குழந்தைகள் பக்கம்- பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்': இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப் பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. - பதிவுகள் -


கனடா தமிழர்களின் வரலாறு இந்த மண்ணில் சுமார் 40 வருடங்களாக இருக்கின்றது. தமிழர்கள் ஏனைய துறைகளில் காட்டும் ஆர்வத்தைச் சிறுவர் தமிழ் இலக்கியத்தில் தற்போது காட்டவில்லை என்பதே எனது சொந்தக் கருத்தாகும். இன்றும் அந்தக் குறை சரிவர நிவர்த்தி செய்யப்படவில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர ஏனையோருக்கு இதில் அதிக ஆர்வம் இல்லாமல் போனது மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் தமிழ் கற்பதில் அடுத்த தலைமுறையினருக்கும் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. தமிழ் சமூகம் மட்டுமல்ல, தமிழ் பெற்றோர், தமிழ் ஆசிரியர், பிள்ளைகளுக்கும் இந்தப் பின்னடைவில் முக்கிய பங்குண்டு. ஊரிலே தமிழ் சூழலில் வளர்ந்ததால் எங்களுக்குத் தமிழ் மொழி கற்பதில் எந்தக் குறையும் இருக்கவில்லை. புலம் பெயர்ந்த மண்ணில் தமிழ் மொழி தானாக வளரப் போவதில்லை என்பதை நாம் அறிவோம். ஆனாலும் கடந்த 40 வருடங்களாக இந்த மண்ணில் தமிழ் மொழி நிலைத்து நிற்க வேண்டும் என்பதில் தன்னார்வத் தொண்டர்களாகத் தமிழ் கற்பித்தவர்களையும், அதற்கு நிதி உதவி வழங்கியதன் மூலம் மிகவும் ஆர்வத்தோடு ஈடுபட்டவர்களையும், தமிழ் சிறுவர் இலக்கிய நிகழ்வுகளை தங்கள் ஊடகங்களில் பதிவு செய்து ஆக்கமும் ஊக்கமும் தந்தவர்களையும் நாம் கட்டாயம் பாராட்டியே தீரவேண்டும். இன்றும் கனடாவில் தொடர்ந்தும் தமிழ் நிலைத்து நிற்பதற்கு இவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதையும் வருங்காலத் தலை முறையினர் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் தானாகவே வளரும் என்று வெறும் வார்த்தைகளைச் சொல்லித் தட்டிக் கழிப்பவர்களுக்கு வித்தியாசமான மேலை நாட்டுக் கலாச்சார சூழலில் நாம் வாழ்வது புரியவில்லை என்றே கருதவேண்டும். தமிழகத்தில் இருந்து வேலை தேடிச் சென்று கயானா நாட்டில் வாழும் பல தமிழர்களின் தலைமுறையினர் தமிழை மறந்து போனதற்குக் காரணம் என்னவென்று நாம் அறிவோம். அதே நிலை கனடா தமிழர்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதும் அதுவே எமக்கு எப்பொழுதும் ஒரு படிப்பினையாகவும் இருக்கும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கனடவில் வாழப்போகும் அடுத்த தலைமுறைக்கு இதைப்பற்றித் தெரியப் படுத்த வேண்டும் என்பதாலும், ஆரம்ப காலத்தில் தமிழ் மொழி எப்படி இந்த மண்ணில் தக்க வைக்கப்பட்டது என்பது பற்றியும்  ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் இச் சந்தர்ப்பத்தில் கனடாவில் முக்கியமாக அதிக தமிழர்கள் வாழும் ஒன்ராறியோவில் சிறுவர் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிப் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

