உலகிலேயே கல்வியைக் கலைமகளாக வணங்கும் இனம் நம் தமிழினம். கல்விக்கு மிக முக்கியமான இடத்தை நம் முன்னோர்கள் வழங்கியிருந்தார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்குக் கல்வியும் விதிவிலக்கல்ல. கல்விமுறையில் காலந்தோறும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும் தற்போதைய பெருந்தொற்றுக் காலத்தில் இணையவழியில் கற்பிக்கப்படும் கல்வி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க இயலாது.அது இளம்தலைமுறைக்கு வரமா? சாபமா? என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

கல்வி குறித்த ஆன்றோர்களின் கருத்துகள்

எண்ணையும் எழுத்தையும் கண் என்று கூறினார் வள்ளுவர். பிச்சை புகினும் கற்கை நன்றே என்றும் எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்றும் விளம்பியது வெற்றிவேற்கை. இவ்வாறு நம் சான்றோர்கள் கல்விக்கு மிக முக்கியமான இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

காலந்தோறும் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள்
ஆதியில் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்த மனிதன் அந்த இயற்கையிலிருந்தே அனைத்தையும் கற்றுக் கொண்டான்.அவ்வகையில் மனிதனின் முதல் ஆசானாக இயற்கையே விளங்கியது என்றால் அது மிகையல்ல.மனித இனம் சமூகமாக இணைந்து வாழ்ந்த போது தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள எண்,எழுத்து போன்ற குறியீடுகள் தேவைப்பட்டன.இதுவே கல்வியின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கியது எனலாம்.

குருகுலக் கல்வி
கால ஓட்டத்தில் ஒரு குருவைத் தேடிச் சென்று வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளும் குருகுலக் கல்விமுறை தோன்றியது.அக்கல்விமுறை மிகச் சிறந்தது என்றாலும் அது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே உரியது என்ற சூழலும் ஏற்பட்டது.

ஆங்கிலேயர் வருகையால் ஏற்பட்ட மாற்றம்
இயற்கை அறிவாலும் தன் முன்னோர்களின் வழிகாட்டலினாலும் ஆயக்கலைகள் பலவற்றை நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர்.ஆனால் இந்த சூழல் ஆங்கிலேயர் ஆட்சியில் 1835 ஆம் ஆண்டு மெக்காலே கல்விமுறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது முற்றிலும் மாறிப்போனது.இக்கல்விமுறை குறித்து எதிர்மறைக் கருத்துகள் இருந்தாலும் அக்கல்விமுறைதான் இன்று வரை நம் இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது.

கல்விநிலையங்களில் நேரடியாகச் சென்று கற்கும் கல்விமுறை

திண்ணைக் கல்வி என்ற சூழ்நிலை மாறி அனைத்துப் பிரிவு மக்களும் சாதி மத வேறுபாடின்றி ஒரே இடத்தில் ஒன்றாக அம்ர்ந்து சகோதரத்துவத்துடன் ஆசிரியர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் கல்வி கற்கும் ஒரு சூழல் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஏற்பட்டு வருகிறது.இக்கல்வி முறையிலும் சில பல குறை நிறை இருந்தாலும் சாதி, மதம்,இனம் என்ற வேறுபாடுகள் மறைந்து அனைவரும் சமத்துவத்துடன் பழக இக்கல்விமுறை மிகப்பெரும் உதவியாக இருக்கிறது.

பெருந்தொற்றுச் சூழலும் இணையவழிக் கல்வியும்
மேலை நாடுகளில் இணையவழிக் கல்வி என்பது பரவலான ஒன்று.ஆனால் நம் நாட்டில் தற்போது தான் இணையவழியில் அனைவரும் அவர்களின் வீடுகளில் இருந்தே கற்கும் புதுமையான முறை வந்தது எனலாம்.

இணையவழிக்கற்றலின் நன்மைகள்
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள் அது உண்மைதான்.ஏனெனில் இதுவரை ஏட்டளவில் மாணவர்கள் கற்று புரிந்தும் புரியாமலும் இருந்த பாடங்களைக் காட்சி வடிவில் காண இணையவழிக் கல்வி உதவுகிறது.எந்த ஒரு செய்தியையுமே காட்சி வடிவில் காணும் போது மாணவர்கள் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவதோடு அவர்கள் ஆக்கப் பூர்வமாகச் சிந்திக்கவும் முடிகிறது.

நேரடிக் கல்விமுறையில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் ஒரு நாளின் பெரும்பகுதி நேரத்தைக் கல்விக்கூடங்களிலேயே கழிக்க வேண்டியிருந்தது.ஆனால் இணைய வழியில் கற்கும் போது அவர்கள் கற்றல் நேரம் போக மீதமிருக்கும் நேரங்களில் பல நன்மைதரக்கூடிய ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு தங்கள் அறிவாற்றலையும் உடல் ஆற்றலையும் பெருக்கிக் கொள்ள ஏதுவாக அமைகின்றது.நேரடிக் கல்விமுறையில் கல்விக்காக ஆசிரியர்களைப் பெரிதும் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.வீட்டிலிருந்து இணையவழியில் கற்கும் போது பெற்றோர்களின் நேரடியானக கவனிப்பிலும் கண்காணிப்பிலும் மாணவர்கள் வருகின்றனர்.

தீமைகள்
மேலைநாடுகளில் இணையவசதி கிடைப்பது மிகவும் எளிது.ஆனால் வளர்ந்து வரும் நம் நாட்டில் பெரும்பாலானோர் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தான்.அவர்களால் இணையத்தைப் பயன்படுத்த நவீனக் கைபேசிகளையும் மடிகணினிகளையும் அதிக விலை கொடுத்து வாங்க இயலாது.மேலும் இணைய இணைப்பிற்கென மாதம் மாதம் கணிசமான தொகையைச் செலவழிப்பதும் கடினமாகும்.அரசு இணைய வசதியை இலவசமாக வழங்க ஆவன செய்தால் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும்.

குழந்தைகள் முதல் இளம்வயதினர் வரை இணையவழிக் கல்வியினால் நீண்ட நேரம் தொடர்ந்து கணினித் திரையையும் கைபேசித்திரையையும் பார்த்துக் கொண்டிருப்பதால் பார்வைத்திறன் உட்பட பல உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும்.அது நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்களுக்கு நல்லதல்ல.

குழந்தைகள் முதல் இளம்பருவத்தினர் வரை அதிக நேரம் இணையத்தைப் பயன்படுத்துவதால் அதைக் கண்காணிக்க இயலாமல் அவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு அதிகமாக உள்ளது.

வரமா? சாபமா?
அறிவியல் சாதனங்கள் மனிதர்களின் வசதிக்காகத் தான் உண்டாக்கப்பட்டது. அதைச் சரியாகப் பயன்படுத்தினால் அது வரம்.தவறாகப் பயன்படுத்தினால் அதுவே நமக்குச் சாபமாக மாறிவிடுகிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.