- எழுத்தாளர் சேசாத்திரி ஶ்ரீதரன் அவர்கள் மனுஸ்மிருதி பற்றிய தனது கருத்துகளை இக்கட்டுரையில் எழுதியுள்ளார். இது பற்றிய உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். - பதிவுகள்.காம் -


மனுநூல் ஒரு நாட்டின் அல்லது நிருவாகத்தின் சட்டம் போன்றது அல்ல.  அது தனிநபர் ஒழுக்கத்திற்கான இயமம், நியமம் (dos and dont's) போன்ற ஒழுக்க விதியை உரைப்பதே ஆகும். இது 12 அத்தியாயங்களில் 2,685 பாக்களாக உள்ளது. பிரம்மச்சரியம், கிருஹஸ்தாசிரமம், வானப்ரஸ்தம், சந்நியாசம் ஆகிய வாழ்வின் நால்வகை கூறுகளை எப்படி கடக்க வேண்டும் என்று விவரிக்கிறது. நால் வருணத்தார்க்கும் தனித்தனியாக உள்ள நடக்கை விதிகள் பற்றி விவரிக்கிறது.

நூலின் காலம்: எந்த ஒரு நூலுக்கும் காலக் கணிப்பு செய்வது மூக்கணாங் கயிறு போடுவது போன்றதாகும். அதை முன்பு மத நோக்கில் தப்பும் தவறுமாக செய்ததால் இன்று இந்நூல் குறித்து பல சச்சரவுகளுக்கு வழிவகுத்துள்ளது. இனி மனுநூலின் காலம் குறித்து ஆய்வோம். வேதங்கள் இருக்கு, யசுர், அதர்வணம் என மூன்றே ஆகும். இம்மூன்று வேதங்களின் கலவையாகவே சாம வேதம் நான்காவதாக பிற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டது. இதை செய்தவர் சைமினி மகரிஷி. சாம வேதம் குறித்து இந்நூல் குறிப்பிடுவதால் இந்நூல் சைமினிக்கு பிற்பட்ட காலத்தில் தான் எழுந்திருக்க வேண்டும். புராணம், ஆரண்யம், உபநிடதம், வேதாந்தம்- மீமாம்சம் பற்றி இந்நூல் ஆங்காங்கே கூறுவதால் பாகவதம் இயற்றிய வாதராயண வியாசர், அவரது மாணாக்கர் சைமினி ஆகியோர் காலத்திற்கு கி.பி. 550-650 பிற்பட்டது இந்நூல் எனத் தெரிகிறது. அதன்படி இதை கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 8 ஆம் நூற்றாண்டு முற்பகுதி நூல் எனக் கொள்வதில் தவறில்லை. வியாசரின் புராண தெய்வங்களுக்கு நான்கு கைகள் உண்டு ஆனால் குப்தர் கால தெய்வச் சிலைகளில் இரண்டு கைகள் மட்டுமே உண்டு என்பதால் வியாசரின் காலம் கி. பி. 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனக் கொள்ளப்படுகிறது. புராணங்களை எழுதிய வாதராயண வியாசர் அதில் திருப்தி கொள்ளாமல் தான் ஆரண்யங்களை இயற்றினார் என்பது பொதுக் கருத்து. அவரது மாணாக்கர்கள் தான் உபநிடதங்களை உருவாக்கினர். இந்த புராணம், ஆரண்யம், உபநிடதம், வேதாந்தம் பற்றிய குறிப்பு இந்நூலின் காலக் கணிப்பிற்கு பெரிதும் உதவுகின்றன.

இந்நூலில் சரசுவதி, யமன் தவிர்த்து சிவன், விஷ்ணு, முருகன், கணபதி போன்ற பிற புராண தெய்வங்கள், அவற்றின் கோவில்கள் பற்றி எந்த குறிப்பும் இந்நூலில் இல்லை என்பது விந்தை தான். எனினும் இதில் வேத தெய்வங்களே அதிகமாக குறிக்கப்படுகின்றன. புராண தெய்வங்கள் பற்றி எந்த குறிப்பும் இதில் இல்லை என்பது அவை வழிப்பாட்டுத் தெய்வமாவதற்கு ஆழ்வார், நாயன்மார்கள் தொடங்கியது போன்ற பக்தி இயக்கம் ஏதும் 7 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்படவில்லை என்று உணர முடிகிறது.