நாங்கள் கனடா வந்தபோது பெரிய அளவில் தமிழர்கள் கனடாவில் இருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழர்கள் இருந்தார்கள். தமிழ் மொழி கற்பதற்கான வசதிகளோ, அதற்கான சூழலோ பெரிதாக இருக்க வில்லை. தமிழ் கற்பதில் தங்கள் பிள்ளைகளை ஒருசில பெற்றோரைத் தவிர மற்றவர்கள் ஈடுபடுத்தவில்லை. காரணம் புதிய இடம் என்பதால் தங்கள் இருப்பைத் தக்க வைப்பதிலும், தங்கள் குடும்ப நிதி நிலமையைச் சீர்செய்வதிலும் அதிக கவனம் செலுத்தினார்கள். பிறந்த மண்ணிலே அதாவது இலங்கையில் போர் முடிவடைந்தால் திரும்பிச் செல்வதும் அவர்களில் சிலரின் நோக்கமாகவும் இருந்தது. அதுமட்டுமல்ல, அதிக அளவில் அப்போது தமிழர்கள் இல்லாதபடியால், ஆங்கில மொழியே தங்கள் பிள்ளைகளுக்குப் போதுமானது என்ற நோக்கத்தோடு சில பெற்றோர் செயற்பட்டனர். 1990 களின் முற்பகுதியில் வந்த தமிழ் பிள்ளைகள் தமிழ் கற்பதற்கான போதிய வசதிகள் கனடாவில் இல்லாதபடியால் அவர்களால் தாய்மொழியைச் சரியான முறையில் கற்க முடியவில்லை என்பது அவர்கள் தவறல்ல. இலங்கையில் நடந்த 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் திடீரென எதிர்பாராத வகையில் தமிழ் மக்களின் வருகை அதிகரித்தது. ரொறன்ரோவில் வருகை தந்த தமிழர் தொகை அதிகரிக்கவே தாய்மொழியாம் தமிழ் மொழியின் தேவை இந்த மண்ணில் உணரப்பட்டது. புலம் பெயர்ந்து வந்த தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் ஒன்ராறியோவில் குடியேறினர். சிறு பகுதியினர் மொன்றியல், வான்கூவர், கல்காரி போன்ற இடங்களுக்குச் சென்று குடியேறினர். புலம்பெயர்ந்த தமிழ் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொண்டு ரொறன்ரோவில் உள்ள சில பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து ‘கனடா தமிழ் பெற்றோர் சங்கம்’ என்ற பெயரில் ஒரு சங்கத்தை ஆரம்பித்தோம். திரு. சின்னையா சிவநேசன், திரு. கே. கனகரட்ணம், திரு இராமநாதன் ஆகியோர் எனது காலத்தில் தலைவராக இருந்தார்கள். நான் பொருளாளராகவும், அதன் பின் செயலாளராகவும் இருந்தேன். அதிபர் பொ. கனகசபாபதி, பேராசிரியர் இ.பாலசுந்தரம், திரு. சாள்ஸ் தேவசகாயம், அடிகளார், திரு. சிவநாயகமூர்த்தி. திரு. ராமச்சந்திரன் போன்றவர்கள் எனது காலத்தில் நிர்வாகசபையில் அங்கத்தவர்களாக இருந்தது நினைவில் இருக்கின்றது.

தமிழ் மொழியின் தேவையை மனதிற் கொண்டு தமிழ் கற்பதில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காகச் சில தனியார் வகுப்புக்கள் ஆங்காங்கே ஆரம்பிக்கப்பட்டன. நிதி வசதியுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அதில் சேர்த்தார்கள். ஒன்ராறியோ கல்விச் சபைகளின் உதவியுடன் வாரத்தில் ஒரு நாளாவது தமிழைக் கற்பிக்க வேண்டும் என்ற, அனுபவம் மிக்க பெரியவர்களின் விடா முயற்சியால் வாரநாட்களில் பாடசாலை முடிந்தபின்பும், சனி ஞாயிறு காலை நேரங்களிலும் தமிழ் வகுப்புக்கள் இலவசமாக ஆரம்பிக்கப்பட்டன. எல்லா வசதிகள் இருந்தாலும் பிள்ளைகளைப் பெற்றோர் அனுப்புவதில் தயக்கம் காட்டினார்கள். இலவச கல்வியைக்கூட ஏற்பதில் தயக்கம் காட்டினர். கனடாவில் ஏனைய மொழி கற்பவர்களுக்கு அந்த நாடுகளின் ஆதரவு இருக்கின்றது. மொழி கற்பதற்கான சாதனங்கள், ஆலோசனைகள், நிதி உதவிகள் போன்றவை ஏனைய மொழி கற்பவர்களுக்கு அவர்களது நாட்டில் இருந்து மேலதிகமாகக் கிடைக்கின்றன. ஆனால் எமக்கு மட்டும் அநாதைகள் போல, எதுவுமே கிடைப்பதில்லை. இங்குள்ள தமிழ் உணர்வு கொண்ட, நல்ல மனது கொண்ட எமது வர்த்தகப் பெருமக்கள் சிலரின் உதவியாலும், ஆசிரியர்களின் தன்னார்வத் தொண்டாலும் எம்மால் முடிந்தளவு தமிழ் வளர்ப்பதில் பாடுபடுகின்றோம்.

