- மோகன் அருளானந்தம் -

- தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் மோகன் அருளானந்தம் (இவர் மட்டுநகரைச் சேர்ந்தவர். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் என்னுடன் கட்டடக்கலை பயின்ற சக மாணவர்களிலொருவர். அவர் தன்னுடைய 83 ஜூலைக் கலவர நினைவுகளை அவரது வலைப்பதிவான 'Closetoheartweb'இல்  ஆங்கிலத்தில் The Journey Begins என்னும் தலைப்பில் பதிவு செய்துள்ளார்.  அதனை எனக்கும் அனுப்பியிருந்தார். அதன் தமிழ் வடிவமிது. 'தீயில் பூத்த மலர்' என்னும் தலைப்பில் வெளிவருகின்றது.  தமிழில் பதிவு செய்வதன் மூலம் பலர் அறிய வாய்ப்புள்ளதால் தமிழாக்கம் செய்துள்ளேன். இதற்கான ஓவியத்தினை வரைந்திருப்பவர் கிறிஸ்ரி நல்லரட்ணம். - வ,ந.கி -


அது ஒரு சனிக்கிழமை. 23 ஜூலை 1983. பத்திரிகைகள் பின்வரும் செய்தியினை வெளியிட்டிருந்தன: "வட மாகாணத்தில் 13 இராணுவத்தினர் மறைந்திருந்து தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டனர். உடல்கள் திங்கட்கிழமை கொழும்புக்குக்கொண்டு வரப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. "

இந்தத் தலைப்புச் செய்தி முப்பது வருடங்கள் நீடிக்கப்போகின்ற சமூக யுத்தமொன்றை உருவாக்கும் விதையொன்றினை விதைத்துள்ளது என்பது பற்றி நாங்கள் எவ்விதம் கருத்தையும் அச்சமயம் கொண்டிருக்கவில்லை. இந்தத் தனிச் சம்பவம் எங்கள் அனைவரின் வாழ்க்கையையும் கடுமையாக  மாற்றப்போகின்றது என்பதை நாம் உணர்ந்திருக்கவில்லை.

வழக்கமாக உயிர்த்துடிப்புடன் விளங்கும் எம் அயலில் கனத்த அமைதி குடிகொண்டிருந்தது.  என்னாலும், மனைவியாலும் நித்திரைகொள்ளக்கூட முடியவில்லை.  நாங்கள் அனைவரும் விளிம்பில் இருப்பதுபோன்ற நிலையற்ற சக்தி அல்லது உணர்வு  காற்றில் பரவிக்கிடந்தது.  ஏதோவொன்று சரியில்லையென்பதை எங்களால் உணரமுடிந்தது. ஆனால் அடுத்த நாள் நாங்கள் விழித்தெழுந்தபோது வழக்கமான ஆரவாரம் எங்கள் வீதியில் மீண்டிருந்தது. எல்லாமே வழமைக்குத் திரும்பியதைப்போல் தெரிந்தது. வழக்கம்போல் நானும் வேலைக்குச் செல்வதற்கு ஆயத்தமாகிப் புறப்பட்டேன். ஆனால் என் மனைவி முதல் நாள் செய்தி ஏற்படுத்திய பாதிப்பு நீங்காத  நிலையில் வேலைக்கு விடுமுறையெடுத்திருந்தார்.

நான் பஸ் தரிப்பிடத்துக்கு நடந்து சென்றேன். வழக்கம்போல் நான் செல்லும் பஸ்ஸில் 12 கிலோ மீற்றர் தூரம் பயணித்து காரியாலயம் சென்றேன். ஜன்னலூடு வீதியைப் பார்த்தவாறு பயணித்தேன். பிரச்சினையெதுவும் , அத்துடன் வழமைக்கு மாறான எதுவும் தென்படவில்லை. எல்லாமே வழமையைபோல்தானிருந்தன.  எல்லாமே இன்னும் வழமையாகத்தானுள்ளனவா? அல்லது அமைதிக்கு முன்வரும் புயலா இது?

