பெப்ருவரி 14 காதலர் தினம்!

வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’ என்றும் குறிப்பிடுவர். இத்தினத்தில் வேறுபாடு காட்டாமல் யாரும் யாரிடமும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதால், மனதால் பண்பட்ட யாரும் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அதே சமயம் காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த, அல்லது பரிமாறிக்கொள்ள இந்த நாள் உகந்ததாகவும் இருப்பதால், ‘காதலர்கள் தினம்’ என்றும் குறிப்பிடுவர். சில நாடுகளில் 9 நாட்கள் இதைக் கொண்டாடுவர். காதலைக் கொண்டாடாத நாடுகளே இல்லை என்பதால், தொடக்கத்தில் அன்பைப் பரிமாற காதலர்கள் இயற்கை தந்த மலர்களையும், அவர்களுக்குப் பிடித்தமான இனிப்பு போன்றவற்றையும் பரிமாறினர். அதன் பின் கையால் எழுதிய வாழ்த்து மடல்களையும், தொடர்ந்து அச்சு யந்திரங்கள் வந்ததால் அச்சிட்ட வாழ்த்து மடல்களைப் பரிமாறும் வழக்கமும் அறிமுகமானது.

வெலன்ரைன் தினம் எப்படி அறிமுகமானது என்பதைப் பார்ப்போம். மூன்றாம் நூற்றாண்டில் ரோமானிய அரசனான இரண்டாம் கிளாடியஸ் பேரரசர் இரண்டு பேருக்குத் தண்டனை கொடுத்து அவர்களை பெப்ரவரி 14 ஆம் திகதி தூக்கிலிட்டார். வெவ்வேறு ஆண்டுகளில் அவர்கள் தூக்கிலிடப் பட்டாலும் அவர்களைப் போன்ற தியாகிகளுக்கு வெலன்ரைன் என்று பெயரிட்டார்கள். பெப்ரவரி 14 ஆம் திகதி அன்று நடந்ததால், அவர்கள் செய்த தியாகம் புனித காதலர் தினமாகப் 14 ஆம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப் படுகின்றது. இதைப்பற்றி, ‘செயிண்ட் வெலன்ரைன் தினத்திற்கானது இது, ஒவ்வொரு பறவையும் தன்னுடைய இணையைத் தேடி வரும்போது’ என்று ஜெப்ரி சாஸர் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆங்கிலத்தில் ‘லவ்’ என்று சொன்னால் அது அன்பைக் குறிக்கும். யாரைப் பார்த்தும் ‘லவ்யூ’ சொல்ல முடியும், தவறாக எடுக்க மாட்டார்கள். ஆனால் தமிழில் அப்படி அல்ல, அன்பு என்ற சொல்லை இன்னும் விளக்கமாக, தெளிவாகப் பிரித்திருக்கிறார்கள். அன்பு, பாசம், காதல், நேயம், பக்தி என்று அன்புக்குத் தனித்தனியாக விளக்கம் தந்திருக்கிறார்கள். 8 ஆம், 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த நாயன்மார்களின் பாடல்களில் இருந்து ஓரளவு இதைப் புரிந்து கொள்ள முடியும். அளவுகடந்த பக்தி எப்படித் தெய்வீகக் காதலாகிறது என்பதைப் பாருங்கள். காதலர்கள் கிளியை, அன்னத்தை, புறாவை எல்லாம் தூது விடுவார்கள். ‘சிறையாரும் மடக்கிளியே இங்கே வா, துறையாரும் கடல் தோணிபுரத்து ஈசன் துளங்கும் இளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயோ..? என்று திருஞானசம்பந்தர் பாடுகின்றார். ‘முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள், பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள், தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள், தலைப்பட்டாள் நங்கை தலைவன் தானே’ என்று திருநாவுக்கரசர் பாடுகின்றார். ‘மலர்ச்சோலைப் பசுங்கிளியே சொல்லுங் குருநாதர் மாலைதனை நீ வாங்கி வா’ என்று காங்கேசந்துறை இறங்கணியவளை பெண்ணொருத்தி அழகன் முருகனுக்குத் தூது விடுவதாக 17 ஆம் நூற்றாண்டில் வரதபண்டிதர் பாடுகின்றார்.