ஏனைய பாடங்களைப் படிக்கவே பிள்ளைகளுக்கு நேரமில்லை, போக்குவரத்து வசதியில்லை, இரண்டு வேலை செய்வதால் பிள்ளைகளை அழைத்துவர முடியவில்லை, நிதி நிலைமை சரியில்லை, ஆங்கிலம் பிரெஞ்சு மொழியே பிள்ளைகளுக்குப் போதுமானது என்று பலவிதமான காரணங்கள் சொல்லிச் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழ் கற்பதைத் தட்டிக்கழிக்க முற்பட்டதும் உண்டு. இதை ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் நம்பமாட்டீர்கள், அப்போது வீடு வீடாகச் சென்று, தாய் மொழியின் தேவை பற்றி பெற்றோருக்கு எடுத்துச் சொல்லிப் பிள்ளைகளைத் தமிழ் வகுப்புகளில் சேர்க்க வேண்டிய நிலையில் நாம் இருந்தோம். போதாக் குறைக்கு ஒரு வகுப்பில் குறைந்தது 25 பிள்ளைகள் இருந்தால்தான் புதிதாக ஒரு வகுப்பை ஆரம்பிக்க முடிந்தது. பாடசாலையில் ஒரு மாணவனோ அல்லது மாணவியே ஐந்தாம் வகுப்பில் படித்தால் தமிழ் வகுப்பிலும் ஐந்தாம் வகுப்பில்தான் படிக்க முடியும். அடிப்படை தமிழ் எழுத்துக்களே தெரியாத ஒரு மாணவனை எப்படி ஐந்தாம் வகுப்பில் படிக்க வைப்பது என்பது போன்ற பிரச்சனைகளை ஆசிரியர்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. 20 பிள்ளைகள் இருந்தால் மிகுதி ஐந்து பிள்ளைகளுக்காக வகுப்பை மூடாமல், ஆசிரியர்களே சில பிள்ளைகள ஏற்றி இறக்க வேண்டியிருந்தது. ஒரு வகுப்பை மூடும் போது ஆசிரியரின் வேலையும் பறிபோகும் நிலை இருந்ததால், இதில் சுயநலமும் கலந்திருந்தது. எவ்வளவோ கஷ்டப்பட்டுத் தொடங்கிய வகுப்பை, எங்கே தமிழ் பிள்ளைகள் குறைவாக இருந்தார்களோ அந்த வகுப்புகள் மூடப்படும் போது ஏனைய இனத்தவர்கள் தங்கள் வகுப்புக்களை எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் அங்கே ஆரம்பித்து விடுவார்கள். எம்மைவிட்டுப் போனது போனதுதான். சர்வதேச மொழித் திட்டத்தின் கீழ் ரொறன்ரோ கல்விச் சபையில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராக நான் கடமையாற்றுவதால், கடந்த இருபத்தி மூன்று வருடங்களாக இத்துறையில் பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. சில வகுப்புகளில் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் ஒரு வகுப்பிலே வைத்துப் படிப்பிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. கிழமை நாட்களில் அதே வகுப்பில் படிப்பிக்கும் ஆசிரியர்கள் சிலருக்குப் புதிதாகப் புலம்பெயர்ந்த எங்களை ஏற்றுக் கொள்வதிலோ அல்லது ஒன்றுபட்டுச் செயற்படுவதிலோ விருப்பமில்லாது இருந்தது. இக்கால கட்டத்தில் இருந்த தமிழ் தொடர்பு சாதனங்களும், சில ஊடகங்களும் மாணவர்களின் வருகையை அதிகரிக்க எங்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்ததை மறக்க முடியாது.