சாதிக்கு ஒரு நீதி சொல்வது உயர்வு, தாழ்வு பாகுபாடு சொல்வது மனுநீதி நூல். அது ஒரு அநீதி நூல் என்பது பொதுவான குற்றச்சாட்டு. அப்படி சொல்வதற்கான கருத்துகளை இந்நூலில் காணமுடிகிறது. இந்நூல் வேதத்தையே மையமாகக் கொண்டது, வேதத்தையே முன்னிலைப்படுத்துகிறது. அதை கற்கவேண்டிய பிராமணருக்கு கடுமையான ஒழுக்க நெறிகளை வைக்கிறது. அதே போல் சத்திரியருக்கும் வணிகருக்கும் ஒழுக்க நெறிகளை வைக்கிறது. பிராமணனுக்கு வேதக் கல்வியின் பொருட்டே வேத வினை சடங்கின் பொருட்டே மற்றவரை விட அதிக சலுகைகளை, விலக்குகளை அல்லது சிறப்பிடத்தை இந்நூல் முன்மொழிகிறது. அதற்கு அடுத்ததாக சத்திரியர்களுக்கு வைசியரை விட சூத்திரரை விட அதிக சலுகைகளை, விலக்குகளை அல்லது சிறப்பிடத்தை இந்நூல் முன்மொழிகிறது. வைசியருக்கு சூத்திரரை விட அதிக சலுகைகளை, விலக்குகளை அல்லது சிறப்பிடத்தை இந்நூல் முன்மொழிகிறது. ஏனெனில் வைசியர் தாம் உணவுப் பொருளையும் பிற பொருளையும் ஆக்குவிக்கிறார்கள், உலகப் பொருளியல் சுழற்சியை முன்னெடுக்கிறார்கள் என்பதற்கே இந்த சலுகை. சூத்திரர் என்போர் இம்மூன்று வர்ணத்தாரிடமும் அடிமைப் பணி செய்பவர் என்பதால் எந்த சலுகையும் (privilege) தரவில்லை. இன்றைய நோக்கில் அது தாழ்வுபடுத்துகிறது என பார்க்கப்படுகிறது. இதில் பிராமணனுக்கு வைக்கும் ஒழுக்க நெறிகளை பார்த்தால் இந்நூலுக்கு முற்பட்ட காலத்திலும் சரி இந்நூல் எழுந்த பிற்பட்ட காலத்திலும் சரி எந்த பிராமணனும் அவ்வாறு வாழ்வது இயலாது. அந்த அளவு கடினம் என்பதை உணரலாம். மேலும் தென்னகத்தில் 8 - 9 நூற்றாண்டுகளில் எழுச்சி பெற்ற புராண தெய்வ கோவில் வழிபாடு வேத ஒழுக்கத்தில் இருந்து பிராமணர் நம்பிக்கையை ஒழுக்கத்தை வெகுவாக மாற்றிவிட்டது. புராண தெய்வ கோவில் வழிபாடு வடக்கிலும் பரவியது. எனவே இந்நூலின் பரிந்துரைப்படி பிராமணர் சூத்திரர் ஆகின்றனர்.