அப்பொழுது நான் உதவிக்கட்டடக்கலைஞராக உள்ளூராட்சி அமைச்சின் கீழ் , கொழும்பிலிருந்த  கட்டடத்திணைக்களத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். நான் கட்டடடத்தினூடு நடந்து சென்று எனது காரியாலய இருப்பிடத்தில் நுழைந்தேன்.  அப்பொழுது நான் ஒருவித அமைதியற்ற மனநிலை பெருகும் நிலையிலிருந்தேன்.  என் சக பணியாளர்கள் அனைவரும் என்னை நோக்குவதை உணர்ந்தேன்.

"உனக்கென்ன பைத்தியமா?: என்னுடன் பணியாற்றும் பணியாளர்களிலொருவன் கத்தினான்.

"ஏன் இன்று வேலைக்கு வந்தாய்?"

"ஜன்னலூடு பார்" இன்னுமொரு நண்பன் கூறினான்.

நான் என்னுடைய மேசையிலிருந்து ஜன்னல் பக்கம் திரும்பினேன். அருகிருந்த இரு மாடிக்கட்டடமொன்றிலிருந்து அடர்ந்த கரும்புகை எழும்புவதை அவதானித்தேன். இது நிச்சயமாக வழமையானதல்ல.

நான் உணர்ந்தேன் அவர்கள் சரியென்பதை. நான் பஸ்ஸில் வேலைக்கு வந்திருக்கக் கூடாது. நான் நிலைமையின் வீரியத்தினை உணர்ந்திருக்கவில்லை. அத்துடன் ஓரிவுக்குள் இவ்வளவு கடுமையாக நிலை மாறுமென்பதை பகுத்துணர்ந்திருக்கவில்லை.  இனியும் வழமையான வாழ்வினை வாழுவது பாதுகாப்பானதல்ல. ஆனால் இப்போது நான் என்ன செய்வது?

நான் அதிக நேரம் எடுக்கத்தேவையிருக்கவில்லை.  என் பணியிட நண்பர்கள் என்னை கதிரையிலிருந்து இழுத்து வீதிக்கு வந்தார்கள், நாம் வெளியில் வந்தபோது என் இருப்பிடம் நோக்கிச் செல்லும் பஸ் புறப்படத்தொடங்கியிருந்தது. நாம் அனைவரும் பஸ்ஸின் பின் நம்பிக்கை சிதைந்த நிலையில் ஓடினோம். பஸ்ஸைப்பிடித்தபோது நான் ஜன்னல் கண்ணாடி சிதைந்திருப்பதை அதிர்ச்சியுடன் அவதானித்தேன். எனக்குத் தயங்குவதற்கு நேரமில்லை.  பஸ் வேகத்தை எடுப்பதற்கு முன் என் நண்பர்கள் என்னை பஸ்ஸினுள் தள்ளி விட்டார்கள்.

அது ஒரு 12 கிலோ மீற்றர் வீட்டிற்கான மீள்பயணம். வழமையாக அப்பயணம் அரை மணித்தியாலம் எடுக்கும், அன்று மூன்று மணித்தியாலம் எடுத்தது.

வீதியெங்கும் கூட்டமாக வீதியை மறித்தபடி, பெற்றோல் சேகரித்தபடி, கடைகளை எரிப்பதற்காகவும், கொள்ளையடிப்பதற்காகவும் , கலவரம் செய்வதற்காகவும் அக்கூட்டத்தினர் நின்றனர். அது ஒரு பயங்கரமான காட்சி. மனத்தைப் பாதித்த மூன்று மணி நேர வீட்டுக்கான பயணம் அது. காயப்பட்டவர்கள் பலரிருந்தனர். சிலர் இரத்தத்தால் நனைந்திருந்தனர். சிலர் உதவிக்காக அலறிக்கொண்டிருந்தனர்.

