப் பின்வருமாறு  குறிப்பிடப்பட்டிருந்தது:

"1972ஆம் ஆண்டில் தொடங்கிய வீரகேசரி பிரசுர முயற்சி ஆரம்பத்தில் ஆண்டொன்றுக்குச் சுமார் ஆறு பிரசுரங்களாகத் தொடங்கி, அதிகரித்து வந்து இப்பொழுது மூன்றாண்டுகளாக ஆண்டு ஒன்றுக்குப் பத்து நாவல்கள் என்ற அளவில் விரிவடைந்துள்ளது."

இவ்விதமே நானும் வீரகேசரி பிரசுரங்களும்  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, உள்ளூர் உற்பத்திக்கு முதன்மை கொடுக்கப்பட்டிருந்த சூழ்நிலை காரணமாக உருவாகின என்றே எண்ணியிருந்தேன். ஆனால் உண்மையில் அச்சூழலைப் பயன்படுத்தி வீரகேசரி பிரசுரங்கள்  அதிக அளவில் வெளிவந்திருந்தாலும் வீரகேசரி பிரசுரமாக 1951இலேயே நாவலொன்று வெளியாகியிருந்ததை அறிய முடிகின்றது. அதனை எழுதியவர் எழுத்தாளர் கே.வி.எஸ்.வாஸ் (கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார்). நாவலின் பெயர் - குந்தளப்பிரேமா.

      - கே.வி.எஸ்.வாஸ் -

இந்நாவலுக்கு நாவலாசிரியர் கல்கி அவர்கள் நல்லதோர் அறிமுகத்தினையும் எழுதியுள்ளார்.  நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள வீரகேசரி  நிறுவனத்தின் தலைவர் பெரி. பெரி. சுப்பிரமணியச் செட்டியார் தனது முன்னுரையில்  "எங்கள் அடுத்த வெளியீடாக உங்கள்  அனைவரையும் மகிழ்வித்த 'நந்தினி' புத்தக ரூபமாக வெளிவரவிருக்கிறாள் என்னும் சந்தோஷ செய்தியையும்  உங்களுக்கு இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம்."  என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் பார்க்கும்போது அந்த 'நந்தினி' நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளியானதா , அது போல் ஏனைய நாவல்களும் அக்காலகட்டத்தில் வீரகேசரி பிரசுரங்களாக வெளிவந்துள்ளனவா என்பது பற்றிய ஆய்வின் அவசியத்தை உணர முடிகின்றது.

கே'வி;எஸ்.வாஸின் (ரஜனி) 'குந்தளப் பிரேமா' நாவலை இணையக் காப்பகத்தில் கண்டடைந்தேன். அதற்கான இணைய முகவரி.

எழுபதுகளில்  வீரகேசரி பிரசுரங்களாக வெளியான கே.வி.எஸ்.வாஸின் நாவல்கள் (இவை நான் அறிந்தவை. முழுமையான பட்டியலா இல்லையா என்பது ஆய்வுக்குரியது.):

1.  குந்தளப் பிரேமா
2. . கணையாளி
3.  மைதிலி
4. ஆஷா
5. நெஞ்சக்கனல்
6. மலைக்கன்னி
7. ஜீவஜோதி

கே.வி.எஸ்.வாஸ்  அவர்களின் மர்ம நாவல்கள் என் பால்ய  பருவத்து வாசிப்புக்காலத்தில், நான் மர்ம நாவல்களில் மூழ்கிக்கிடந்த தருணங்களில் மனத்துக்கு மிகுந்த உவப்பாகவிருந்தவை.  அக்கால மித்திரன் பத்திரிகையில் இவரது நாவல்கள் பல தொடர்களாக மீள்பிரசுரமாகிக்கொண்டிருந்தன. தென்னிந்திய சஞ்சிகை, நாவல்களில் மூழ்கிக்கிடந்த காலமாகையால் இவரது எழுத்து நடை எமக்கெல்லாம் மிகவும் உவப்பாகவிருந்ததொன்றும் ஆச்சரியமானதல்ல.

இவரது மகனே 'கதம்பம்' சஞ்சிகையின் ஆசிரியரும், வெளியாட்டளருமான எழுத்தாளர் மோகன். இவர் ஆரம்பத்தில் நீண்ட காலம்  வீரகேசரியில்  கண்ணகி - மாதவி என்னும் புனைபெயரிக் சினிமாச் செய்திகளை எழுதியவர்.  கதம்பம் சஞ்சிகையில் இலங்கை, இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் பல வெளிவந்துள்ளன. தெளிவத்தை ஜோசப்பின் நாவலான  “பாலாயி” அதில்தான் தொடராக வெளியானதென்பதும் குறிப்பிடத்தக்கது. 1959 - 1983 வரை கதம்பம் வெளியானது. 83 இனக்கலவரத்தைத்தொடர்ந்து அதுவும் நின்று போனது.