இந்நூல் பல்வேறு காலங்களில் பலவேறுபட்ட நாடுகளில் இயற்றப்பட்ட பா வரிகளை கொண்டுள்ளதால் இந்நூல் பிற்பட்ட காலத்தில் தான் வேறு ஒரு மூல நூலில் இருந்து வேண்டியதை எடுத்தும் மற்றதை கழித்தும் ஒரு நூலாக தொகுக்கப்பட்டு இருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மனுஸ்மிருதியின் பல்வேறு கையெழுத்துப் பிரதிகள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன, அவற்றுக்குள்ளேயே அவற்றின் நம்பகத்தன்மை குலைகிறது. பாவிலும் உரையிலுல் செய்யப்பட்ட இடைச்செருகல்கள் பற்றிய குற்றச்சாட்டும் எழுகின்றன. அதனால் எந்த நாட்டிலும் இது சட்டமாக கடைபிடிக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது. இதை வைத்து பிரிட்டிசு கிழக்கிந்திய கம்பெனி இந்து சட்டத்தை உருவாக்கியது முதல் தான் இதன் மீது குற்றம் உண்டானது. தலித்தியர், அம்பேதுகரியர், திராவிடவியர் போன்றோர் தமக்கு வேண்டிய குறிப்புகளை மட்டும் சர்ச்சைக்காக பொறுக்கி எடுத்துக் கொண்டு இந்நூலின் பிற குறிப்புகளை தள்ளுவதை வைத்து இந்நூல் குறித்து நடுநிலையான எந்த முடிவுக்கும் எவரும் வரமுடியாது. மாறாக தவறான கருத்தையே கொள்ள நேரிடும்.

சூத்திரர் யார்?
மனுநூல்படி சூத்திரர் எனப்படும் வர்ணம் மனத்தின் குணத்தை பொறுத்ததே அன்றி அப்படி தனியே எந்த சாதியும் இல்லை. மனுநூல்படி இப்போதைய சாதிகளில் சூத்திரர் யார் என்று சொல்லிவிட முடியாது என்பதே உண்மை. தென்னிந்தியாவில் நாடு விடுதலை பெறுவதற்கு முன் வரை பிராமணர் என்றும் பிராணரல்லாதவர் சூத்திரர் என்றும் கருத்து சொல்லப்பட்ட நிலை இருந்தது. இருக்கு வேதத்தின் புருஷசூக்தம் 10 ஆவது மண்டலம் 90 ஆம் பாடலை அடிக்கோடிட்டு "சூத்திரன் அறிவைப் பெறக்கூடாது. அவனுக்குக் கல்வி போதிப்பது ஒரு குற்றச் செயல். ஒரு சூத்திரன் சொத்துக்களைச் சேர்க்கக் கூடாது. சூத்திரன் அரசாங்க பதவியில் இருக்கக் கூடாது" என்று சொல்வதாக குற்றம் சுமத்துகின்றனர். மனுஸ்ம்ரிதியின் அத்தியாயம் 8.410 - 8.418 வரையான குறிப்புகளின்படி பிராமணரல்லாதார் எல்லாம் சூத்திரர் என்றால் அதிலும் அவர்கள் சொத்துக்கள் சேர்க்கக்கூடாது என்றால் இன்று அரச குடும்ப உறவுவழி வந்த நிலவுடைமை சாதிகள் அறவே இருந்திரா. நஞ்சை, புஞ்சை, காடு, மேடு என 100% நிலங்கள் பிராமணரிடமே இருந்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி இல்லையல்லவா, பின் ஏன் நிலவுடைமை சாதிகளிடம் உள்ளன? கால்நடைகள் அத்தனையும் பிராமணரிடம் மட்டுமே இருந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இடையரிடம் உள்ளனவே எப்படி? பிராமணருக்கு தான் சொத்து என்றால் வணிகர் என்ற கூட்டம் வீடு, வாசல் என சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திருக்க முடியாது அல்லவா? எனவே மனுஸ்மிருதி ஒரு போதும் சட்டமாக இல்லை என்று புரிகிறது அன்றோ?