நான் வீடு திரும்பியதுபோது சாட்சியாகக் கண்டது என் வாழ்க்கையை முழுதாக மாற்றி விட்டது. இன்றுவரை என் கனவுகளிலது வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. என் ஆத்மாவின் நிரந்தர வடு அது.

நான் என் 'அபார்ட்மென்ட்'டுக்குத் திரும்பியபோது கதவினை உட்புறமாகத் தாளிட்டேன். மனைவியின் நிலையினை அறிய முனைந்தேன்.  அப்பொழுது வீட்டிலும் பாதுகாப்பில்லை என்றுணர்ந்தேன். அப்பொது ஒரு கும்பல் எங்கள் வீதியை நோக்கி வந்துகொண்டிருந்தது. அவர்களிடம் எரியும் தீப்பந்தங்கள், கத்திகள் மற்றும் கோடரிகளிருந்தன. நாம் இதிலிருந்து தப்புவதற்கு ஒரு வழியேதுமில்லை.  ஆனால் நாம் தப்பினோம். எங்கள் அயலவரான யுவதியொருவருக்கு இதற்காக நன்றி கூறவேண்டும்.


83 ஜூலைக் கலவர நினைவுகள்: பயணம் தொடங்கியது (2)

35 வருடங்களுக்குப் பின்னர்..

35 வருடங்களாக நாங்கள் ஶ்ரீலங்கா திரும்பவில்லை.

நாங்கள் இனக்கலவரத்தையடுத்து மிகவும் விரைவாகவே டென்மார்க் செல்வதற்காக ஶ்ரீலங்காவை விட்டு நீங்கினோம். நாங்கள் டென்மார்க்கில் ஐந்து வருடங்களிருந்தோம்.  அந்நாட்டு மொழியினைக் கற்றோம்; வேலை பார்த்தோம்; நெருங்கிய

நண்பர்களைச் சம்பாதித்துக்கொண்டோம்.

செப்டெம்பர் 1991இல் நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு, அங்கு ஏற்கனவே நிலைகொண்டிருந்த நெருங்கிய உறவினர்கள் , நண்பர்களுக்கருகில்  வாழ்வதற்காக , குடிபுகுந்தோம்.  நாங்கள் மெல்பேர்னில் எம்மிருப்பிடத்தை அமைத்துக்கொண்டோம், ஆனால் நாங்கள் எப்பொழுதும் அழகிய ஶ்ரீலங்காவில் வளர்ந்த எம் வாழ்க்கையை அன்புடன் நினைவு கூர்வோம், 35 வருடங்களுக்குப் பின்னர் என் மனைவியும் நானும்  எம் பால்ய கால நினைவுகளையும் பிறப்பையும் உள்ளடக்கிய எங்கள் இடத்துக்குச் செல்வதற்கான சரியான தருணம் அதுவேயென்று  என்று முடிவு செய்தோம்.

ஏப்ரில் 2017இல் நாங்கள் எங்களது முதலாவது ஶ்ரீலங்காப் பயணத்தை , 35 வருடங்களுக்குப் பின்னர் மேற்கொண்டோம். ஶ்ரீலங்கா வேறானதாகவிருந்தது. வீதிகள் மிகுந்த பரபரப்பாகவிருந்தன.  கடற்கரைகள் உல்லாசப்பயணிகளுடன் பரபரப்பாகவிருந்தன. அத்துடன்  நாங்கள் நினைவு கூர்ந்தபடி மக்கள் ஓய்வானதாக . நிம்மதியாக இருக்கவில்லை. காலமும் , போரும் பல விடயங்களை மாற்றி விட்டிருந்தன.

வானுயர்ந்த கட்டங்கள் வெப்பமண்டலச் சூரியனில் சுடர்ந்துகொண்டிருந்தன.

நாம் வசித்த அடுக்குமாடி இல்லம் 2017இல் பல வருடங்களாகக் கைவிடப்பட்டிருந்த நிலையில் பாழடைந்திருந்தது.

