- மொஹெஞ்சதாரோவில்  நடனமாடும் செப்புச் சிலை -


காஷ்மீர் பயணத்தைத் தொடங்கும் முன், நாங்கள் மிகப் பல முறை யோசித்தோம். பயண முகவரிடம் எங்களுடைய சந்தேகங்களை வெளிப்படுத்தினோம். அவர் கூறிய பதில் நமக்குக் கொஞ்சம் நிம்மதியைத் தந்தது:

“இதுவரை நிகழ்ந்த எல்லா தாக்குதல்களும் இந்திய ராணுவத்திற்கே எதிரானவை . உல்லாசப் பயணிகள் எப்போதும் பாதுகாப்பாக இருந்துள்ளனர். காஷ்மீரின் பொருளாதாரம், விவசாயத்திற்கு அடுத்ததாக உல்லாசப் பயணமே! நீங்கள் பயப்படத் தேவையில்லை. ”

இந்தியப் பயணத்தின் தொடக்கம்

அந்த நம்பிக்கையுடன், நாங்கள் இந்தியப் பயணத்தைத் தொடங்கினோம்.

புதுடெல்லி விமான நிலையம் வந்ததும், வழக்கமான விசா, சுங்கச் சோதனைகளை அரைமணி நேரத்துக்குள் கடந்து வெளியே வந்துவிட்டோம்.

நான் சிந்தித்தேன்:

“இது அவுஸ்திரேலியப் பாஸ்போர்ட்டின் சக்தியா? அல்லது இந்தியா இப்போது மாற்றமடைந்துவிட்டதா?”

நண்பர்கள் வருவதற்கு ஒரு நாள் முன்பாகவே டெல்கி சென்றிருந்ததால்  திட்டமிட்டிருந்த லக்ஷ்மி நாராயணன் கோயிலுக்குச் சென்றோம்.

பெரிய நிலப்பரப்பில் அமைந்த இந்த கோயிலின் கட்டிடக்கலை வடஇந்திய நாகரா (Nagara) பாணியைச் சேர்ந்தது. பிர்லா மந்திர் என்றழைக்கப்படும் இக்கோயிலின் அடிக்கல்லை மகாத்மா காந்தி நட்டி வைத்தார். அப்பொழுது அவர் கூறியது:

“எல்லா ஜாதியினரும் இங்கு வரலாம்.”

அதனால், இது ஒரு சமத்துவக் கோவிலாக மதிக்கப்படுகிறது.

மற்ற கோயில்களில் போல, கூட்டத்தில் இடித்துக்கொண்டு மற்றவர்களின் வியர்வை மணத்தை அனுபவிக்க வேண்டிய அவசியம் இங்கு இல்லை. தேவையான இடைவெளி, அமைதி, தூய்மை அனைத்தும் இங்கு காணப்பட்டது.

அங்கு நடந்த ஒரு சிறிய சம்பவம் எங்கள் பயணத்தில் புதியதாக இருந்தது:

சியாமளாவின் கையில் இருந்த எலக்ட்ரானிக் ஹெல்த் வாட்ச்—இதயத்துடிப்பைக் கணிக்கும் ஒரு கருவி—விமான நிலையத்திலும் விமானங்களிலும் எவரும் அகற்றச் சொல்லவில்லை.

அவருடைய இதயத்தில் பேஸ்மேக்கர் இருந்ததால், எப்போதும் கையால் மட்டுமே விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்படும். அத்துடன் இதயத் துடிப்பை அவதானிக்க இந்த கடிகாரம் பயன்படும் .ஆனால், லக்ஷ்மி நாராயணன் கோயிலில் மட்டும்”இந்தக் கடிகாரத்துடன் நீங்கள் உள்ளே செல்ல முடியாது” எனக் கூறப்பட்டது.

பாதுகாப்பு அதிகமாக இருந்தது.

சியாமளா கடிகாரத்தை காவலரிடம் ஒப்படைத்து உள்ளே சென்றார். நானும் பின்னே நடந்தேன்.

அந்தக் கணத்தில்,

“கடவுளுக்கே மனிதர்களைவிட அதிக பாதுகாப்பா?”

என்ற எண்ணம் மனதைக் கடந்து சென்றது.

புதுடெல்லி தேசிய அருங்காட்சியகம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்தபோது, புதுடெல்லியில் சில நாட்கள் தங்கியிருந்தேன்.

அப்பொழுது நேரமின்றி தவறவிட்ட இடம் ஒன்று—தேசிய அருங்காட்சியகம்—இந்தப் பயணத்தில் செல்வதற்குப் ஆவலுடன் இருந்தேன்.

மொஹெஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட 10.5 செ.மீ உயரமுடைய நடனமாடும் செப்புச் சிலையை ஒருநாள் நேரில் காண வேண்டும்   என்ற ஆவல் என் மனத்தில் பதிந்தது. இந்து சமவெளியில் இருந்து கிடைத்த இரண்டு சிலைகளில் ஒன்று பாகிஸ்தானுக்கு, மற்றொன்று இந்தியாவுக்குப் பங்கீடு செய்யப்பட்டன. சிலையின் வெளிவடிவத்தை சிம்லா அரச மாளிகையில் முதன் முதலில் பார்த்தபோதுதான் தெரிந்தது,  

4500 ஆண்டுகளுக்கு முன் செப்பில் வடிவமைக்கப்பட்ட அந்தச் சிறிய உருவம், நேரில் பார்த்தபோது அளவுக்கு மீறிய வியப்பை ஏற்படுத்தியது.

நளினமான உடலமைப்பு

வலது கை இடுப்பில் வைத்த நிலை

இடது கையில் தோள்வரை வளையல்கள்

தலைமீது பக்கமாகச் சுருண்ட கூந்தல்

பாதி திறந்த கண்கள்…

எல்லாமே நுணுக்கமாக உருவாக்கப்பட்டிருந்தன.

அதைப் பார்த்தவுடன்,”இப்படி ஒரு இளம் பெண் வாழ்ந்திருப்பாள்!”

என்பது மனத்தில் உறைந்தது.

அருங்காட்சியகத்தில் சிந்து நாகரீகத்தின் பண்டைய வாழ்வின் பல அடையாளங்களும் காணப்பட்டன:

விவசாயம்

பண்ணை வளர்ப்பு

வேட்டையாடுதல்

நகர அமைப்புகள்

கலையமைப்புகள்

வர்க்க அமைப்புகள்

அருங்காட்சியகம் பெரிதாக இருந்தாலும், எனக்கு தேவையான பகுதிகளை மட்டும் பார்த்தேன்.

வெளியே வந்தபோது,  நம் மூதாதையர்களை நெருக்கமாக அறிந்ததுபோல ஒரு மகிழ்ச்சி



தொடரும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.