வேத தேவதைகள் இந்திரன், சோமன், வருணன், மித்திரன், வாயு, அக்கினி, சவித்திரா ஆகியவற்றுக்கு உருவம் கிடையாது. அவற்றுக்கு உருவ வழிபாடும் கிடையாது. மக்கள் அவற்றை வேள்விச் சடங்கின் வாயிலாகவே வணங்கினர். Iishvarasya pratimá násti அதே போல வேதம் குறிக்கும் பிரம்மன் என்பது பரம்பொருள் ஆகும். அதற்கும் உருவமில்லை. உருவம் இல்லை என்னும் போது தலையில் பிறந்தவர், தோளில் பிறந்தவர், வயிற்றில் பிறந்தவர், காலில் பிறந்தவர் என்பது அதன் தன்மையை குலைப்பதாக அன்றோ உள்ளது? எனில் நான்கு தலை பிரம்மன் என்பது உருவமுள்ள புராண தெய்வம் ஆகும். கிபி. 6 ஆம் நூற்றாண்டு தெய்வத்திற்கு இருக்கு வேதத்தில் என்ன வேலை? எனவே தான் புருஷ சூக்தம் ஒரு இடைச்செருகல் எனப்படுகிறது.இருக்கு வேதத்தில் உள்ள புருஷ சூக்தம் ஒரு கி.பி. 8 ஆம் நூற்றாண்டு இடைச்செருகல் ஆகும். புருஷ சூக்தம் தவிர்த்து பிற பா வரிகளில் பிரம்ம தேவனின் உடலில் பிறந்த வர்ணங்கள் குறித்த குறிப்பு வேறு இடத்தில் அறவே இல்லை.

சூத்திரர் படிக்கக்கூடாது என்றால் கடந்த நூற்றாண்டில் ஐரோப்பிய கல்வி கற்ற 25% மக்களில் பிராமண ஆடவர் 1.5% மட்டுமே இது தவிர எஞ்சிய 23.5% படித்தோர் பிராமணரல்லாத சூத்திரர் தானே? இல்லை! இல்லை!! அவர்கள் சூத்திரர் அல்லர் சத்திரியர், வைசியர் என்றால் பின் எவர் தான் சூத்திரர்? என்பதே கேள்வி. மனுநூல்படி சத்திரியர் அல்லாத மக்கள் வைசியரிலேயே அடங்குவர்.

சிதம்பரம் கோவிலில் சுந்தர பாண்டியன் கால சரசுவதி பண்டார கல்வெட்டில் ஒன்றில் சூத்திர விருத்தி என்ற பெயரில் 1/4 பங்கு நிலதானம் கொடுக்கப்பட்டுள்ளது. சூத்திரருக்கு சொத்தே இருக்கக்கூடாது என்றால் சிதம்பரத்தில் ஏன் மனுஸ்மிருதி கடைபிடிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. இது மனுஸ்மிருதி சட்டமாக இல்லை என்பதைத் தானே உறுதி செய்கிறது?

அத்தியாயம் 7.138 கருவிக்காரர், கைவினைஞரை சூத்திரரிடம் இருந்து தனியே பிரித்து காட்டுவது அவர்களை சூத்திராக குறிக்கவில்லை என்பது தெளிவு.

மனுஸ்மிருதி தமிழ் மொழிபெயர்ப்புகளில் தாஸ்ய என்பதற்கு கீழான, ஏவலர், வேலைக்காரன், வைப்பாட்டி மகன், தேவடியாள் மகன் என்றெல்லாம் தவறாக விளக்கப்பட்டுள்ளன. ஆனால் மனுநூல் அத்தியாயம் 8.415 ல் தேவடியாள் மகன், வைப்பாட்டி மகன் என்னும் சொற்கள் இவ்வரியில் அறவே இல்லை. சியார்ச்சு பூலரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் தான் சூத்திர என்பதற்கு அடிமை என்று தெள்ளத் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் 8.410 தாஸ்யம் சூத்திரம், இதாவது கொத்தடிமை ஏவலன் என்று சூத்திரனை குறிக்கிறது. அத்தியாயம் 8.413 சூத்ரம் து காரயேது தாஸ்யம் -சூத்திரன் கொத்தடிமை பணி செய்யவேண்டும் என்கிறது. அத்தியாயம் 8.414 பிராமண ஆண்டை அவனை அடிமைத் தளையில் இருந்து விடுவித்தாலும் அவன் விடுபட்டவன் ஆகமாட்டான் ஏனென்றால் அவன் பிறப்பிலேயே ஒரு அடிமையாக பிறந்தவன் என்கிறது. அத்தியாயம் 8.416 அடிமையின், அவன் மகனின், மனைவியின் சொத்துகள் அனைத்தும் அந்த அடிமையின் முதலாளிக்கே சொந்தம் என்கிறது. பிறக்கும் போதே அடிமை என்றால் அவனுக்கு சொத்தே இருந்திருக்காது ஏனென்றால் அவன் முதலாளி அதை ஏற்கெனவே எடுத்துக் கொண்டிருப்பான். பின் அவனுக்கு சொத்து எங்கே இருந்து வரும்? பிழைப்பிற்கு வழி இல்லாமல் தன்னைத் தானே ஒருவன் அடிமையாக விற்கும் போது, போரில் தோற்று பிடிக்கப்படும் போது அந்த அடிமைக்கு மனைவி வழியில், முன்னோர் வழியில் இருந்து சொத்து வரும். அதைத் தான் முதலாளி எடுத்துக் கொள்ளலாம் என்கிறது. இதற்கு தெளிவான விளக்கம் அத்தியாயம் 8.415 ல் எழுவகை அடிமைகளை குறிப்பதை நோக்குக. அது ஏவலர்களையோ தேவடியாள் மகனையோ குறிக்கவில்லை.