நாங்கள் 1983 சமூக யுத்தத்தின்போது வசித்த அடுக்குமாடி இல்லத்துக்குச் சென்றோம். அப்பொழுது நாங்கள் துடிப்பும் , கலகலப்பும் நிறைந்த வீதியில் வசித்தோம்.  நாங்கள் எங்கள் அயலவர்கள் அனைவருடனும் , எங்கள் அயலில் வசித்த சிங்களக் குடும்பமுட்பட , நெருங்கிய நட்பினை உருவாக்கியிருந்தோம். ஒரிளம் பெண் அவளது பெற்றோருடன் அந்த அயல் வீட்டில் வசித்து வந்தாள்.  அவளுக்கு அப்பொழுது 15 வயதிருக்கக் கூடும்.  நாங்கள் நாம் வசித்த வீதியானது அநேகமாகக் கைவிடப்பட்டு , பாழடைந்து காணப்பட்டது.


23 ஜூலை 1983 மீண்டும் அந்த அடுக்குமாடி இல்லத்தில்...

ஜூலை 23 , 1983 அன்று வன்முறை எம் வீட்டு வாசற்படிக்கே வந்து விட்டது. நான் பாதுகாப்பாக வேலையிலிருந்து வீடு திரும்பியிருந்தேன, ஆனால் அங்கே ஆயுதந்தரித்த மனிதர்கள் கொள்ளையிட்டும், எரியூட்டிக்கொண்டும்,  கொலைசெய்துகொண்டும்கூட இருந்தார்கள். இப்பொழுது எம் வீதியை நோக்கித்திரும்பி வந்துகொண்டிருந்தார்கள்.  அவர்கள் ஓவ்வொரு வீடாக அணிவகுத்துச் சென்று , அங்கிருக்கும் தமிழர்களைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கோரினார்கள்.  அவர்கள் வருகிறார்கள் என்பதை நாம் அறிந்திருந்தோம். அத்துடன் இறுதியில் குழுவொன்று எமது வீதிக்கும் வந்தது. எம்மை அவர்களிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கையிட்டது.

நாங்கள் பீதியடைந்திருந்தோம்; பயந்திருந்தோம்.  என்ன செய்வதென்றே எமக்குத் தெரியவில்லை.

ஆனால் அதன் பிறகு யாருமே எதிர்பார்த்திராததொன்று அங்கு நிகழ்ந்தது.  எம் அயலில் வசித்த இளம்பெண் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தாள்.  எங்களைத்தன்னைப் பின் தொடர்ந்து அவளது வீட்டுக்கு வருமாறு வலியுறுத்தினாள்.  எம்மை அவள் சிறியதொரு அறையினுள் மறைத்து வைத்தாள்.  தனக்குப்பின் அறைக்கதவை மூடினாள். நாம்  தொலைவிலிருந்து , யன்னலினூடு அவள்  துணிவுடன்  எங்கள் வீதியில் குழுமியிருந்த குழுவின் முன் செல்வதைப்பார்த்தோம். அத்துடன் அவள் " அவர்களை நோக்கி "அவர்களை நீங்கள் பெற வேண்டுமென்றால் முதலில் நீங்கள் என்னைக் கொல்ல வேண்டும்" என்று கத்தினாள்.

அவளது துணிச்சல்  எம்மைத் திகைக்க வைத்தது.

அந்தக் குழு அமைதியாகவிருந்தது.  அவளது சொற்கள்  அவர்கள் காவிக்கொண்டிருந்த கத்திகளை விடக் கூர்மையானவையாகவிருந்தன.

அவளது துணிச்சல்  அவர்கள் வைத்திருந்த தீப்பந்தங்களைவிடப் பிரகாசத்துடன் எரிந்தது.

அவளது ஆளுமையிலுள்ள வலிமையானது அந்தக் குழுவிலுள்ள அனைவரினதும் உடலுறுதியை விடவும் வலிமையானதாகவிருந்தது. ஏமாற்றத்துடன் முணுமுணுத்தபடி திரும்புவதைத்தவிர அவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை.


