-  முன்றிலில் பெரிய நந்தியின் சிலை -

யப்பானில் உள்ள தென் பகுதி தீவான குயிசு (Kyushu) வின் உள்ளே ஒரு சிறிய நகரம் (Dazaifu) சென்றோம். அங்கு ஒரு புராதனமான ஷின்டோ கோவில் உள்ளது. அது காலை நேரம். மக்கள் அதிகமாக வந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அங்கு அந்த கோவிலின் முன்பாக நின்று மக்களை வேடிக்கை பார்த்தபடி நின்றபோது, எனக்கு ஒரு வித்தியாசமான காட்சி தரிசனமாகியது. அந்த முன்றிலில் பெரிய நந்தியின் சிலை இருந்தது. அது வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக இந்திய சிவன் கோவில்களில் கருங்கல்லால் நந்தியை பார்த்திருக்கிறேன். அது பார்த்தபோது, நிழலில் இரை மீட்டியபடி இயல்பாக படுத்திருப்பது போன்ற நினைக்கத் தோன்றும். ஆனால், இங்கு பார்த்தபோது இன்னமும் பாரமான வண்டியை இழுத்தபடி செல்லும் களைத்த காளை மாடாகத் தெரிந்தது. உருவாக்கிய கலைஞனின் எண்ணமும் அதுவாகவே இருக்க வேண்டும். அதனது முகம் தனியாக உடலைவிட மினுக்கியது காரணம் , யப்பானிய பள்ளி மாணவர்கள் வரிசையாக வந்து அந்த நந்தியின் முகத்தில் தொடுவதும் முகத்தை வைத்து அதனருகே நின்று படம் எடுப்பதுமாக இருந்தார்கள். அவர்கள் செய்வதில் ஒரு பிரார்த்தனையின் படிமம் தெரிந்தது. எல்லோரும் பாடசாலை சீருடையில் இருந்ததால் 12 வகுப்பில் படிக்கும் இளவயதினர் போலிருந்தார்கள். நந்தி சிலையருகே நாங்கள் செல்வதற்கு சந்தர்ப்பம் தராமல் தொடர்ந்து மாணவர்கள் வரிசையாக வந்தபடியிருந்தனர்.

இந்த காளையில் உருவத்தில் இரகசியம் ஏதோ இருக்கவேண்டும் என்ற என் நினைவு மனதை கோடைகாலத்து இலையானாக மொய்தபடி இருக்க அந்த ஆலயத்தின் உட்சென்றேன். ஆலயம், மரங்கள் பூங்கா என அழகான பின்னணியில் இருந்தது . இந்த ஷின்டோ ஆலயம் 903இல் இறந்த ( Michizane) மிசிசான் என்ற ஒரு அறிஞரது சடலத்தை கொயோட்டாவிலிருந்து (Kyoto) வண்டியில் வைத்து இழுத்து வந்த இந்த காளை மாடு , வண்டி இந்த இடத்தை வந்ததும் நகர மறுத்துவிட்ட தாகவும், அதனால் மக்கள் இதுவே அந்த அறிஞரின் இறுதியான இடமென நினைத்து இங்கே அவரது சடலத்தை அடக்கம் செய்து அவருக்கு சமாதி கட்டப்பட்டது. பிற்காலத்தில் இந்த சமாதியருகே இந்த ஷின்டோ ஆலயம் உருவாகியது. ஆலய முன்றலில் சடலத்தை இங்+++++++++++++++++++++ கொண்டு வந்த அந்த காளையின் உருவம் வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளது என அறிந்தேன்.

காளையை பற்றி அறிந்தாலும் பாடசாலைப் பிள்ளைகள் பயபக்தியுடன் காளையருகே செல்வதின் சூட்சுமத்தை அறிய யப்பானிய வரலாற்றைத் தோண்டினேன். ஏற்கனவே ஷின்டோ மதத்தில் இயற்கை சக்திகளை யப்பானிய மக்கள் வணங்குகிறார்கள். அவர்கள் விவசாயம், கடல்தொழில் மற்றும் வாழ்விடங்களின் பாதுகாப்பு என்பன இயற்கை சக்திகளின் தாக்கத்திலே தங்கியுள்ளது. அதற்கப்பால் நமது இந்து மதத்தைப் போல், சிறப்பாக வாழ்ந்தவர்களும் ஷின்டோ மதத்தில் தெய்வமாக்கப்பட்டுள்ளார்கள். நமது மதத்தில் பத்தினித் தெய்வமெனக் கண்ணகியை வணங்குவதுபோல், ஆனால், இங்குள்ள மிசிசான், யப்பானியர்களுக்கு நமது திருவள்ளுவர் போன்றவர். இவரது வரலாறை தெரிந்து கொள்ளும்போது யப்பானிய மக்களின் மனத்தையும் அவர்களது கலாசாரத்தையும் நமக்குத் மனக்கண்ணில் காட்டுகிறது.

