டோக்கியோவில் தங்கிய மூன்றாவது நாள் காலையில் எங்களுக்கு ஓய்வு தரப்பட்டு, உங்களுக்கு விரும்பிய இடங்களுக்கு நீங்கள் செல்லலாம் எனச் சொல்லப்பட்டது. காலையில் எழுந்தபின் எங்கள் குழுவில் பலர் புலட் ரெயின் ஏறி டோக்கியோவின் மத்திய நகரத்திற்குச் சென்றார்கள். நாங்கள் ஏற்கனவே இரவில் டோக்கியோ பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என பிரத்தியேகமான பயணம் ஒழுங்கு பண்ணி இருந்ததால், நாங்கள் பகலில் போவதைத் தவிர்த்துக் கொண்டோம். டோக்கியோ உலகத்தில் பெரிய நகரம் அத்துடன் மொழி தெரியாது என்பதும் சிறிது பயத்தையும் அளித்தது. மொத்தமான டோக்கியோ நகரத்தில் 30 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் என்றால் பாருங்கள்! அதாவது மொத்த அவுஸ்திரேலியாவில் வாழ்பவர்களை விட 5 மில்லியன் அதிகம்.
தமிழ்நாட்டில் வாழ்பவர்களில் அரைப்பகுதியினர் ஒரு நகரில் வாழ்கிறார்கள் என்றால் எப்படி இருக்கும் ?
டோக்கியோ இப்படி பெரிதாக உருவாகுவதற்கு காரணங்கள் உள்ளது: டோக்கியோ நகரத்தின் மத்தியில் மக்கள் வாழ்வதற்குக் விலை கட்டுபடியாகாது. உதாரணமாக ஒரு பட்டதாரியின் ஆரம்ப மாத ஆரம்ப வேதனத்தில் 75 வீதத்தை, ஒரு அறை கொண்ட அடுக்கு மாடிக்குக் கொடுக்க வேண்டும். ஆனால், அந்தப் பட்டதாரி தனது வேதனத்தில் 25 வீதம் பணத்தில் டோக்கியோவுக்கு வெளியே புற நகரில் அல்லது பக்கத்து நகரில் சகல வசதியுடன் வாழ முடியும். இதனால் மாத வேதனம் பெறும் அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் சிற்றூழியர்கள் காலையில் மூன்று மணி நேரம் மாலையில், மூன்று மணி நேரங்கள் என ரெயிலில் நேரம் செலவழித்து வேலைக்கு, பல்கலைக்கழகம் எனப் போவார்கள். இவர்கள் பயணிக்க, நகரங்களை இணைக்கும் புலட் ரெயின் உதவுகிறது.
இக்காலத்தில் பலர் ரயிலில் வேலை செய்ய முடியும் . டோக்கியோ நகரின் மத்தியில் வாழ்பவர்கள் கார் வைத்திருப்பது மிகவும் செலவானது நிறுத்துமிடத்தில் அதிக பணம் கட்ட வேண்டும்: உதாரணமாக 15 நிமிடங்கள் தரித்து நிற்க 15 அமெரிக்க டொலர்கள் என எனக்குச் சொல்லப்பட்டது. இதனால் பாதைகளின் போக்குவரத்து குறைந்துள்ளது .
நாங்கள் காலையில் சென்ற இடம் அக்குவாரியம். பல விதமான கடல் வாழ் உயிரினங்கள் டொல்பின் போன்றவற்றை மிகவும் அருகாமையில் பார்க்க முடிந்தது. எனக்கு பிடித்த கடல் வாழ் முலையூட்டிகள் டொல்பின், திமிங்கிலம், சீல் எல்லாம் அங்கு இருந்தன. மிகவும் அழகான வடிவமைப்பு கொண்டது அந்த அக்குவாரியம். வெளியே நடந்து செல்லும்போது ஜப்பானியர்களின் கட்டிடங்களின் அழகியலை பார்க்க முடிந்தது. பாதைகள் சுத்தமானவை. வீதியில் சிவப்பு விளக்கில் மட்டுமே யப்பானியர்கள் கடப்பார்கள்.