ஏப்ரில் 2017 ஶ்ரீலங்காவுக்கு மீண்டுமொரு பயணம்!

நாங்கள் 2017 இல் மீண்டும் ஶ்ரீலங்காவுக்குப் பயணித்தபொழுது ,  நாங்கள் எங்களைக் காப்பாற்றிய அந்த இளம் பெண்ணை எப்படியாவது கண்டு பிடிப்பது என்பதில் உறுதியுடனிருந்தோம்.  எங்கள் பயணம் நாங்கள் வசித்த பழைய 'அபார்ட்மெண்ட்'க்குச்
செல்வதில் தொடங்கியது, ஆனால் அதிகமான எமது முன்னாள் அயலவர்கள் இடம் பெயர்ந்து விட்டிருந்தார்கள்.  நாம் இறுதியில் கொழும்பில் வசிக்கும் எமது மைத்துனர் ஒருவர் உதவி மூலம் துப்பொன்றைப்பெற்றோம். அவர் அந்த இளம் பெண்ணையும், அந்தப் பெண்ணின் குடும்பத்தையும் நினைவில் வைத்திருந்தார். அத்துடன் அந்த இளம் பெண்ணின் தொலைபேசி இலக்கத்தையும் தேடிப்பிடித்துத் தந்தார். அந்த இளம் பெண் ஶ்ரீலங்காவிலிருந்து கனடாவுக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதையும் அறிந்தோம்.

பல நிகழ்வுகளை உள்ளடக்கிய உணர்ச்சிகரமான ஶ்ரீலங்காவுக்கான பயணத்தின் பின்பு நாம் மெல்பேர்னுக்குத்  திரும்பினோம். திரும்பியதும் நாம் அந்த இளம் பெண்ணைத் தொலைபேசியில் அழைத்தோம்.

நாங்கள் எம் மீட்பரின் குரலை, முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தொலைபேசி வழியாகக் கேட்டோம்.

நாங்கள் நீண்ட நேரமாக கடந்த காலத்தைப்பற்றி, கடந்த முப்பத்தைந்து வருடங்களாக சம்பவித்த அனைத்தைப்பற்றியும் உரையாடினோம்.  அவர் திருமணமாகி வான்கூவரில் வசித்துக்கொண்டிருந்தார். அத்துடன் இளங்குழந்தையொன்றின் தாயாகவுமிருந்தார். அவர் எம்மைக் காப்பாற்றிய அந்த நாள் நிகழ்வுகளை நாம் ஞாபகத்தில் வைத்திருப்பதைப்போல் தெளிவாக விபரித்தார்.

- எனது மீட்பரும் , அவருடைய கணவரும் என் வளர்ப்பு நாயுடன் மெல்பேர்ன், ஆஸ்திரேலியாவில் -

- எனது மீட்பரும் , அவருடைய கணவரும் என் வளர்ப்பு நாயுடன் மெல்பேர்ன், ஆஸ்திரேலியாவில் -

சில மாதங்களின்  பின்னர், ஜூலை 2017இல்  அவர் தன் கணவருடன் நாம் வசிக்கும் மெல்பேர்னுக்கு விஜயம் செய்தார்.  எமக்கு வாழ்வதற்கு இரண்டாவது சந்தர்ப்பமொன்றினைத் தந்த ஒருவருடனான , மறக்க முடியாத  மீளிணைவு அது.

போரின் அழிவுகளுக்குள், பல துணிகரமான, வீரம் மிகுந்த, தைரியம் மிகுந்த, இரக்கம் மிகுந்த இது போன்ற பல நிகழ்வுகளுள்ளன என்பதை நான் நம்புகின்றேன். போர்க்காலத்தில் நம்பிக்கை மற்றும் மனித நேயத்தின் குறியீடாகவே எனது அனுபவத்தை நான் பகிர்ந்துகொள்கின்றேன்.

முற்றும்


* ஓவியம் : கிறிஸ்டி நல்லரட்ணம்