காஷ்மீரின் இரண்டாவது நாள் எங்கள் பயணம், “சொன்மார்” (Sonamarg) எனப்படும் பிரதேசத்தை நோக்கி இருந்தது. ஶ்ரீநகரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதி, பெரும்பாலும் பனிப்பாறைகளால் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கும். வெயில் காலத்தில் பனிமலைச் சிகரங்கள் சூரிய ஒளியில் தங்கம் போல் மின்னுவதால் இதற்கு “சொன்மார்” — தங்கத்தாலான இடம் ( Golden meadow)— என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழியாக லடாக்கின் தலைநகரான லீ (Leh) செல்ல முடியும்; இது தற்போது இந்தியாவின் யூனியன் பிரதேசம். அங்கிருந்து சில்க் ரோடின் வழியாக திபெத்திற்குப் போகலாம். மறுபுறம் கார்கில் மலைப்பகுதி பிரசித்தம்; அந்த மலையின் மறுபக்கமே பாகிஸ்தான் எல்லை. எனவே, காஷ்மீர் நிலப்பகுதி இந்தியாவிற்கு ஒரு சுற்று மதில் போல அமைந்துள்ளது. இதனால் பாகிஸ்தானுடன் இணைவதோ அல்லது தனிநாடாக மாறுவதோ சாத்தியமற்றது என நினைத்தேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்நிலம், முன்னர் இந்துக்கள், இப்போது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர் — காஷ்மீரின் வித்தியாசத்திற்கு மத ரீதியான காரணங்கள் தர்க்கரீதியாக அமைந்தவையா என்று சிந்தித்தேன்.

அன்று, மழை காரணமாக நாங்கள் அதிக தூரம் செல்ல முடியவில்லை. வானம் இருண்டு, தூரத்தில் பனி படர்ந்த சிகரங்கள் மட்டும் தென்பட்டன. பாதைகள் தெளிவாகத் தெரியாததால், அடிக்கடி பனிச்சரிவுகள் ஏற்படும் இப்பகுதியில் எங்கள் பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மதிய உணவுக்குச் சென்றோம்.

மழை இடைவெளியில் கார் இறங்கி சுற்றிப் பார்த்தபோது, பனிகரைந்த நீரால் வெண்மையாக ஓடும் சிந்து நதி (Sind River) கண்ணில் பட்டது. இது பின்னர் ஜீலம் நதியாக (Jhelum River) மாறுகிறது. இங்கிருந்தே அமரநாத் யாத்திரை தொடங்குகிறது என அறிந்தோம். மலையை வெட்டிப் பாதை அமைத்துள்ளார்கள் — இது எல்லைப் பாதுகாப்பிற்கும், பனிக்கால சுற்றுலாவிற்கும் முக்கியமானது.

மூன்றாம் நாள், கடல் மட்டத்திலிருந்து 8,200 அடி உயரத்தில் உள்ள பிரபல பனிசறுக்கு மையமான “குல்மார்க்” (Gulmarg) சென்றோம். அங்கு பனி இல்லாதிருந்தாலும், மலைச் சிகரங்கள் வரை கேபிள் கார் செல்கிறது. ஆனால் அதற்கான முன்பதிவு பல நாட்களுக்கு முன்பே செய்ய வேண்டும். ஏற்கனவே கனடா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பலமுறை கேபிள் காரில் சென்றிருந்ததால், நாங்கள் நான்கு சக்கர மோட்டார் சைக்கிள் (Polaris quad bike) பயணத்தைத் தேர்ந்தெடுத்தோம். அந்தப் பகுதியில் ஏராளமான இந்திய இராணுவ முகாம்களும் இருந்தன.

போகும் வழியில் காஷ்மீர் கம்பளி தயாரிப்பு மற்றும் கிரிக்கெட் மட்டை உற்பத்தி ஆகியவற்றைக் காண நேரிட்டது. பிரித்தானியர்கள் கொண்டு வந்த வில்லோ மரங்கள் இங்கு செழித்து வளர்ந்து, காஷ்மீரில் தயாரிக்கப்படும் கிரிக்கெட் மட்டைகள் இந்த வில்லோ மரத்திலிருந்தே தயாரக்கப்படுகிறது  . என் பேரனுக்காக ஒன்று வாங்கலாமென நினைத்தபோது, ஆஸ்திரேலியாவில் மரப்பொருள் இறக்குமதி தடைகள் இருப்பது நினைவுக்கு வந்து, அந்த எண்ணத்தை கைவிட்டேன். மேலும் விலையும் அதிகமாக இருந்தது.

அடுத்துச் சென்ற இடங்களும் பனி படர்ந்த சமவெளிகளும், நீரோடைகளும் கொண்டவை. காஷ்மீர், இந்தியர்களுக்கு ஒரு கனவுலகப் பயணமாக இருப்பதால், தேன்நிலவு, குடும்ப விடுமுறை என ஏராளமானோர் வந்திருந்தார்கள். பல காஷ்மீரி இளைஞர்கள் சுற்றுலாத் துறையில் வேலை செய்து கொண்டிருந்தனர்

காஷ்மீர் செல்லும் முன்புவரை, சாப்ரான் பற்றி கேள்விப் பட்டதே இருந்தது; அங்கே போனபின் தான் அதை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு கிலோ சாப்ரானின் விலை 10,000 அமெரிக்க டாலர்கள் என்றபோது, இது உலகில் விலை மிகுந்த உணவு தயாரிப்புப் பொருள் என்பதில் ஐயமில்லை. நாங்கள் சென்ற காலம் பூக்கும் பருவம் இல்லாததால், ஒரு கடையில் சென்றபோது, அங்கே அதை இலவசமாக தேநீராக வழங்கினார்கள். என்னுடன் வந்தவர்கள், சியாமளா உட்பட, சிறிதளவு சாப்ரான் வாங்கிக் கொண்டார்கள்.

