1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை அடுத்து, இலங்கைத் தமிழர்கள் பலர் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தபோது, அதிகமானவர்கள் கனடா நாட்டுக்குப் புலம் பெயர்ந்தார்கள். ஒன்ராறியோ மாகாணத்தில்தான் அதிக தமிழர்கள் வாழ்வதால், இவர்கள் முதலில் தங்கள் இருப்பை உறுதி செய்தபின், பல்வேறு சமூகச் செயற்பாடுகளிலும் தங்களை உட்படுத்திக் கொண்டனர். எந்த நாடாக இருந்தாலும், இறுதி முடிவு எடுக்கும் நிலை அந்த நாட்டு அரசைச் சார்ந்திருப்பதால், அரசியலில் ஈடுபாடு கொண்ட சிலர் தேர்தல் மூலம் பதவிகளுக்காகப் போட்டி போட முன்வந்தனர். பிறர் நலன் கருதிப் போட்டி போடுவதாகப் பிரச்சாரம் செய்தால்தான் ஜனநாயக நாட்டில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புண்டு. பதவிக்கு வந்தபின் அரசியல் வாதிகள் எப்படி மாறுவார்கள் என்பது சந்தர்ப்ப, சூழ்நிலையைப் பொறுத்தது. கனடாவில் கோவிட் பேரிடர் காரணமாக முக்கிய பிரச்சனைகளாக சுகாதாரவசதி, வாழ்க்கைச் செலவு, வருமானவரி, பொருளாதாரம், வீட்டுவசதி, முதியோர் பிரச்சனை, குடியேற்றம், கல்வி, வேலைவாய்ப்பின்மை, மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பொதுவான பிரச்சனைகளை மக்கள் இப்போது எதிர் கொள்கின்றார்கள்.

அரசியல்சட்ட முடியாட்சி முறையை அடிப்படையாக கொண்ட கனடா நாட்டின் தலைவராக 1952ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இருந்து வருகிறார். கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு நாடாகும். கனடா மூன்று நிலை அரசுகளைக் கொண்டது. அவையாவன முதலாவது நடுவண் அரசு, இரண்டாவது மாகாண, ஆட்சிப் நிலப்பரப்பு அரசுகள், முன்றாவது நகராட்சி, ஊர் அரசுகள் ஆகும். இதைவிட கல்வி பற்றி முடிவெடுக்கும் கல்விச் சபைகளும் இருக்கின்றன. அதன் அங்கத்தவர்கள் தெரிவுக்கும் அவ்வப்பகுதிகளில் தேர்தல் உண்டு. அடிப்படைக் கல்வியும் உயர்கல்வியும் அரச, தனியார் துறைகளால் வழங்கப்படுகின்றன. மேல்நிலைப் பல்கலைக்கழக படிப்புக்களை அரசே செயல்படுத்துகின்றது. கல்விச்சபைகள் தமிழ் மொழியை ஒரு பாடமாக அங்கீகரித்து இருக்கின்றன. சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ் தமிழ் மொழியையும் ஒரு பாடமாக விரும்பியவர்கள் எடுக்கலாம். இதைவிட பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்குத் தேவையான ‘கிறடிட்’ எடுப்பதற்கும் தமிழ் மொழியை இங்கே ஒரு பாடமாக எடுக்கமுடியும்.

மக்களால் தேர்தல் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் 308 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையே கனடா நாடாளுமன்றத்தின் முக்கிய பிரிவு ஆகும். சுமார் 25 கட்சிகள்வரை கனடாவில் பதிவு செய்திருந்தாலும் பழமைவாதக் கட்சி, கனடா நடுநிலைமைக் கட்சி, குபெக்குவா கட்சி, கனடா புதிய ஜனநாயகக் கட்சி, கனடா பசுமைக் கட்சி ஆகியன நடுவண் அரசில் முக்கிய கட்சிகளாக இருக்கின்றன. கனடாவின் அரசியலமைப்புச் சட்டம் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறை செய்து, சட்ட உருவாக்க வழிமுறைகளையும் விபரிக்கின்றது. இதன் அங்கத்தவர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். கனடாவில் இதுவரை 14 சிறுபான்மை அரசுகள் ஆட்சி செய்திருக்கின்றன.  அரசே எல்லா முடிவுகளையும் எடுப்பதால், பல்லின மக்களும் இங்கு வாழ்வதால், ஒரு இனத்தின் அரசியல் பங்களிப்பு மிகமுக்கியமானதாகும். 2009 ஆண்டுக்குப் பின், இலங்கையில் இருந்த சூழ்நிலை காரணமாகத் தேவை கருதித் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு கனடாவின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராக 2011 ஆம் ஆண்டு ராதிகா சிற்சபைஈசன் அவர்களைத் தெரிவு செய்தார்கள். அவரது பதவிக்காலம் முடிந்தபின், அதைத் தொடர்ந்து ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்ராறியோ மாநில உறுப்பினர்களாக லோகன் கணபதி, விஜய் தணிகாசலம் ஆகியோர் இருக்கின்றார்கள். இதைவிட ரொறன்ரோ, மார்க்கம் கல்விச் சபைகளின் தேர்தலில் போட்டியிட்டு நால்வர் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். யாழினி ராஜகுலசிங்கம், அணு சிறீஸ்கந்தராஜா. பார்த்தி கந்தவேள், மற்றும் மார்க்கத்தில் யுயனிதா நாதன் ஆகியோர் வெற்றி பெற்றனர். மொத்தமாக 7 தமிழர்கள் தற்போது கனடா அரசியலில் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். அரசியலில் ஈடுபாடு கொண்ட நீதன் சண் பற்றியும் குறிப்பிட வேண்டும், இவர் ரொறண்டோ நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், ஒன்ராரியோ மாகாணத்தின் புதிய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவருமாவார்.