     - மிசிசான், யப்பானியர்களுக்கு நமது திருவள்ளுவர் போன்றவர். -

845இல் பிறந்த இவரால், சிறு வயதில் சீனக் கவிதைகள் திறம்பட படிக்கும் திறமையுள்ளவர். அவரது 33 வயதில் ஒரு பேராசானாக உருவாகி யப்பானிய அரசருக்கு உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு விவகாரங்களிலும் ஆலோசகராகக் கடமையாற்றினார். சமூக நலத்திட்டங்கள் பலவற்றை உருவாக்கி அரசருக்கு உறுதுணையாக இருந்தார். மிசிசான் அரசரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியது, இவரைப் பிடிக்காத அரச சபை பிரபுக்கள் இவர் மீது பொய் குற்றஞ்சாட்டி இவரை அரச சபையிலிலிருந்து வெளியேற்றினார்கள் . அவர் இப்பொழுது நாங்கள் நிற்கும் இந்த சிறிய நகரத்தில் பல காலம் மிகவும் கஸ்ட சீவியம் நடாத்தினார். இறுதியில் தனது 53 வயதில் இறந்தார்.

இவர் இறந்த பின்னால் இவருக்கு எதிரானவர்களது பொய் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லையென தெரிந்து அவர் குற்றமற்றவராக மன்னரால் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின்பு இங்கு அவரது சமாதி வந்ததும் பின்பு கோயிலாக மாறியது கதையாகும்.

நான் இன்னமும் பாடசாலை மாணவர்கள் இங்கு ஏன் வருகிறார்கள் என்ற விடயத்திற்கு வரவில்லையே?

இவர் யப்பானிய மொழியில் நிகரற்ற ஒரு கவிஞராக மட்டுமல்ல, ஓவியராகவும் விளங்கினார். இதனால் இவர் யப்பானிய கலாச்சார வளர்ச்சிக்கு முக்கிய பிதாமகராகக் கருதப்படுகிறார். இவரது எழுதிய முக்கிய சுவடுகள், சித்திரங்கள் இங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளனவென அறிந்தேன்-ஆனால், அங்கு செல்லவில்லை.

யப்பானில் ரென்ஜின் (Tenjin) கல்வி மற்றும் கலைக்கு நமக்கு சரஸ்வதிபோல் தெய்வமாகக் கருதப்படுகிறது . ரென்ஜின் என்ற கலைத் தெய்வத்திற்கு தற்பொழுது 12,000 ஆலயங்கள் யப்பானில் உள்ளன.

மிசிசான் கடந்த 1,100 வருடங்களாகக் கல்வி மற்றும் கலைகளின் தெய்வமாக உருவகப்படுத்தி இந்த ரென்ஜின் ஆலயத்தில் வணங்கப்படுகிறார். இது ஒரு அறிஞருக்கு கொடுக்கும் அதி உயர்ந்த கௌரவம் என நினைத்தேன்.

பிள்ளைகள் பரீட்சைக்குப் போக முன்பு மட்டுமல்ல, உடல் நலம் குன்றியபோதும், புதிய வியாபாரம் அல்லது எந்த சுபகாரியங்கள் செய்ய முன்பு இந்த ஆலயங்களுக்கு வந்து மிசிசானை வணங்கி ஆசி பெறுவார்கள். பலர் இங்குள்ள ஷின்டோ ஆலய குருவிடம் கலந்து அவரிடமிருந்து ஆசி பெற்ற பின்பே தங்கள் சுபகாரியங்களை செய்யத் தொடங்குகிறார்கள்.

யப்பானியர்களது முன்னேற்றத்திற்கு இதை விடக் காரணம் தேவையா? கல்வி, மற்றும் கலையை வேறு எந்த சமூகமாவது இப்படி ஆராதிக்குமா?

அன்று மதியத்தில் அங்குள்ள பெரிய சந்தைக்கு போக முடிந்தது. மீன்கள் பழங்கள் அதுமட்டுமல்ல வித விதமான மதுவகைகள் வைத்து விற்றார்கள். இலவசமாக ருசி பார்க்கத் தந்தார்கள் இறுதியில் பிளம்ஸ் பழத்தில் வடித்த வைன் போத்தலை வாங்கினேன். அல்ககோல் மற்றைய வைனிலும் அதிகம் இது உடலுக்கு நன்மையானது என்றும் அறிந்தேன். 

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.