இலங்கையிலிருந்து 'உதயம்' நிறுவன வெளியீடாக வெளிவந்த சிறுவர் மாத இதழ் 'அர்ச்சுனா'. தமிழகத்தில் வெளியான 'கண்ணன்', சிறுவர் இதழைப்போன்றதொரு சிறுவர் இதழ். அழகான ஓவியங்களுடன், சிறுவர்களுக்குப் பிடித்த துணுக்குகள், கட்டுரைகள், கதைகள் & கவிதைகளெனப் படைப்புகள் நிறைந்து கிடக்கின்றன. போர்ச்சூழலில் நான்கு வருடங்களும் (1986 - 1990), போரின் முடிவுக்குப் பின்னர் ஒரு வருடமும் (2011 - 2012) வெளியாகியுள்ளது. அண்மையில்தான் இச்சிறுவர் இதழை அவதானித்தேன்.

குழந்தைகள் பலர் அங்கத்தவர்களாகச் சேர்ந்துள்ளார்கள். ஆர்வத்துடன் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்கள். ஆக்கங்களை எழுதியுள்ளார்கள். அவ்வகையில் குழந்தைகள் வாழ்வில் ஆரோக்கியமானதொரு பணியினைச் செய்திருக்கின்றது 'அர்ச்சுனா'.

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குழந்தை இலக்கியத்துக்கு வளம் சேர்த்த 'அர்ச்சுனா' இதழைப்பற்றி ஏன் யாரும் பெரிதாகப் பேசுவதில்லை? வியப்பாகவுள்ளது.

எம் பால்ய பருவத்தில் இது போன்றதொரு இலங்கை இதழுக்காக ஏங்கியிருக்கின்றோம். சிரித்திரன் வெளியிட்ட 'கண்மணி' ஓரிரு இதழ்களுடன் நின்று போனது துரதிருஷ்ட்டமானது. நீண்ட காலம் வெளியான 'வெற்றிமணி' முக்கியமான சிறுவர் இதழ். ஆனால் குழந்தைகளைக் கவரும் ஓவியங்கள் நிறைந்து வெளிவராதது எம்மைச் சிறிது ஏமாற்றத்துக்குள்ளாக்கியது உண்மை. ஆனால் இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் சிறுவர் இலக்கியத்துக்கான அதன் பங்களிப்பு பெருமைப்படத்தக்கது. முக்கியமானது. நீண்ட காலம் வெளியான சிறுவர் இதழ் அதுவொன்றே என்றும் கருதுகின்றேன்.

வெளியான அர்ச்சுனா இதழ்களை நூலகம் தளத்தில் வாசிக்க