எழுத்தாளர் யாழ்நங்கை (அன்னலட்சுமி ராஜதுரை) நீண்ட காலம் வீரகேசரியில் பணியாற்றியவர். எழுத்தாளர் முருகபூபதியும் அவ்விதம் பணியாற்றியவரே. இவர்கள் கே.வி.எஸ்.வாஸ் பற்றிய அரிய தகவல்களைப் பகிரக்கூடும்.

    - குந்தளப்பிரேமா' நாவலிலிருந்து காட்சியொன்று -

உசாத்துணைப் பட்டியல்

1.' வீரகேசரி பிரசுர நாவல்கள் ஒரு பொது மதிப்பீடு'  - நா.சுப்பிரமணியம்
2. குந்தளப்பிரேமா நாவல் - வீரகேசரி பிரசுரம் (1952)
3. கே.வி.எஸ்.வாஸ் - விக்கிபீடியாக் குறிப்பு
4. .இன்றைய ஈழத்து பிரபல எழுத்தாளர்களின் முதல் ஆக்கத்திற்கு களம் தந்தது கதம்பமே மனம் திறக்கிறார் கதம்பம் மோகன்   - தினகரனிலிருந்து..   நவம்பர் 8 , 2012


குந்தளப்பிரேமா நாவலிலிருந்து மேலும் சில ஓவியங்கள். ஓவியர் V.K என்றுள்ளது.

 



கே.வி.எஸ்.வாஸ் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு

கே. வி. எஸ். வாஸ் (1912 – ஆகத்து 30, 1988) இலங்கையின் தலைசிறந்த பத்திரிகையாளராக, எழுத்தாளராக விளங்கியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார் என்ற இயற்பெயர் கொண்ட கே. வி. எஸ். வாஸ் தமிழ்நாடு, கும்பகோணத்தில் பிறந்தார். தமிழ், ஆங்கிலம், சமக்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். திருச்சி புனித யோசப்பு கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 15 வயதிலேயே இவரது கத்திச் சங்கம் என்ற சிறுகதை சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. பாப்புலர் மேகசீன் (Popular Magazine) என்ற இதழையும் நடத்தினார். சுதேசமித்திரன் வார இதழில் இவர் எழுதிய 'கரும்பூதம் அல்லது கள்வனைக் காதலித்த காரிகை' என்னும் தொடர்கதை 1937 ஏப்ரல் 18 முதல் வெளிவந்தது.[2] கண்டி அரசி டோனா கத்தரீனாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து கண்டியரசி என்ற வரலாற்றுப் புதினத்தை 1940 இல் எழுதி வெளியிட்டார்.

இலங்கை வருகை

1930 ஆம் ஆண்டில் சுப்பிரமணியம் செட்டியாரால் ஆரம்பிக்கப்பட்ட வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக இணைந்து 1942 ஆம் ஆண்டில் இலங்கை வந்தார். அவரது அயராத உழைப்பினாலும் எழுத்துத் திறமையினாலும் வீரகேசரி பத்திரிகையின் நிருபராக, உதவி ஆசிரியராக, ஆசிரியராக, பின் 1953 ஆம் ஆண்டில் பிரதம ஆசிரியராகப் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார். அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், மற்றும் சமூகப் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணினார்.

எழுத்தாளராக

வீரகேசரி பத்திரிகையில் குந்தளப் பிரேமா (1951), நந்தினி, தாரிணி, பத்மினி, ஆஷா, சிவந்தி மலைச்சாரலிலே, அஞ்சாதே அஞ்சுகமே போன்ற பல துப்பறியும் புதினத் தொடர்களை ரஜனி, வால்மீகி ஆகிய புனைபெயர்களில் எழுதினார். பல ஆன்மீகக் கதைகளும் எழுதினார். இவரது தொடர்கதைகள் பல அக்காலத்திலே வீரகேசரி பிரசுரங்களாக வெளிவந்தன. ஈழத்தின் கதை என்ற பெயரில் இலங்கையின் வரலாற்றை ஆனந்த விகடனில் தொடராக எழுதினார். இத்தொடரை 2008 ஆம் ஆண்டில் அவரது மகன் கே. வி. எஸ். மோகன் (கதம்பம் மோகன்) நூலாக வெளியிட்டார்.

சென்னை த இந்து பத்திரிகைக்கும் மலேசியாவின் தமிழ் நேசன் பத்திரிகைக்கும் 32 ஆண்டுகாலம் இலங்கை நிருபராகப் பணியாற்றினார். கல்கி வார இதழில் இலங்கைக் கடிதம் என்ற தலைப்பில் வாராந்தம் இலங்கைச் செய்திகளை வெளியிட்டார்.

1975 ஆம் ஆண்டில் வாஸ் பத்திரிகை ஆசிரியர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அவர் தொடர்ந்து 1988இல் இறக்கும்வரை பத்திரிகைகளில் எழுதி வந்தார். இவரது மனைவியின் பெயர் வேதவல்லி. இவர்களுக்கு 3 பிள்ளைகள். மகன் கே. வி. எஸ். மோகன் 'கதம்பம்' என்ற மாத இதழை வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.