முரணாக அத்தியாயம் 4.253. ல் தன் பூமியை உழுபவன், அவன் குலத்து நண்பன், மாடு மேய்ப்பவன், அவன் அடிமை, அவன் நாவிதன், தன்னைத் தானே அடிமையாக ஒப்புவித்த ஏழை ஆகியோர் சூத்திரர் என்ற போதும் அவர் தரும் உணவை உண்ணலாம் என்கிறது. இது அத்தியாயம் 5.410 & 1.90 வைசியர்க்குரியதாக சொல்லும் கால்நடை மேய்த்தல், உழவில் ஈடுபடல் ஆகிய பணிகளை சூத்திரர்க்கு உரியதாக்குவது பெருத்த முரண். இந்த வரி இடைச்செருகலாக இருக்க வேண்டும்.

அடிமைமுறை முதன் முதலில் மேலை ஆசியாவில் சுமேரிய நாகரிகத்தில் தொடங்கி பின்பு நடுவாசியாவை சேர்ந்த இந்தோ கிரேக்கர் இந்தோ ஈரானிய சித்திய திராவிடர், பஹ்லவர், ஊனர், காம்போஜர் ஆகியோரால் பின்பற்றப்பட்டு தமது படையெடுப்பில் தோற்றவரை அடிமைகள் ஆக்கி எடுப்பு வேலைகளுக்கும் தூக்கு தூக்கி வேலைகளுக்கும் அவர்களை பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் தான் வடமேற்கு இந்தியாவில் அடிமை முறையை புகுத்தி இருக்க வேண்டும் என்று கருத இடம் உண்டு. கிரேக்கத் தூதுவர் மெகத்தனிசு தமது இண்டிகாவில் இந்தியாவில் பிராமணர், உழவர், மேய்ப்போர், கைவினைஞர் /வணிகர், மறவர் , கண்காணி, நீதிபதி என ஏழே எழு சாதிகளை மட்டுமே குறிப்பிடுகிறார். அடிமை சூத்திரர் பற்றியோ அல்லது தீண்டாமை பற்றியோ அவர் ஏதும் குறிக்கவில்லை என்பது ஈண்டு நோக்கத்தக்கது.

மனுநூலில் எங்குமே தீண்டாமை குறித்தோ தீண்டத்தகாத சாதிகள் குறித்தோ செய்திகள் அறவே இல்லை. வர்ண நீக்கம், சாதிநீக்கம் (outcast) பற்றி தான் குறிப்பு உள்ளது. ஆனால் கடந்த 350 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் 1,000 க்கு மேற்பட்ட தீண்டாமைக்கு ஆட்பட்ட சாதிகள் உள்ளன. மனுநூல் தான் ஆங்கிலர் ஆட்சிக்கு முன் இந்தியா முழுவதும் சட்டமாக இருந்தது என்றால் மனுநூலில் கூறப்படாத தீண்டாமை வழக்கம் எப்படி ஏற்பட்டது? இதனால் மனுநூலை எவரும் மதிக்கவில்லை என்று தானே பொருள் ஆகிறது? அப்படியெனில் அதை இந்தியாவின் சட்ட நூல் என்பது தவறு அன்றோ?

