STEM-Kalvi அறக்கட்டளையால் இலவசமாக நடாத்தப்படும் பாடசாலைக்கல்வியை விலகியோருக்கான இணையவழி ஆங்கில வகுப்பு பகுதி-II இன் வெற்றிகரமான இறுதி வாரம் இது.  ஆங்கிலக் கல்வி வகுப்பு பகுதி-I, பகுதி-II என்ற இரண்டு கட்டங்களையும் தொடர்ச்சியாக, இணைய வழியில்  கற்பித்ததன் மூலம் நான் பெற்றுக் கொண்ட அனுபவத்தைப் பகிர்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

வழமையாக இங்கு பாடசாலைகளில் ஆசிரியர்களும் தொடர்ச்சியான கற்றலை மேற்கொள்வதால், ஆசிரியர்களின் அனுபவங்களை சக ஆசிரியர்களோடு பகிர்ந்து கொண்டு, இன்னும் தமது கற்பிக்கும் திறமைகளை மேம்படுத்துவது சாதாரணமான ஒரு பணி சார்ந்த விடயமே. இதனை கற்றலும் கற்பித்தலுக்குமான வாராந்த பயிற்சிக்குள்ளும்  ( Weekly Teaching and  Learning Training) தொடர்ச்சியான பணி சார்ந்த நிபுணத்துவத்திற்கான பயிற்சியாகவும் (Continuous Professional Development ) ஆசிரியர்கள் உள்வாங்கிக் கொள்ளுகின்றனர்.

இங்கு பிரித்தானியாவில் இருந்தவாறே நானும், அவுஸ்திரேலியாவில் இருந்தவாறே இயங்கி வரும் ஸ்டெம் கல்வியும்  இந்த வகையில் பாடசாலையிலிருந்து விலகியோருக்கான ஆங்கிலக் கல்வியை, மாணவர்களுக்கு ஏற்ற முறையில், இலங்கை கல்வி அமைச்சின் பாடத்திட்டங்களுக்கு ஏற்ப தயாரித்து வழங்கி வந்தோம்.  நான் ஆங்கிலத்தை முதன் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே இங்கு கற்பித்து வருவதால், ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்ட இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு கற்பித்ததன் மூலம் பல விடயங்களை அறிந்து கொள்ளவும், அதற்கேற்ப கற்பித்தலை சரிபடுத்திக் கொள்ளவும் என்னால் ( adapt) முடிந்தது.  இது மாணவர்களுக்கும் எனக்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்தது. அவர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்து, கற்பித்தலை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தது. நேரம், முயற்சி, தனிப்பட்ட கடமைகள், வேலை   எனப் பல சிக்கல்களுக்கு நான் முகம் கொடுத்தாலும் கூட, ஒரு பயன் தரக்கூடிய செயற்திட்டத்திற்கு மெருகூட்டுகிறேன் என்பது சுவாரசியமாகவே இருந்தது.   

ஆங்கிலம் ஒரு உலக தொடர்பாடல் மொழியாக இருப்பதனால், ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் திறனானது உலகெங்கிலும் உள்ள மக்களிடையே தொடர்புகளையும் பரஸ்பர புரிதலையும் உருவாக்குகிறது. அது அது மட்டுமல்லாமல் பல்வேறு சமூகங்களுக்கு இடையேயான சமூக ஊடாட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. அத்தோடு  தனிப்பட்ட ரீதியிலும் ,  தொழில் ரீதியாகவும்  மக்களின் உலக எல்லைகளை விரிவுபடுத்துகிறது. கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் ஆகிய 4 திறன்களில் (listening, speaking, reading and writing) ஒவ்வொன்றும் ஆங்கிலத்தைக்  கற்றுக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இலங்கையில் தமிழ், சிங்களம் இரண்டுமே தற்போது பாடசாலைகளில் கற்பிக்கும் மொழியாக இருப்பதால், பாடசாலையை விட்டு நீங்கி பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள், வேலை தொடர்பில் வெளிநாடுகளுக்கு அல்லது வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்கள் ஆங்கிலக் கல்வியைத் தொடர்வதில் அல்லது ஆங்கிலத்தில் பேச, எழுத  சிரமத்தை எதிர் நோக்குவதால் ஸ்டெம் கல்வி இம்மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வியை வழங்கத் தீர்மானித்தது.