அனேகமான தொடர்பு சாதனங்கள், ஊடகங்கள் தமிழ் மொழியின் தேவை கருதி சிறுவர்களுக்கான ஆக்கங்களைச் சிறுவர் பகுதி என்ற பகுதியை ஆரம்பித்ததன் மூலம் முன்னெடுத்துச் சென்றன. ஈழத்தில் நடந்த விடுதலைப் போராட்டத்தின் நோக்கமும் இதற்கு வலுச்சேர்ப்தாக இருந்தது. புலம் பெயர்ந்த மண்ணில் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு அப்போது இருந்த விடுதலை இயக்கங்களின் பெரும் ஆதரவும் இருந்தன. எந்த மொழியை, எந்த இனத்தை அழிக்கிறார்கள் என்று தமிழ் மக்கள் புலம் பெயர்ந்தோமோ அந்த மொழியும், இனமும் இந்த மண்ணில் அழிந்து போவதற்குப் பெற்றோர்கள் காரணமாக இருக்கக்கூடாது என்பதைப் பெற்றோருக்கு மிகவும் தெளிவாக மேடைகளிலும், தொடர்பு சாதனங்கள் மூலம் எடுத்துச் சொன்னோம். சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கும், தமிழ் இனம் அழிந்து போவதற்கும் என்ன தொடர்பு என்று கேட்டார்கள். இப்பொழுதும் அதைத்தான் கேட்கிறார்கள். ‘மொழி அழிந்தால் இனம் தானாகவே அழியும்’ என்பதை நான் ஒவ்வொரு மேடையிலும், ஒவ்வொரு ஆக்கங்களிலும் எடுத்துச் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றேன். கோடிக்கணக்கான தமிழர்கள் இருக்கும் போது இனம் எப்படி அழியும் என்பது அவர்களின் தொடர் வாதமாக இருக்கின்றது.

இதற்கு நல்லதொரு உதாரணம், சமீபத்தில் எமது பழைய மாணவர் சங்கம் கனடாவில் எமது தமிழ் மாணவர்களுக்காக நடத்திய பொதுஅறிவு, கணித, போட்டிகளின் போது ரொறன்ரோவில் சுமார் 300 மாணவர்களின் பெற்றோர்கள் கேள்விகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து தரும்படி கேட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட மொன்றியல் தமிழ் பெற்றோர் சுமார் 200 பேர் பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்து தரும்படி கேட்டார்கள். ஆக எனக்குத் தெரியக் கூடியதாக 500 பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்படுவது போல மொழி மாற்றம் செய்யப்பட்டிருப்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இது போல பல தமிழ் பிள்ளைகள் தமிழ் மொழியை உதாசீனம் செய்திருப்பதும் தெரியும். நீண்ட காலத்தை எடுத்துப் பார்த்தால் இந்தத் தமிழ் பிள்ளைகளின் சந்ததியினரும் தமிழ் பேசாத தமிழ்கனடியர்களாக மாறப் போகிறார்கள். 500 பேர் 5000 மாறி, 5000 காலப்போக்கில் 50,000 மாறும்போது இந்த மாற்றத்தின் பாதிப்பைப் புரிந்து கொள்வோம். நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், கயானா நாட்டுத் தமிழர்களுக்கு என்ன நடந்ததோ அதுதான் கனடாவிலும் நடக்கப்போகின்றது. மதம் மாற்றினால் மட்டும் ஆத்திரமடையும் தமிழர்கள் மொழி மாற்றம் செய்யப்படும் போது, இதைப்பற்றி ஒன்றுமே தெரியாதமாதிரியே இருந்து விடுவார்கள்.

ஒவ்வொரு மேடையிலும், ஒன்று கூடலிலும் இதையே மீண்டும் மீண்டும் எடுத்துச் சொன்னோம். ஒன்ராறியோ அரசின் ஆதரவுடன் பெற்றோர் ஆசிரியர் மாணவர்களின் உதவியுடன் பல பகுதிகளிலும் தமிழ் வகுப்புக்கள் மெல்ல மெல்ல விரிவடைந்தன. தொடக்க காலத்தில் சுமார் 3500 பிள்ளைகள் வரை தமிழ் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர். சுமார் 50,000 மேற்பட்ட தமிழ் பிள்ளைகள் இருந்தாலும், சிறிய தொகையினரே தமிழ் மொழி கற்க முன் வந்தார்கள். ஆனால் தாயகத்தில் போராளிகள் மௌனித்த காரணத்தால் நடந்த எதிர்பாராத நிகழ்வின் காரணமாக 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின் கனடாவில் தமிழ் கல்வி கற்கும் பிள்ளைகளின் வருகையில் திடீரெனப் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் புகுந்த மண்ணில் தமிழ் மொழி வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது. இனியேன் தமிழ் கற்கவேண்டும் என்ற நிலைக்குப் பெற்றோர்கள் தள்ளப்பட்டார்கள். மொழி அழிந்தால் அந்த இனமே அழிந்து விடும் என்ற பயம் தமிழர்களாகிய எங்களுக்கு அப்போது ஏற்பட்டது.

