- மண்ணின் குரல் தொகுப்பு. குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாகத் தமிழகத்தில் வெளியானது (1998) -

'மண்ணின் குரல்' என் ஆரம்ப கால நாவல்களின் தொகுப்பு.  குமர்ன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளியானது. இதிலுள்ள நாவல்கள் பெரு நாவல்கள் அல்ல. சிறு நாவல்கள்.  இவற்றில் 'மண்ணின் குரல்' மொன்ரியாலிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானது.  இறுதி அத்தியாயம் வெளி வராமல் , முழுமைபெறாமல் நின்று போனதற்குக் காரணம் சஞ்சிகை  நின்றுபோனதுதான். பின்னர் முழுமையாக்கப்பட்டு , 'புரட்சிப்பாதை'யில் வெளியான கட்டுரைகள், கவிதைகளுடன் ஜனவரி 1987இல் மங்கை பதிப்பக வெளியீடாக  நூலுருப் பெற்றது.  இதனால் கனடாவில் நூலுருவில் வெளியான முதலாவது தமிழ் நாவல் மண்ணின் குரலென்று கூறலாம்.

மண்ணின் குரல் நாவல் இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் வெடித்தெழுந்தபோது  , எவ்விதம் இளைஞர்கள், யுவதிகள் போராட்டத்தில் இணைகின்றார்கள் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறு நாவல்.

- கனடாவில் ஜனவரி 1987இல் வெளியான நூல். அட்டை வடிவமைப்பு - கட்டடக்கலைஞர் பாலேந்திரா.-

'அருச்சுனனின் தேடலின் அகலிகையின் காதலும்', 'வன்னி மண்', 'கணங்களும் குணங்களும்' ஆகியவை 'தாயகம்'(கனடா) பத்திரிகை/சஞ்சிகையில் தொடர்களாக வெளியானவை.  'கணங்களும்  குணங்களும்' போராட்டத்திற்கு முன்னர் நிகழ்ந்ததாகப் பின்னப்பட்ட ஒரு சமூகக் கதை.  இக்கதைகளை வாசிக்கும்போது மண்ணின் குரல், அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும், வன்னி மண் ஆகியவற்றை இந்த ஒழுங்கு முறையில் வாசிக்க வேண்டும். 'மண்ணின் குரல்' போராட்டத்தின் வெடிப்பைக்கூறினால், 'அருச்சுனின் தேடலும் அகலிகையின் காதலும்' அப்போராட்டத்தில் இடம் பெற்ற சகோதரப் படுகொலைகளை மையமாகக் கொண்டது.  சமூக விரோத அழிப்பில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களைப் பற்றி கேள்வி எழுப்புகிறது. 'வன்னி மண்' எவ்விதம் ஆயுதப் போராட்டத்தின்போது உருமாறியது, கொலைக்கலாச்சாரம் உருவானது என்பதைப்பற்றியதொரு நனவிடை தோய்தல்.

இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் உபகண்டப் பிரச்சினையாக 1983 கறுப்பு ஜூலை இனக்கலவரத்தைத் தொடர்ந்து உருமாறியது. ஆயிரக்கணக்கில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கி எழுந்தார்கள். இந்த ஆயுதப்போராட்டம் 2009 மே 18இல் முடிவுக்கு வந்தது. இன்று பதினான்கு ஆண்டுகளைக் கடந்து விட்டன.  

இவை தெளிவான நடையில்  சாதாரண வாசகர்களை மனத்திலிருத்தி  எழுதப்பட்டவை. இந்நாவல்கள் உருவானதற்கு நோக்கங்கள் உள்ளன. அந்நோக்கங்களை மையமாகக்கொண்டு எழுதப்பட்டவை. இந்நாவல்களை இன்று மீண்டும் வாசித்துப்  பார்க்கையில் இவை ஒரு காலகட்ட இலங்கைத்  தமிழர்களின் மனப்போக்குகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவும் கருதலாமென்று எனக்குப் படுகின்றது. இவற்றை நீங்களும் வாசித்துப்பாருங்கள். உங்கள் எண்ணங்கள் எவையாகவிருப்பினும் அறியத்தாருங்கள். இவை தொண்ணூறுகளில் எழுதப்பட்டவை. அக்காலகட்ட என் மனப்போக்குகளையும் இந்நாவல்கள் வெளிப்படுத்தும்.

- வன்னி மண் தொடராகத் தாயகம்(கனடா) சஞ்சிகையில் வெளியானபோது வரையப்பட்டிருந்த ஓவியம். -

இந்நாவல்களைப் பின்வரும் இணைப்புகளில் வாசிக்கலாம்:

1.மண்ணின் குரல் (அத்தியாயம் 1-5)
 மண்ணின் குரல் (அத்தியாயம் 6 - 10) -

2.அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் (1 - 3)
 அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் (4 - 6)
 அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் (7 - 9)
 அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் (10 -12)
அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் (13 - 15)

3. வன்னி மண்  (அத்தியாயம் 1 - 5)
 வன்னி மண்  (அத்தியாயம் 6 - 9)
வன்னி மண்  (அத்தியாயம் 10 -13)
வன்னி மண்  (அத்தியாயம் 14- 18)

- அருச்சுனின் தேடலும் அகலிகையின் காதலும் தொடராகத் தாயகம் பத்திரிகையில் வெளியானபோது வெளியான ஓவியம். வரைந்தவர் கனடா மூர்த்தி. -