அந்த இரவு குழுவாக டோக்கியோ நகரின் மத்திய பகுதியில் நடந்தபோது ஒரு வீதியில் உள்ள வீடற்ற மனிதனை மட்டும் பார்க்க முடிந்தது. அவனைப் பார்த்தபோது மனநிலை குழம்பிய ஒருவனாகத் தெரிந்தது. நான் நின்ற 18 நாட்களிலும் வீதியில் வாழ்ந்த மனிதனைக் கண்டது அதுவே முதலும் கடைசியும் ஆகும். டோக்கியோவை விட பத்து மடங்கு குறைவானவர்கள் வசிக்கும் மெல்பேர்ன் நகரில் அப்படியான சிலரை என்னால் பார்க்க முடியும்.
டோக்கியோவின் மத்திய பகுதியில் ஒரு பெரிய கூட்டம் நின்றது. நாங்களும் அங்குப் பார்த்தபோது முப்பரிமாண விளம்பரத்தில் ஒரு பூனை வருவதும் பாய்வதும் என பார்க்க முடிந்தது .டோக்கியோ நகரத்தின் முக்கிய பகுதிகள் நல்லூர் தேர்த் திருவிழா போல் முட்டி மோதியபடி நடக்க வேண்டும் நாங்கள் சென்ற முக்கியமான இடம் டோக்கியோ நகரில் அமைந்துள்ள கோபுரமாகும். அது இரவில் ஒளியுடன் இருப்பதுடன் முழு நகரத்தையும் அங்கிருந்து நாலாபக்கமும் பார்க்க முடியும் . கண்ணைக் கவரும் காட்சியாகும்
நானும் சியாமளாவும் உச்ச தளத்தில் சுற்றிப் பார்த்தபடி வந்தபோது, எங்களுடன் வந்த லீசா அழுதபடி ஒரு தூணை பிடித்தபடி நின்றாள் என்ன என்றபோது ‘உயரத்தில் எனக்குப் பயம்’ என்றார் .
ஏற்கனவே 55 வயதான மூன்று பெரிய பெண்கள் பிள்ளைகளின் தாயான லீசா, உலகம் முழுவதும் சுற்றியவள் . திருமண நாளை கொண்டாட கணவன் கொடுத்த பணப் பரிசில் இந்தப் பயணம் அவளுக்கு அமைந்தது. தனியாக யப்பான் வந்தவள் காலையில் எந்த தயக்கமும் இல்லாது டோக்கியோவிற்கு புலட் ரயிலில் சென்று வந்தாள் என்பதை அறிந்து நாங்கள் லிசாவின் துணிவைப் பெருமையாகப் பேசினோம். நிலத்தை விட்டு கண் எடுக்காது பல காலம் குளிர்பதனப்பெட்டியில் இருந்த மீனாக குளிர்ந்து விறைத்த உடலோடு, அழுதபடி இருந்த லிசாவின் கையை பிடித்தபடி லிவ்ட் வரையும் கொண்டு வந்தேன்.
அங்கிருந்து நாங்கள் நடந்து சென்ற இடம் டோக்கியோவின் சிவப்பு விளக்குப்பகுதி. ஒரு காலத்தில் அந்த தெருவில் பெண்கள் நின்றார்கள். இக்காலத்திலும் பின்னிரவில் அப்படி நிற்கலாம் என நினைக்கிறேன். நாங்கள் சென்ற காலம் உணவுண்ணும் முன்னிரவு. வழிகாட்டியின் கூற்றுபடி சிவப்பு விளக்குப் பகுதியில் பெண்கள் தற்பொழுது குறைந்துள்ளது. காரணம் இப்பொழுது அந்த இடங்கள் எல்லாம் கடைகளால் நிரம்பியுள்ளது. பல பெண்களை அப்பகுதி கடைகள் வரவேற்பு பெண்களாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் கடைக்குள் உணவுக்கு வரும்படி சிரித்தபடி கூவி அழைத்தனர்.