நான் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக 2012 ஆண்டு பொறுப்பேற்ற போது பெற்றோர், ஆசிரியர்களுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் கட்டி எழுப்பினோம். இரவு பகலாகத் தமிழ் ஆர்வலர்கள் ஒன்றுபட்டு உழைத்ததன் பலன் கிடைத்தது. மீண்டும் தமிழர்களின் வீடுவீடாகச் சென்று பெற்ரோரைச் சந்தித்தோம். தமிழ் பிள்ளைகளின் வருகை அதிகரித்ததால் சுமார் 3000 பிள்ளைகள் வரை தமிழ் மொழிப் பரீட்சைக்கு அப்போது விண்ணப்பித்திருந்தார்கள். இன்றும் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தினர் தமிழ் கல்வி அறிவை ஊட்டுவதோடு, தன்னார்வத் தொண்டர்களாக இணைந்து மாணவர்களுக்கான தமிழ் மொழிப் பரீட்சையைக் கட்டணமின்றி வைப்பதால், இந்த மண்ணில் தமிழ் மொழி அழிந்து போகாமல் நிலைத்து நிற்பதற்குப் பெரிதும் உதவியாக இருக்கின்றனர். தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளோடு ஒப்பிடும் போது ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் அதிக ஆசிரியர்களையும், மாணவர்களையும் கொண்ட பெரிய சங்கங்களில் ஒன்றாகச் சிறந்ததொரு நோக்கத்தோடு பணியாற்றும் சங்கமாக இருக்கின்றது. மரபுத் திங்களாகத் தைமாதத்தைக் கனடா பிரகடனப் படுத்தினாலும்,  தொடக்கத்தில், அதாவது முப்பது வருடங்களுக்கு முன் 1990 களில் தமிழ் மொழி கற்க வேண்டும், இந்த மண்ணில் தமிழ் நிலைத்து நிற்க வேண்டும் என்று இருந்த ஆர்வம் இன்று பலரையும் விட்டுப் போய்விட்டது. ஊடகங்களில் ஒரு சில ஊடகங்களைத் தவிர ஏனைய ஊடகங்கள் சிறுவர் பகுதிகளை நிறுத்தி விட்டன. தமிழில் மட்டுமே வந்து கொண்டிருந்த சில ஊடகங்கள் ஆங்கில மொழிக்கு மெல்ல நகரத் தொடங்கிவிட்டன. பிள்ளைகளிடையே தமிழ் வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டது. இசை, நடன ஆசிரியர்கள் சிலர் ஆங்கிலத்தில் எழுதித்தான் படிப்பிக்கிறார்கள். குடும்ப ஒன்று கூடல்களில்கூட பிள்ளைகளுக்காகப் பெறோரும் ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கிவிட்டார்கள். கொரோனா வைரஸின் தனிமைப்படுத்தல் காரணமாகப் பாடசாலைகள் 2020 மார்ச் மாதம் 17 ஆம் திகதியில் இருந்து மூடிக்கிடக்கின்றன. மீண்டும் செப்ரெம்பர் மாதம்தான் பாடசாலைகள் ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இணையத்தளங்கள் மூலம் மொழி கற்பிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. சமீபத்தில் எடுத்த ஒரு புள்ளி விபரக் குறிப்பின்படி சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ் தாய்மொழிக் கல்வி கற்கும் மாணவர்கள் ஏனைய மாணவர்களைவிட அதி திறமைசாலிகளாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. காரணம் என்னவென்றால், அவர்கள் பாடசாலையில் கற்கும் அதேபாடங்களை தமிழில் மாணவர்கள் முற்கூட்டியே கற்றுக் கொள்வதால் ஆசிரியரின் கேள்விகளுக்கு மொழி மாற்றத்தின் மூலம் இலகுவாகப் பதிலளிக்க முடிகின்றது.

