- குரு அரவிந்தன்வாயில்லா உயிர்களிடம் காட்டும் நேசம் பற்றிய லதா ராமகிருஷ்ணனின் ‘அன்புக்கு அஸ்வினி’ என்ற பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை அருமையாக இருந்தது. அஸ்வினி அனாதரவாக இருக்கும் அத்தகைய உயிர்களிடம் காட்டும் அன்பு நிச்சயம் போற்றப்பட வேண்டியது. இது போன்று வாயில்லா உயிர்களிடம் அன்பு காட்டும் பலர் பல்வேறு நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். சமீபத்தில் கூட அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் கொழும்பிலே ஓய்வு பெற்ற ஒருவர் தெரு நாய்களுக்குத் தினமும் உணவு ஊட்டுவதாகவும், அவரைத் தான் சந்தித்து உரையாடியதாகவும் ஜேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி என்ற இதழில் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். தாயின் பாசத்திற்கு அடுத்தபடியாக, வாயில்லா உயிர்களிடம் வைக்கும் அன்பு தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு என நான் நினைக்கின்றேன்.

‘ஏழைமக்களைப் போலவே அவையும் அனாதரவானவை. பாதுகாப்பற்றவை. அலட்சியப்படுத்தப்படுபவை, புறக்கணிக்கப்படுபவை. ஆனால், பரந்து விரிந்த இந்த உலகில் மனிதர்களைப் போலவே அவற்றுக்கும் வாழ உரிமை உண்டு என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்ற அஸ்வினியின் குரல் எங்கும் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும். கனடாவில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு இத்தகைய பாதுகாப்புக்கள் ஓரளவு இருப்பதாகவே நான் நம்புகின்றேன். சமீபத்தில் தாயகம் சென்ற போது வீதி ஓரத்தில் ஒற்றைக் கால் இழந்த பசு ஒன்றைக் கண்டேன். கண்ணி வெடியில் சிக்கிய அந்தப் பசு யுத்தத்தின் கொடுமையின் காட்சிப் பொருளாய் நின்ற போது கண் கலங்கி விட்டேன். நடக்க முடியாத அந்தப் பசுவின் காலுக்குப் பனை மட்டையில் அளவாக ஒரு துண்டு ஒன்றை வெட்டிக் கட்டி விட்டிருந்தார்கள். மெல்ல மெல்ல நொண்டிக் கொண்டே நடந்து புல் மேய்ந்த அந்தப் பசு ஆளரவம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்து ‘ம்...மா’ என்று குரல் கொடுத்த போது நான் உறைந்து போனேன். கசாப்புக் கடையில் தள்ளிவிடாமல் அதை வைத்துக் காப்பாற்றும் அந்த ஏழை விவசாயியைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும் போன்ற மன நிலையில் அப்போது நான் இருந்தேன். இப்படி யுத்தம் தின்ற எச்சங்களை அந்த மண்ணிலே நிறையவே அங்கே காண முடிந்தது. மனிதன் செய்த தவறுக்காக வாயில்லா அப்பாவி உயிர்கள் பழி வாங்கப் பட்டிருப்தை நினைக்க வேதனையாக இருந்தது. யுத்த காலத்தில் இதுபோலப் பல கால்நடைகள் குண்டு வீச்சில் இறந்ததாகச் சொன்னார்கள். இயந்திர மயமான இந்த உலகத்திலே, மனித நேயம் என்ற வார்த்தைக்கு நிஜ உருவம் தந்தவர்கள் கருணை உள்ளம் கொண்ட அஸ்வினி போன்றவர்கள்தான் என்பதில் ஐயமே இல்லை. புரிந்துணர்வோடு செயலாற்றும் அவரையும், அவரைப் போன்ற கருணை உள்ளம் கொண்டவர்களின் சேவையையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.