உலகெல்லாம் காதலர்கள் இருப்பதால், அன்பைப்பரிமாற வயதெல்லை இல்லை என்பதால் உலகெங்கும் இப்போது கொண்டாடப் படுகின்றது. சொல்லாத காதலைச் சொல்வதற்குச் சிறந்த நாள் மட்டுமல்ல, ஒருதலைக்காதல் உடைந்து போவதும் இந்த நாளில்தான். சில சமூக மக்களிடையே காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே, சிலருக்குக் கசப்பதும் உண்டு. மேலை நாட்டுப் பண்பாடுகளை எங்களிடம் திணிக்கிறார்கள் என்று அரசியல் செய்பவர்களும் உண்டு. இதய வடிவலான உருவம், இரட்டைப்புறாக்கள், புறாக்கள் தூதுபோவது போன்ற ஓவியம், சிறகுகளுள்ள தேவதையின் உருவம், மன்மத அம்புகள் போன்றவற்றைக் காதலர் தின குறியீடுகளாகச் சிலர் பாவிப்பர். பொதுவாக சிகப்பு ரோஜா மலர்கள்தான் கொடுப்பார்கள். 19 ஆம் நூற்றாண்டில் வாழ்த்து மடல்களை இங்கிலாந்தில் எஸ்தர் ஹாவிலண்ட் என்பவர்தான் கையால் வரைந்து விற்பனை செய்யத் தொடங்கினார். நத்தார், புதுவருட வாழ்த்து மடல்களுக்கு அடுத்ததாக அதிகம் விற்பனையாகும் மடல்கள் காதல்தின வாழ்த்து மடல்கள்தான். இங்கே வடஅமெரிக்காவில் பெண்களைவிட ஆண்கள்தான் வெலன்ரைன் தினத்திற்காக அதிகம் செலவிடுவதாகக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கட்டுரையை எழுதும் போது, வெலன்ரைன் தினத்திற்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று பின்நோக்கிச் சென்று பார்த்தேன். ஒரு எழுத்தாளன் என்ற வகையில் அதிகம் வாசிக்கப்படும் கதையும் காதலர்தினக் கதைதான் என்பதை எனது எழுத்து அனுபவத்தில் புரிந்து கொண்டேன். விகடனில் வெளிவந்த எனது முதற்கதை ‘காதல் என்பது.’ காதல் திருமணம் செய்த இருவரின் புரிந்துணர்வு பற்றிய கதை. ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கனடா உதயன் பத்திரிகையில் காதலர்தினக் கதை எழுதிவந்தேன். தொடர்ந்து 16 வருடங்கள் காதலர்தினக் கதை எழுத முடிந்ததால் அதுவே ஒரு சாதனையாகி விட்டது. ‘என்காதலி ஒரு கண்ணகி’ என்ற சிறுகதைத் தொகுப்பாக அவற்றை வெளிட்டிருந்தேன். ஆனந்தவிகடன் ஆசிரியர் காதலர்தின மலரில் வெளியிட காதலர்தினக் கதை ஒன்று கேட்டிருந்தார். ‘அவளுக்கு ஒரு கடிதம்’ என்ற கதையை அனுப்பி வைத்தேன். அந்த மலரில் அதிக வாகர்கள் வாசித்த, விமர்சித்த கதை அது என்று ஆசிரியர் பின்பு குறிப்பிட்டிருந்தார். அவர் தந்த விமர்சன கடிதங்களை வாசித்த போது அதிக வாசகர்கள் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழக மாணவிகள் என்பது தெரிய வந்தது. இந்தியாவைவிட இலங்கை, லண்டன், ஜெர்மனி, கனடா ஆகிய ஐந்து நாடுகளிலும் அதே வருடம், அதே மாதம் எனது காதலர்தினக் கதைகள் வெளிவந்து சாதனை படைத்திருந்தது. வேறு எந்த மொழியிலும் இப்படியான ‘காதலர்தின’ சாதனை இதுவரை இடம் பெறவில்லை.