வகுப்புகளைக் கிரமமாக இணைய வழியில் கொண்டு சென்றதோடு மட்டுமல்லாமல் ஸ்டெம் கல்வி அறக்கட்டளையானது  கூகிள் படிவம் முறைமை ஒன்றின்  ஊடாக (Google Form), நான் வாராந்தம் தயாரிக்கும் வினாத்தாள்களை மாணவர்களுக்கு விநியோகித்து அவர்களின் பெறுபேறுகளுக்கமைய அவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வந்தமை மாணவர்களைத் தொடர்ந்தும் கற்கத் தூண்டியதென்றே தெரிய வந்தது. இது ஸ்டெம் கல்வி அறக்கட்டளையானது அண்மைக் காலத்தின் தகவல்  தொழில் நுட்ப வளர்ச்சியை  திறமையான முறையில் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தியதன் வெளிப்பாடு என்றே சொல்ல வேண்டும்.  

கடந்த மாசி மாதத்தில் ஆரம்பித்த பகுதி-I இற்கு 500ற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து, 24 வகுப்புகளிற்கும் சமூகமளித்து, வாரம் தோறும் நடத்தப்பட்ட வாராந்த பரீட்சைகளில் தோற்றி, 75 மாணவர்கள் தமது ஆரம்ப கட்ட ஆங்கில வகுப்பைக் கடந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. வாரத்தில் இரு நாட்கள் இந்த ஆங்கில வகுப்புகள் கிரமமாக நடாத்தப்பட்டு சித்திரை மாத இறுதியில் முற்றுப் பெற்றது.

அதன் பின்னர் ஒரு இடைவெளியும் அவ்விடைவெளியில் மாணவர்களின் பகுதி-II ஐ தொடர்வதற்கு விரும்புகிறார்களா என்ற சிறு ஆய்வும் நடாத்தப்பட்டது. இதன் மூலம் பகுதி i ஐக் கடந்து வந்த மாணவர்களில் 45 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, இணைய வழி ஆங்கிலக் கல்வியின் பகுதி ii ஆனது கடந்த புரட்டாதி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு இந்த வாரத்தில் முடிவுக்கு வருவது மனதிற்கு நிறைவான ஒரு காரியத்தை நடத்திய பெருமை ஸ்டெம் கல்வியைச் சாருகின்றது.

   - கலாநிதி குமாரவேலு கணேசன்  -

பாடசாலையை விட்டு நீங்கி, பல்கலைக்கழகம் சென்றவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், குடும்ப வாழ்க்கையில் சவால்களோடு படித்தவர்கள், பெற்றோர்களை இழந்த மாணவர்கள், இணைய வழியில் இணைந்து கொள்ளும் வசதி குறைந்தவர்கள் ( இவர்களுக்காக நான் கற்பிப்பதை பதிவு செய்து Youtube இல்  இணைத்து விடுவது வழமை) எனப் பலரும் வாராந்த ஆங்கில வகுப்புகளில் இணைந்து, வாராந்த பரீட்சைகளில் தோற்றி தற்போது இறுதிப் பரீட்சை வரை வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆசிரியராக எனது வாழ்த்துக்கள். இறுதிப் பரீட்சையிலும் தக்க முறையில் தோற்றி, தகுந்த புள்ளிகளைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்.

ஸ்டெம் கல்வி அறக்கட்டளையும் அனைத்து மாணவர்களையும் வாழ்த்தி நிற்பதாக ஸ்டெம் கல்வியின் ஸ்தாபகர் கலாநிதி குமாரவேலு கணேசன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.