இவரை என்னால் மறக்க முடியாது. என் எழுத்துலக வாழ்க்கையில் இவருக்கும் நிச்சயம் ஒரு பங்குண்டு. நான் சிறுகதைகள் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து என் எழுத்துகளை அவதானித்து வந்தவர். என் அம்மாவின் நெருங்கிய சிநேகிதிகளில் ஒருவராகவிருந்தவர். அம்மா யாழ்ப்பாணம் வரும்போதெல்லாம் மறக்காமல் சென்று சந்திக்கும் அவரது சிநேகிதிகள் சிலரில் ஒருவர்.
நான் எழுதிய முதலாவது சிறுகதை நான் யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கையில் சிரித்திரன் சஞ்சிகையில் வெளியான 'சலனங்கள்'. அதிலிருந்து இவர் என் வாசகர்களில் ஒருவராகவே இருந்திருக்கின்றார். இவருக்கு எப்படி நான் அவரது சிநேகிதியின் மகன் என்பது தெரிந்திருக்கும்? அம்மா அவரைச் சந்திக்கையில் கூறியிருந்திருக்க வேண்டும்.
என் எழுத்துகள் ஈழநாடு பத்திரிகையில், ஏனைய பத்திரிகைகளில் வெளியானபோதெல்லாம் வாசித்திருக்கின்றார். என் தங்கைமார் மூவர் யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள். அவர்களிடம் அவ்வப்போது என்னைப்பற்றி, என் எழுத்துலக முயற்சிகளைப்பற்றி விசாரிப்பார். ஊக்குவிக்கும் வகையில் ஆலோசனைகள் கூறுவார்.
அவ்வயதில் மாணவனான எனக்கு அவர் இவ்விதம் என் எழுத்தின்மீது காட்டிய ஆர்வமும், ஊக்குவிப்பும் அவர்பால் பெரு மதிப்பினை ஏற்படுத்தின.
என் கடைசித்தங்கை மருத்துவர் தேவகி படிக்கும் காலத்தில் அடிக்கடி என்னைப்பற்றி விசாரிப்பாராம். என் தங்கையோ தேவையில்லாமல் கதைப்பதைத் தவிர்ப்பவர். அதனால் அவருடன் உரையாடுகையில் 'உன் அம்மா வாயாலை இட்டலி அவிப்பா, நீயென்றால் அதற்கு எதிர்மாறு. உன் வாயிலிருந்து ஒன்றுமே வெளிவராது' என்று செல்லமாகக் கடிந்து கொள்வாராம். இப்பொழுதும் என் தங்கை அதனை நினைவு கூர்வதுண்டு.
இவர்தான் யாழ் இந்து மகளிர் கல்லூரியின் புகழ்பெற்ற அதிபர்களில் ஒருவராக விளங்கிய செல்வி பத்மா ராமநாதன். மாணவிகளால் மிஸ் ராமநாதன் என்று அழைக்கப்பட்டவர். இவரது இறுதிக்காலத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது என் தங்கை அங்கு பணி புரிந்துகொண்டிருந்தார். அடிக்கடி சென்று அவர் உடல் நிலையை விசாரிப்பதுண்டாம்.
ஊக்குவிப்பு எவவிதம் ஒருவரது வளர்ச்சிக்கு உதவுகின்றது என்பதற்கு மிஸ் ராமநாதன் அவர்களின் இவ்விதமான ஊக்குவிக்கும் பண்பே சான்று. நானொ என் எழுத்துலக வாழ்க்கையின் ஆரம்பப்படிக்கட்டுகளிலிருந்தேன். இருந்தும் என் எழுத்தை வாசித்து, அவ்வப்போது ஊக்குவித்த அப்பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. இன்றும் நான் அவரை நினைவு கூர்வதற்கு முக்கிய காரணம் அவரது இப்பண்பே.
* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana )- VNG - [இங்குள்ள ஓவியம் அதிபரின் தெளிவற்ற புகைப்படமொன்றினை ஆதாரமாக வைத்து உருவாக்கப்பட்டது. அவரது முகச்சாயலைப் பிரதிபலிக்கும் சித்திரமே தவிர , 100% அவரைப் புலப்படுத்தும் புகைப்படமல்ல என்பதையும் கவனத்தில் வையுங்கள். பதிவுக்காக ,ஒரு மாதிரியாக, இச்சித்திரம் பாவிக்கப்பட்டுள்ளது.]
முகநூலிம் ஆரோக்கியமான பங்களிப்பு!
- குழந்தைவேலு டீச்சர் -
மேற்படி முகநூற் பதிவு அதிபர் பத்மா இராமநாதனின் மாணவிகள், சக் ஆசிரியைகள் எனப் பலரையும் சென்றடைந்துள்ளது மகிழ்ச்சியளிப்பது. குழ்ந்தைவேலு டீச்சர் (Nallammah Kulanthaivelu) அவர்களையும் இப்பதிவு சென்றடைந்துள்ளது. அவர் உடனடியாக என்னுடன் தொடர்பு கொண்டு அதிபர் பற்றியும், அம்மா (நவரத்தினம் டீச்சர்) பற்றியும், பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
இவர் அம்மாவின் மாணவியாகவிருந்தவர். அம்மாவை நன்கு அறிந்தவர்களில் ஒருவர். யாழ் இந்து மகளிரிக் கல்லூரியின் கனடாக் கிளையினூடு செயற்பட்டு வருபவர். 'மிஸ் இராமநாதன் பற்றியும், என் சகோதரிகள் பற்றியும் (அவர்கள் இவரின் மாண்விகள்) , அம்மாவின் ஏனைய சிநேகிதிகளான சக ஆசிரியைகள் பற்றியும் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவருக்கு என் நன்றி. இது முகநூலின் வலிமையினை எடுத்துக் காட்டுகின்றது. முகநூலின் ஆக்கபூர்வமான பயன்களில் ஒன்றிது. முகநூலுக்கும் என் நன்றி.