பிரான்ஸ் நாட்டில் காதலர் தினத்தை ‘செயிண்ட் வெலன்ரைன்’ என்றும், போத்துக்கல் நாட்டில் ‘ஆண்கள்-பெண்கள் தினம்’ என்றும், சுவீடன் நாட்டில் ‘அனைத்து இதயங்களின் நாள்’ என்றும், பின்லாந்தில் ‘நண்பர்கள் தினம்’ என்றும், துருக்கியில் ‘இனிய இதயங்களின் தினம்’ என்றும், கௌதமாலாவில் ‘காதல்-நட்பு பாரட்டுத் தினம்’ என்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘இதயங்களின் தினம்’ என்றும் இப்படி ஒவ்வொரு நாட்டவர்களும், அன்பைப் பரிமாறுவதற்கு ஏதோ ஒரு பொருத்தமான பெயரைச் சூடியுள்ளார்கள். யப்பான் நாட்டில் பெண்கள்தான் இத்தினத்தில் ஆண்களுக்கு இனிப்புக் கொடுக்க வேண்டுமாம். யார் அதிக இனிப்பு சேகரிக்கிறார் என்பதில் இருந்து அவரது பிரபலம் வெளிப்படுமாம். இதோ யப்பானியக் கவிதையில் இருந்து சில வரிகள்.

என் காதலனே, ஆடை ஒருபுறம் மாறிட கனவு வரும்
உண்மையாக உன்னையே நேரில் கண்டது போல!
சேராவிடினும் நான் துன்புறமாட்டேன், இந்த தலையணையை
நான் என்று எண்ணிடுவாய் அணைத்து உறங்கிடுவாய்!

சங்க இலக்கியத்தை எடுத்துப் பார்த்தால், காதலர்கள் ஊடலும் கூடலும் பிரிதலும் நோதலும் இரங்கலுமாகத் தம்முள் கொள்ளும் காதலுணர்வுகள் சொல்லிப் புரிய வைக்க முடியாதவை. இப்போது ஆறாம்நிலத்திணையான கனடா பனிப்புலத்தின் ‘உருகுதலும்’ இந்த ஐந்துடன் சேர்ந்து கொள்கிறது. காதலர் தினத்தைத்தான் அன்று தமிழர்கள் ‘காமன் பண்டிகை’ அல்லது ‘இந்திரவிழா’ என்று 28 நாட்கள் கொண்டாடினார்கள். அந்த நாளில் தமிழர் கொடுத்த காதலர் தினப் பரிசு என்வென்று பாருங்கள், ‘மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே தேனே..’ என்று வார்த்தைகளால் காதலிக்குப் புகழாரம் சூட்டினார்கள். அப்படிப் பெண்களை வர்ணிக்கும்போது, வேறு எந்த ஒரு பரிசும் அதற்கு நிகராகாது என்பதையும் ஆண்கள் தெரிந்து வைத்திருந்தனர்.

1999 ஆம் ஆண்டு காதலர்தினம் என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்று வெளிவந்தது. குணால், சோனாலி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது, ஒவ்வொருவர் மனதிலும் தங்கள் அனுபவம் என்ற சின்னதான ஒரு குறும்படம் ஓடலாம். தோல்விகளைக் கண்டு மனம் தளராதீர்கள், வாழ்ந்து காட்டுங்கள். நீங்கள் நினைப்பது போல, ‘வெற்றிகள் எல்லாம் வெற்றிகளுமில்லை, தோல்விகள் எல்லாம் தோல்விகளுமில்லை! காதல் வலிகளும் ஒரு நாள் கடந்து செல்லும்.’

‘காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!’

என்று புதுமைக்கவி பாரதியும் பாடியிருக்கின்றான். ஆதலினாற் காதல் செய்வீர் உலகத்தீரே!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.