சத்திரியர் யார்?
மனுநூல்படி சத்திரியர் யார் என்பதை சாதிகளில் தேட முடியாது. அதற்கு தெளிவான பொருள் கிடைக்காது. வட நாட்டில் உழவில் ஈடுபடும் ஜாட்களும், ஆயர்களான அபீரர்களும் போரில் பங்கு பெற்றனர். மனுநூல்படி உழவும் மேய்ச்சலும் வைசியருக்கு உரியவை பின் எப்படி இவர்கள் சத்திரியராக போரில் பங்குபெறலாம்? ஆக இவர்களை சத்திரியர் என்பதா இல்லை வைசியர் என்பதா? என்ற கேள்வி எழுகிறது. தென்னாட்டில் வடுக மீனவரான முத்தரையர் தமிழகத்தில் படைநடத்தி ஆட்சியை கைப்பற்றினர். அதேபோல ஆடு மேய்க்கும் வடுக இடையரான வாணர் படைகொண்டு தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றினர் என்பதை நோக்கும் போது சத்திரியர் என்று தனியே யாரும் கிடையாது என்று தெள்ளத் தெளிவாக புரியும். அதே நேரம் குறிஞ்சி நிலப் பழங்குடிகளும் போரில் பங்கு பெற்றுள்ளனர். பாலைக் கள்ளரும் போரில் பங்கு பெற்றுள்ளனர். எனவே சத்திரியர் என்பது போர் குணம் கொண்டவரை குறிப்பதில் உள்ள தெளிவு இன்னின்ன சாதிகள் தான் சத்திரியர் என தெளிவாகக் குறிக்க முடியாததை காண்க. போர் இல்லாத காலங்களில் இவர்கள் 8.410 & 4.253 வரிகள் குறிக்கும் வைசியர்க்கு உரிய கால்நடைகளை காத்தல், உழவில் ஈடுபடல் ஆகிய வைசியர் பணிகளைத் தான் செய்தனர். இது வர்ண வகைப்பாட்டை குழப்பமாக்கவில்லையா?

வழிநெடும் பயணத்தில் தமக்கும் தமது வணிகப் பொருளுக்கும் ஆரலைக் கள்வரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டி தமக்கென தனியே ஒரு படையையே பேணிப் போர் புரிந்தனர் வணிகர். இதற்கு தமிழ்க் கல்வெட்டுச் சான்றுகள் சில உண்டு. இந்த போர் குணத்தால் வணிகர் சத்திரியரா இல்லை வைசியரா? என்று குழப்பம் ஏற்படும்.

படைவீரர்கள் வேற்று இடத்திற்கு சென்று போர் புரிந்து வெற்றி கொண்ட பின் அங்கேயே நிலையாகத் தங்க நேரிடும் போது அங்கத்து வெவ்வேறு வர்ணப் பெண்களைத் தூக்கிச்சென்று மணப்பதால் வர்ணக் கலப்பு ஏற்படுவது இயல்பானது. எனவே வர்ணக் கலப்பை, கலப்பு சாதியை தடுக்கவே முடியாது என்பதை உணர்ந்து தான் மனுநூல் இயற்றப்பட்டதா? எனினும் இதற்கு முரணாக பல கலப்பு வர்ணப் பெயர்களைக் குறிப்பிடுகிறது.