கனடாவில் தமிழ் கற்பதற்கு ஏற்ற பாடநூல்களோ அல்லது கானொளிகளோ போதிய அளவு 1990 களின் ஆரம்பத்தில் இருக்கவில்லை. அக்கால கட்டத்தில் அவுஸ்ரேலியாவில் தயாரிக்கப்பட்ட மாவை ஆனந்தனின் பாப்பா பாரதி என்ற கானொளி வெளியிடப்பட்டாலும் பலர் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. எனவேதான் கனடாவில் இருந்த கல்விமான்கள் சிலர் ஒன்று சேர்ந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்று திட்டம் வரைந்தனர். இவர்களின் உதவியுடன் தமிழ் மொழியைக் கனடாவில் கற்பிப்பதில் தொடக்கத்தில் இருந்த குறைபாடுகளை நீக்குவதற்காகக் குரு அரவிந்தன் போன்றவர்கள் நீண்ட நேரமெடுத்து எடுத்த முயற்சிகள் நல்ல பலனைக் கொடுத்திருக்கின்றன. ‘தமிழ் ஆரம்’ என்ற பெயரில் கனடிய சூழலுக்கு ஏற்ப குரு அரவிந்தனால் 1990 களின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சிறுவர் கல்விக்கான இலவச ஒளித்தட்டுக்கள், ஒலித் தட்டுக்கள், பாடநூல்கள், பயிற்சிப் புத்தகங்கள், சிறுவர் பாடல்கள், சொல் தேடல்கள், சிறுவர் நாடகங்கள் போன்றவை கனடியத் தமிழ் சிறுவர்களுக்கு இப்பொழுதும் பெரும் துணையாக இருக்கின்றன. இந்த வீடியோ ஒளித்தட்டை குரு அரவிந்தன் மிகவும் சிறப்பாக நெறியாள்கை செய்திருந்தார். இதை வெளியிடும் முயற்சிக்கு உறுதுணையாக நின்ற மகாஜனக்கல்லூரி முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி, கவிஞர் கந்தவனம், பேராசிரியர் இ. பாலசுந்தரம், திருமதி. விமலா பாலசுந்தரம், ம. சே. அலெக்ஸாந்தர், வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்), மாலினி அரவிந்தன், இதை ஒளிப்பதிவு செய்த நண்பர் நேரு, இசை அமைத்த நண்பர் முல்லையூர் பாஸ்கரன், ஆசிரியைகளாகப் பங்கேற்ற திருமதி கோதை அமுதன், அருட்செல்வி மற்றும் அதில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளைத் தந்து உதவிய நடன ஆசிரியர்கள், பங்கு பற்றிய சிறுவர், சிறுமிகள் எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அன்று எல்லோரும் தன்னார்வத் தொண்டர்களாக சேர்ந்து விதைத்த விதை இன்று தமிழ் என்னும் நிழல் பரப்பிப் பெரு விருட்சமாகக் கனடாவில் நிற்கின்றது.

‘ஆக்க இலக்கியத் துறையில் தனியிடம் பிடித்துள்ள குரு அரவிந்தன் அவர்களை புகலிட நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சியின் அவசியம் அறிந்து, தமிழ் மொழி கற்கும் மாணவருக்குரிய சிறுவர் இலக்கியம் படைத்த வகையிலும் அவரைத் தமிழ் ஆர்வலர் அனைவரும் சேர்ந்து பாராட்டுவோம்’ என்று பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் குரு அரவிந்தனின் 25 வருட கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டிக் கனடா தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் வாசித்த தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றார். இதைப் போலவே எதிர் காலத்தில் இந்த மண்ணில் தமிழ் இனம் நிலைத்து நிற்கவேண்டும் என்ற ஆர்வத்தோடு, இதை உணர்ந்து இன்று பலரும் சிறுவர் தமிழ் இலக்கிய ஆக்க முயற்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தனிப்பட்ட முறையில் அவர்களின் பெயரை இங்கே குறிப்பிடவில்லை. இது போன்ற பாடல்கள் மூலமும் சிறுவர்களுக்கான நாடகம், திரைப்படம் போன்றவை மூலமும் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள சிறுவர்களைத் தமிழ் மொழியில் நன்கு பரீட்சயமானவர்களாக உருவாக்க முடியும். புலம் பெயர்ந்த மண்ணில் தமிழ் நிலைத்து நிற்க இதுவே பலமாக இருக்கும். எமது பிள்ளைகளுக்கு அடிப்படை தமிழ் மொழியைப் போதிக்காமல் தமிழில் அவர்கள் கலாநிதிப்பட்டம் எப்படிப் பெறுவது என்று யோசிக்கும் பெற்றோர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்? சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ் கல்விகற்ற மாணவர்களில் முதலிடதில் இருந்த தமிழ் மொழி இன்று மாணவர்களின் வருகை குறைவால் இரண்டாவது இடத்திற்குப் பின் தள்ளப்பட்டிருக்கின்றது என்பதையும் தமிழ் பெற்றோர்கள், ஆர்வலர்கள் இப்போதாவது கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மொழி அழிந்தால் தமிழ் இனமும் அழிந்து விடும் என்பதை நாம் நினைவில் கொள்வோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.