ஏன் இதன் விலை இவ்வளவு உயர்ந்தது என்று கேட்டபோது, உலகில் உற்பத்தியாகும் சாப்ரானின் 90% ஈரானில்தான் விளைகிறது என்று தெரிவித்தார்கள். ஆனால் காஷ்மீரின் சிவப்பு மண் அல்லாவின்  அருளால் தரப்பட்டது. அதனால்  எந்தப் பசளையும் இன்றி சாப்ரான் விளைகிறது. உண்மையில், காஷ்மீர் சாப்ரான் உலகிலேயே மிகத் தரமானதாகக் கருதப்படுகிறது.

ஒரு ஏக்கரில் சுமார் 1.2 கிலோ மட்டுமே விளைவிக்க முடியும். அதாவது, ஒவ்வொரு மலரின் சூலகத்தில் உருவாகும் மூன்று பெண் உறுப்புகள் (stigma) கைகளால் எடுக்கப்பட்டு, பிரித்து, காயவிடப்படுகிறது. பூவை எடுப்பது முதல் சூலகங்களை பிரிப்பது, காயவைத்தல் வரை அனைத்தும் கையால் செய்யப்படுவதால், உற்பத்தி மிகவும் கடினமானது. மேலும், காலநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

நாங்கள் வாங்கிய சிறிய குப்பியை மெல்போர்ன் சுங்கத்தில் வேலை செய்த பெண் அதிகாரி எதுவும் கேட்காமல் பார்த்துவிட்டு அனுமதித்தார்.

நாங்கள் சென்ற காலத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2019 புல்வாமா (Pulwama) தற்கொலை குண்டுவெடிப்பு நடந்த இடத்தை காட்டினார்கள். அப்போது 40 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதை பார்த்தபோது நமது ஊர் நினைவுக்கு வந்தது.

நான்காம் நாள் எங்கள் பயணம் பஹல்காம் (Pahalgam) நோக்கி இருந்தது. அது உண்மையான கோடை நாளாக இருந்தது. வழியில் ஒரு பெரிய உணவகத்தில் மதிய உணவுக்காக நிறுத்தினோம். அந்த உணவகத்தின் முன்புறம் எங்கோ பார்த்தது போல தோன்றியது. “முன்ஜென்மத்தில் வந்த இடமா? அல்லது கனவில் பார்த்த இடமா?” என்ற சந்தேகம் தோன்றியது.

உள்ளே சென்றபோது நடிகர் விஜயின் படம் இருப்பதை கண்டோம். விசாரித்தபோது, “பீஸ்ட்” (Beast) திரைப்படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்தது என்று கூறினர். அந்தப் படத்தை நான் ஏற்கனவே பார்த்திருந்ததால், “ஏன் கடை மாறியிருக்கிறது?” எனக் கேட்டேன். அவர்கள், படப்பிடிப்பு மூலம் கிடைத்த பணத்தில் கடையை புதிதாக அமைத்ததாகச் சொன்னார்கள். நாங்கள் தமிழர்கள் என்று அறிந்ததும், அவர்கள் அன்புடன் உபசரித்தார்கள். ஒரு இளைஞர் எங்களுடன் புகைப்படம் எடுத்தார்; அடுத்த நாள் பஹல்காம் சென்றபின், அவர் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலமறிந்தார்.

உண்மையில், மனிதர்கள் மதம், இனம் என்பவற்றைத் தாண்டி அன்பு காட்டுகிறார்கள்; ஆனால் பிற்காலத்தில் மதமும் இனமும் என்ற சுமை அவர்களைப் பிளவுபடுத்தி விடுகிறது.

காஸ்மீர் பயணத்தின் போது, ஒரு இடத்தில்  பள்ளத்தில் கூடாரங்கள் நிரம்பி இருப்பதை கண்டோம். வழிகாட்டியிடம் கேட்டபோது, “இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து வேலைக்கு வந்தவர்களின் தங்குமிடம்” என்று சொன்னார். அவரது வார்த்தைகளில் சிறிது இந்திய வெறுப்பு புலப்பட்டாலும், காஷ்மீரில் முன்னேற்றத்திற்கான பல செயல்கள் நடந்துள்ளன. அமைதி திரும்பினால், காஷ்மீர் ‘இந்தியாவின் சுவிட்சர்லாந்து’ ஆகும் என்பது நிச்சயம்.

காஷ்மீரிலிருந்து திரும்பும்போது, அங்குள்ள வீடுகள், விவசாயம், இயற்கையின் கொடைகள் — இவை அங்குள்ள மக்களுக்கு மட்டும் அல்ல, உலகிற்கே ஒரு வரப்பிரசாதம் என்று எண்ணினோம். ஆனால் சிலரின் செயலால், மக்களின் வாழ்வு சீரழிக்கப்படுகிறது என்ற வருத்தத்துடன் காஷ்மீரை விட்டு புறப்பட்டோம்.

முற்றும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.