பெண்ணின் நிலை
அத்தியாயம் 2.213 - 2.215 பெண்ணின் நடத்தையை ஐயுறும்படியாக கருத்து கூறுகிறது என்பது உண்மையே. ஆனால் வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த இந்தோ ஈரானிய சித்திய திராவிட, இந்தோ கிரேக்க, மங்கோலிய அயலின ஆண், பெண் நடத்தை இந்திய பண்பாட்டிற்கு வெகுவாக மாறுபட்டிருந்தது. இவர்கள் ஆப்கான், கசாகத்தான், அசர்பைஜான், உசுபெகித்தான் நாடுகளில் இருந்து படையெடுத்து வந்து நாட்டைக் கைபற்றி ஆண்டவர்கள். இவர்கள் 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இராசபுத்திரராக அறிவிக்கப்பட்ட பின்பு அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனக் கருத முடிகிறது (அத்தியாயம் 10.44 காண்க). அதே நேரம் அத்தியாயம் 8.352 - 8.361 ஆண்கள் பெண்ணிடம் தவறாக நடப்பதை கண்டிக்கிறது அத்தகையோரை தண்டிக்க வேண்டும் என்கிறது.
பிராமணன் பெண்களுக்கும் சூத்திரனுக்கு வேதக் கல்வி புகட்டக்கூடாது என்று தான் சொல்கிறது மனுநூல் ஆனால் சத்திரியர், வைசியரிடம் வேதம் சாரத உலகியல் கல்வியை பெற்றிருக்கலாமே அதற்கு ஒன்றும் தடை சொல்லவில்லையே? அரச குல பெண்டிர், செல்வர் பெண்டிர், தேவரடியார் ஆகியோர் என்ன வேதக் கல்வியா கற்றனர்? உலகியல் கல்வி தானே கற்றனர்?

அத்தியாயம் 5.155 - 5.162 வரை விதவைப் பெண்களின் கற்பு ஒழுக்கத்தை, நற்குணத்தை வேண்டுகிறது. ஆனால் மனுநூலில் எங்குமே கற்புடை பெண்கள் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் குறித்த செய்திகள் அறவே இல்லை. ஆனால் மனுநூலில் இல்லாத ஒரு குறிப்பை வடநாடு முழுவதும் ஆங்கிலர் ஆட்சி தடை செய்யும் முன் வரை வழக்கத்தில் வைத்திருந்தனர் என்றால் மனுநூலை எவரும் மதிக்கவில்லை என்று தானே பொருள்? அப்படியெனில் அதை இந்தியாவின சட்ட நூல் என்பது தவறு அன்றோ? மதிக்கப்படாத இடைச்செருகலும் கழித்தலும் (tampered) கொண்ட நூலை முட்டாள்தனமாக புனித நூல் என்கின்றனரே சிலர்!! பிற மதத்தின் புனித நூல்களில் ஏதேனும் கழித்தலும் திருத்தலும் இடைச்செருகலும் செய்வதுண்டா? திவ்ய பிரபந்தம், 12 திருமுறைகளில் கழித்தலும் திருத்தலும் இடைச்செருகலும் செய்வதுண்டா? இல்லையே. பின் எப்படி கழித்தலும் திருத்தலும் இடைச்செருகலும் உள்ள மனுநூல் ஒரு புனித நூல் ஆகும்?

புலால் ஆதரவும் மறுப்பும்
அத்தியாயம் 5.49 ல் புலாலின் மூலம் கருதி, உடம்புள்ள உயிர்களுக்கு கொடுமை இழைப்பதை கருதி புலால் உண்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்கிறது. 5.51 ல் விலங்கை கொல்ல அனுமதிப்பவர், அதை வெட்டுபவர், அதை கொல்லுபவர், அதை வாங்குபவர் விற்பவர், அதை சமைப்பவர், அதை பரிமாறுபவர், அதை உண்பவர் ஆகியோர் விலங்கு கொலைகாரர்களாக கருதப்பட வேண்டும் என்கிறது. இக்கருத்து அத்தியாயம் 3.267- 3.271 ல் குறிக்கப்படும் திவச புலால் படையலுக்கு முரணாக அன்றோ உள்ளது? என்றால் முன்னோர்கள் திருப்தி பட்டால் என்ன படாவிட்டால் என்ன என்ற மனப்பான்மை தானே இங்கு தெரிகிறது? இதில் தான் புலால் உண்ணும் ஆரியப் பூசகருக்கும் பிராமணருக்கும் உள்ள வேறுபாடு வெளிப்படுகிறது. இப்படி இரு திறத்தவர் கருத்தும் மனுநூலில் இடம் பிடிப்பது குழப்பம் தானே? இதனால் 8 ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் பிரயாகையில் நடந்த பிராமணர் மாநாட்டில் புலால், மீன் உண்ணும் பிராமணர் அனைவரும் வர்ண நீக்கம் செய்யப்பட்டு பிராமணரல்லாதவர் என்று வங்காளி பிராமணரும் பீகாரி பிராமணர் சிலரும் அறிவிக்கப்பட்டனர். அதன் பின் வடக்கே ஐந்து கௌட பிராமணர், தெற்கே ஐந்து திராவிட பிராமணர் மட்டுமே பிராமணர் என்று அறியப்பட்டனர்.

