
வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணியென அயராதுழைத்த இலண்டன் சிவாப்பிள்ளை (சிவகுருநாதபிள்ளை - வயது 83) கம்போடியா - அங்கோர் நகரில் நடைபெற்ற 'கடாரம் கொண்டான் இராசேந்திர சோழன்" 1000 ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டவேளை> சிந்திப்பதை நிறுத்திக்கொண்டமை அதிர்ச்சியையும் மிகுந்த கவலையையும் தருகிறது. அவரது பூதவுடல் லண்டனுக்கு எடுத்துவரவிருப்பதாகத் தெரியவருகிறது.
1966 -ம் ஆண்டு முதல் யான் நன்கறிந்த மனிதர். அடுத்த சில வருடங்களில் அவர் பொறியியல் படிப்பிற்காக லண்டன் வந்தார். கணினித்துறையில் கற்று வல்லுநராகத் திகழ்ந்தார். கணினியில் தமிழ் எழுத்துக்களை உருவாக்குவதில் அன்றே முயற்சி மேற்கொண்டவர்.
யாழ்ப்பாணம் கட்டப்பிராயைப் பிறப்பிடமாகக்கொண்ட அவர் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி> யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் யான் கல்வி கற்ற காலத்தில் (க. பொ. த.) சில மாதங்கள் எமக்குத் தமிழ்ப் பாட ஆசிரியராகவும் கடமையாற்றியவர். அவரது மனைவி எனது வகுப்புச் சக மாணவர்.
யான் பிரான்ஸ் வந்த காலத்தில் (1991) அவருடன் மீண்டும் தொடர்பு கிடைத்தது. இலண்டனில் எனது நூல்கள் அறிமுக நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டு உரையாற்றத் தவறியதில்லை. எனது நூல்கள் அறிமுக நிகழ்வுகளை அங்கு ஒழுங்குசெய்து உதவியவர். வீட்டிற்கும் அழைத்து அன்பாக உரையாடி உபசரித்த பெருந்தகை. மூத்த சகோதரர்போல் என்னுடன் பாசமாகப் பழகிய அன்புள்ளம்.
எனது மூத்த சகோதரர் நாவேந்தனுடன் (கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் அன்று ஆசிரியராகக் கடமையாற்றியவர்) பண்பாகப் பழகியவர்.
தமிழ் மரபு - மொழி - கணினிக் கல்வி - தொழில்நுட்பம் - சமயம் ஆகியவற்றின் வளர்ச்சியில் அக்கறையோடு செயற்பட்டவர். இத்துறைகள் சம்பந்தமாக உலகின் பல நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டவர். தமிழ் இணையத் தமிழியல் மாநாடுகளில் கலந்துகொண்டு சிறப்பித்தவர். மதிப்புக்குரியவராகத் திகழ்ந்தவர்.
இலங்கையில் பின்தங்கிய பல கிராமங்களுக்குக் கணினிக் கல்வியைக் கொண்டு செல்ல அர்ப்பணித்து இயங்கியவர் - உதவியவர். ஐக்கிய இராச்சியத்தில் தமிழ்மொழிப் பாடத்திட்டங்களை உருவாக்குவதிலும் முன்னனின்று உழைத்தவர். தமிழகத் தமிழறிஞர்கள் பலருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர். அவரது இழப்பு மிகுந்த கவலையளிக்கிறது. அவரது பணிகள் மூலம் அவர் நாமம் நீடித்து நிலைக்கும்..!
thambirajah elangovan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.