இம்முறை செப்ரெம்பர் 20 ஆம் திகதி கனடாவில் நடக்கவிருக்கும் 44வது தேர்தலில் சுமார் 10 தமிழர்கள் போட்டியிடப் போவதாக இதுவரை தெரிய வந்துள்ளது. லிபரல் கட்சியின் சார்பில் ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் ரூஜ் பார்க் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகின்றார். இவர் பொதுமக்களின் அனேகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால், பலராலும் அறியப்பட்டவர். தை மாதத்தை தமிழர்களின் மரபுத் திங்களாகக் கனடா அரசாங்கத்தால் அங்கீகரிப்பதற்கு முன்னின்று உழைத்தவர். இவரைவிட தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ஆனந்த் மீண்டும் போட்டியிடுகின்றார். அல்போன்ஸ் ராஜகுமார் என்பவரும் சஸ்கச்சுவானில் லிபரல் கட்சியில் புதிதாகப் போட்டியிடுகின்றார். கிறீன் கட்சியில் அர்ஜுன் பாலசிங்கம், கொன்சவேட்டிவ் கட்சியில் மல்கம் பொன்னையன் மற்றும் சஜந்த் மோகனகாந்தன், புதிய ஜனநாயகக் கட்சி சார்பாக வான்கூவரில் அஞ்சலி அப்பாத்துரை, மக்கள் கட்சி சார்பாக ஜோர்ச் அன்ரனி, குபெக்குவா சார்பாக ஷோபிகா வைத்தியநாதசர்மா போன்றவர்களும் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிகின்றது. சுயேட்சையாக பிராம்டன் மேற்கில் போட்டியிடும் சிவகுமார் ராமசாமி இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

இங்கே உள்ள தமிழர்கள் வேட்பாளரின் தனிப்பட்ட திறன்களுக்காகவும், தாயகப்பிரச்சனைகளில் உறுதியான கருத்துக் கொண்டவர்களையும் மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முக்கியமான விடயங்களில் ‘ஒற்றுமை’ என்ற நிலை எம்மவர்களிடம் இல்லை என்பதற்குப் பல உதாரணங்களைக் கடந்த தேர்தல்கள் மூலம் எடுத்துச் சொல்ல முடியும். சுயநலத்திற்காக, பணத்திற்காக, பதவிக்காக, காழ்ப்புணர்வுக்காக என்று ஒருசிலரால் பல சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் வஞ்சிக்கப் பட்டிருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர்களைவிட நான்கு மடங்கு அதிகமான சீக்கியர் இனத்தைச் சேர்ந்த 18 பேர் ஒற்றுமையாகச் செயற்பட்டு வெற்றி பெற்றிருந்தது மட்டுமல்ல, முக்கியமான அமைச்சர் பதவியையும் ஒருவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, போல்டன் என்ற இடத்திற்கு லிபரல் கட்சியின் சார்பாகப் பிரச்சாரத்திற்காக ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி சென்ற போது, ஒருசிலர் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்த முனைந்ததால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன்கள்பற்றிக் கவலைப்படாமல், சுயநலமாக இயங்கும் ஒரு கூட்டம் இங்கேயும் இருக்கத்தான் செய்கின்றது. 2019 ஆண்டு தேர்தலில் லிபரல் கட்சி 338 ஆசனங்களில் 157 ஆசனங்களையும், கன்சவேட்டிக் கட்சி 121 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன. கனடாவில் தனியாக ஆட்சி அமைப்பதற்கு 170 ஆசனங்கள் தேவைப்படுகின்றன. கன்சவேட்டிக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும், அதிக ஆசனங்களைப் பெறவில்லை. இம்முறை கனடிய பொதுத்தேர்தலில் எந்த ஒரு கட்சியும் தனியாக அரசை அமைக்கப் பேவதில்லை என்று The Writ Polls  என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தேர்தல் கருத்துக் கணிப்பு நிபுணரான Erick Grenier  குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. கோவிட் - 19 இன் பேரிடர் பாதிப்பு, அரசாங்கக் கட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, பாடசாலைகள் இயங்காமை, தனிமைப்படுத்தல் போன்ற பல காரணங்கள் மக்கள் மனதைப் பெருமளவில் மாற்றியிருப்பதால், புதிதாக வரும் அரசாங்கம் பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிவரலாம். கோவிட்-19 பேரிடர் கனடாவுக்கு மட்டுமல்ல, இது எல்லா நாடுகளுக்கும் உள்ள பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், இதுவே கனடாவில் இந்தத் தேர்தலின் வெற்றி தோல்விகளை இம்முறை நிர்ணயிக்கப் போகின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.