இடம் சார்ந்த பா வரிகள்.
அத்தியாயம் 3.272 & 5.18 இல் காண்டாமிருகத்தின் புலால் குறிப்பிடப்படுகிறது. காண்டாமிருகம் 1,500 ஆண்டுகள் அளவில் நேபாளம், அசாம், வடக்கு வங்காளம் என இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மட்டுமே இருந்த விலங்கு. எனில் இந்த வரிகள் அந்த இடத்தில் இருந்து தானே வந்திருக்க முடியும்?

அத்தியாயம் 7.70. ஒரு அரசன் நகரை கட்டி அதில் கோட்டை எழுப்ப வேண்டும் என்று சொல்லும் போது தந்வ துர்கம் - பாலைநில கோட்டை பற்றி குறிக்கிறது. பாலை நிலக்கோட்டை என்பது இந்திய வடமேற்கில் தார் பாலைவனத்தில் தான் இருக்க முடியும். அதைப்பற்றி இவ்வரி கூறுகிறது என்றால் இந்த பா வரி அந்த நிலத்தது ஆகலாம்.

அத்தியாயம் 7.193. ஒரு மன்னன் பஞ்சாபின் குருசேத்திரம், இராஜஸ்தானின் மத்சய தேசம், யமுனையின் சூரசேன வீரர்களையும் பிற இடத்து உயரிய மெலிந்த வீரர்களையும் படையில் சேர்க்கச் சொல்கிறது. இந்த பகுதிகளில் தான் இராசபுத்திரர், ஜாட்டுகள் உள்ளனர் என்பதை நோக்க வேண்டும்.

அத்தியாயம் 9.126. சுப்ரமணிய பெயர் கொண்ட நூல் ஒன்றை மேற்கோள் காட்டுகிறது. சுப்ரமணிய என்ற பெயர் ஆந்திர தேசத்தை மூலமாக உடையது. ஆதிசங்கரின் நூல் சுப்பிரமணிய புஜங்கம் இப்பெயரை முதன் முதலாக இலக்கியத்தில் பதிக்கிறது. ஆக 9 ஆம் நூற்றாண்டு சொல் சுப்பிரமணிய என்பது. எனவே இது இடைச்செருகலாக இருக்க வேண்டும்.

மனுஸ்மிரிதி அல்லாமல் இன்னும் 17 ஸ்மிரிதிகள் உள்ளன. ஆனால் மனுஸ்மரிதி மட்டும் தான் சட்டமாக இருந்தது என்று சொல்லுவது அரசியல் பேச்சு தான். மனுநூல் இருக்கும் போது பிற ஸ்ம்ருதிகளுக்கு தேவை என்ன இருக்கிறது? தமது நாட்டின் பகுதியில் வழங்கும் பண்பாடு, பழக்கம், ஒழுக்கம் இவற்றுக்கு ஒத்துவராத மனுநூலை ஒதுக்கிவிட்டு வங்கத்தில் தயபாக சட்டத்தை இயற்றிக்கொண்டனர். அதே போல் மிதிலையில் தனி சட்டம் இயற்றினார். இவை சொல்லும் உண்மை என்ன? மனுநூல் சட்டமாக இருக்கவில்லை என்பதைத் தானே?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.