இசைக்கலைஞர் இனிய நண்பர் வர்ண இராமேஸ்வரன் அவர்களின் மறைவு (செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி 2021) எமக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. எம்முடன் நன்கு பழகிய சில நண்பர்களை, உறவுகளை கொரோனா பேரிடர் காலத்தில் காலன் எம்மிடம் இருந்து திடீரெனப் பிரித்துவிட்டது மட்டுமல்ல, கடந்த சில காலமாக, உறவினர்களின், நண்பர்களின் இறுதிச் சடங்குகளில்கூட பங்குபற்ற முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

மகாஜனக்கல்லூரி பழைய மாணவரான, இசைக் குடும்பத்தில் பிறந்த இவரை எங்கள் பழைய மாணவர் சங்க நிகழ்ச்சிகளில் அடிகடி சந்தித்திருக்கின்றேன். இதைவிடக் கலைவிழாக்களிலும், பல அரகேற்ற நிகழ்ச்சிகளிலும் பலமுறை சந்தித்தித்து உரையாடியிருக்கின்றேன். ஆரம்ப கல்வியை ஞானோதய வித்தியாசாலையிலும், உயர் கல்வியை மகாஜனக் கல்லூரியிலும் கற்றவர். மிகவும் அன்பாகப் பழக்ககூடிய நல்ல நண்பர். கனடாவில் உள்ள வர்ணம் இசைக்கல்லூரி அதிபரான இவர், படித்த கல்லூரிக்குத் தன்னால் இயன்ற அளவு உதவ வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். இவரது தந்தைதான் அளவெட்டியைச் சேர்ந்த கலாபூசணம் வர்ணகுலசிங்கம் அவர்கள். தாயாரின் பெயர் மகேஸ்வரி. இராமேஸ்வரன் பண்ணிசையில் மட்டுமல்ல, மிருதங்கம், ஆர்மோனியம் போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதிலும் கைதேர்ந்தவர். இவர் யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் இராமநாதன் நுண்கலைப்பிரிவில் இசைபயின்று ‘இசைக்கலைமணி’ என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து விரிவுரையாளராகவும் அங்கு பணியாற்றினார்.

தாயக நினைவுகளை மீட்கும் ‘தாயகக் கனவுடன் சாவினைத்தழுவிய சந்தனப் பேழைகளே, இங்கே கூவிடும் எங்கள் குரல் மொழி கேட்கிறதா?’ போன்ற பல பாடல்களை இவர் பாடியதன் மூலம் தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். கனடா நாட்டுக்குப் புலம்பெயர்ந்தபின் இங்கே ஒரு இசைக்கல்லூரியை ஆரம்பித்து, அதன் மூலம் தமிழ் இசைத்துறையில் பல இளம் தலைமுறையினரை உருவாக்கி இருந்தார்.

இவரது பிரிவால் தவிக்கும் இவரது குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து, இவர்களின் இந்தத் துயரத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கின்றோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.