யப்பானில் விபச்சாரம் சட்டப்படி குற்றம், ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை சந்தித்து அவளுடன் உணவருந்திவிட்டு, அவளோடு ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று ஒன்றாக இருந்து விட்டு அவளுக்கு பணம் கொடுத்தால் அது விபச்சாரம் இல்லை. அதாவது அந்த பெண்ணின் சம்மதத்தோடு நடந்தது: தனிமனித சுதந்திரம் என்பதாகும் .
நானும் நினைத்தேன், இந்தமுறை முக்கியமாக இடைத்தரகர்களைக் குறைக்கும். அன்று இரவு யப்பானிய பொருளாதாரம் தொடர்பாக வழிகாட்டி சொன்ன விடயங்கள் என்னை சிந்திக்க வைத்தது.
நாங்கள் அவுஸ்திரேலிய வந்தத காலமது . அக்காலங்களில் (1987) ஏராளம் ஜப்பானியர்கள் உல்லாச பிரயாணிகளாக அவுஸ்திரேலியா வருவார்கள் அவர்களுக்காகவே கோல்ட் கோஸ்ட் என்ற நகரம் குயினஸ்லாண்டடில், பிரிஸ்பேன் அருகே உருவாகியது.
இரண்டாயிரத்தின் பின்பாக யப்பானியர்களை நான் அவுஸ்திரேலியாவில் காணுதல் குறைவு .காரணம் அவர்களது பொருளாதாரம் உச்சத்தில் இருந்து, பின்தங்கிவிட்டது . அவுஸ்திரேலியா விட யப்பானில் உணவு உடைகளின் விலை குறைவானது. மிகவும் நல்ல மது வகைகள் மிக மலிவானது. சிகரட்டும் அப்படியே.
யப்பானிய பொருளாதாரம் எப்படி தேங்கிவிட்டது?
தனிநபரது வருட வருமானம் அவுஸ்திரேலியாவிலும் அரைவாசி ஆகிவிட்டது . உலகத்திலே 30% வீதமானவர்கள் 65 வயதுக்கு மேல் இருக்கும் நாடு யப்பான் ஆகும் ( இந்தியா 7% அமரிக்கா 18% ஐரோப்பா 23%)அவர்களுக்கு ஓய்வூதியம் , மருத்துவம் எனப் பல தேவைகள் உள்ளது. அத்துடன் குழந்தை பிறப்பும் 1.4 % மிகவும் குறைந்துவிட்டது. வயதானவர்களை கொண்ட நாடாக யப்பான மாறிவிட்டது .
தற்போது பல நாடுகளில் இருந்து வேலைக்கு ஆட்களை வரவழைக்கிறார்கள். நாங்கள் சென்ற இடங்களில் ஹோட்டல்களில் இந்திய இளைஞர்களைக் கண்டேன். அதேபோல் பிலிபைன்ஸ் தாய்லாந்திலிருந்து வந்த இளம் பெண்கள் பலரை சந்திக்க முடிந்தது . டாக்கி சாரதிகளாக பல வெளிநாட்டர்கள் இருப்பதாக வழிகாட்டி கூறினார்.
மெல்பேனில் உள்ள இந்திய உணவகங்களின் விலையுடன் பாதி விலையில் எங்களது ஹோட்டல் அருகே உள்ள நேபாள உணவகத்தில் நாங்கள் உண்டதுடன் எங்களது குழுவை சேர்ந்தவர்களுடன் ஐந்து பேரை கூட்டிச் சென்றோம் . அன்று எங்களுக்கு அந்த உணவகத்தில் பெரிதான விருந்தோம்பல் நடந்தது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.