https://www.youtube.com/watch?v=nRs37ilE3gE

எத்தனையோ திரையரங்குகளில் எத்தனையோ திரைப்படங்களைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் எத்தனைபேருக்கு அத்திரையரங்க உரிமையாளர்களைத் தெரிந்திருக்கும்? ஆனால் இவரை இலங்கைத் தமிழ் மக்கள் பலரும் அறிந்திருந்தார்கள். அவர்தான் யாழ் ராஜா திரையரங்க உரிமையாளர் எஸ்.டி.தியாகராஜா (STR).

இவரைப்பற்றி நான் முதன் முதலில் அறிந்துகொண்டது யாழ் ராஜாவில் 'காவல்காரன்' திரைப்படக் 'கட் அவுட்'டைப்பார்த்தபோது. எம்ஜிஆரின் திரைப்படங்கள் இவருக்கு மிகவும் வசூலை வாரிக்குவித்தன. காவல்காரன் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. எம்ஜிஆரின் நூறாவது திரைப்படமான 'ஒளி விளக்கு' முதலாவது முறையாகத் திரையிட்டபோது 150 நாட்களைக் கடந்து ஓடியது. மீண்டும் திரையிட்டபோதும் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. ராஜா திரையரங்கில் காவல்காரன் வெற்றி விழாப் புகைப்படங்கள், கட் அவுட் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அங்கு எந்தத் திரைப்படம் பார்க்கச் சென்றாலும் அவற்றைப் பார்க்காமலிருந்ததில்லை. ராஜா திரையரங்கு இன்னுமொரு விடயத்துக்காகவும் எம் நினைவிலிருக்கும். இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் பதிவு செய்யப்பட்டிருக்கும். யாழ் ராஜா திரையரங்குக்கும் அருகிலிருந்த ஒழுங்கை , கே.கே.எஸ் வீதி வரை செல்லும் வீதி, அவ்வீதியில்தான் எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களின் மல்லிகை காரியாலயம் அமைந்திருந்தது. அக்காரியாலயத்தைக் குறிப்பிடுகையில் ராஜா தியேட்டரையொட்டிச் செல்லும் ஒழுங்கையில் அமைந்திருந்தது என்பதைக் குறிப்பிட யாரும் மறந்ததில்லை.

யாழ் ராஜா திரையரங்க உரிமையாளரும் . இலங்கைத்தமிழ் மக்கள் மத்தியில் எஸ்.டி.ஆர் (STR) என்றறியப்பட்டவருமான எஸ்.தியாகராஜாவின் மறைவுச் செய்தியினை முகநூலில் அறிந்தபோது பழைய நினைவுகள் பல சிறகடித்தன. அவர் பற்றிய அஞ்சலிக் காணொளியிது: 

https://www.youtube.com/watch?v=nRs37ilE3gE